

ஆர்வம் ஒரு நல்ல விஷயம்தான். ஆர்வம்தான் நம்மை பல ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. இருந்தாலும், ஆர்வத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியம். ஒரே சமயத்தில் பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தால் அவற்றில் எதைப் பற்றியும் நாம் அதிகம் கற்றுக்கொள்ள மாட்டோம். முதலில் நமக்கு அதிக ஆர்வம் உள்ள விஷயங்களைக் கண்டுபிடித்து அவற்றின் மீது கவனம் செலுத்துவது அவசியம். அத்துடன் அதைப் பற்றி நம்மால் முடிந்த அனைத்தையும் கண்டுபிடித்து அவற்றில் தேர்ச்சி பெற முயல வேண்டும்.
ஆர்வமாக இருப்பதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் நம் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. ஆனால், ஒரே சமயத்தில் ஏகப்பட்ட விஷயங்களில் ஆர்வத்தைக் காட்டினால் எதையும் உருப்படியாக நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. செய்யவும் முடியாது; தேர்ச்சி பெறவும் முடியாது.
ஆர்வம் என்பது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தது. இரவு முழுவதும் விழித்திருந்து தங்களுடைய கடமைகளைக் கூட செய்ய முடியாமல், சரியாக செயல்பட முடியாமல், அன்றாட நடவடிக்கைகளை பாதிப்பதாக இருந்தால் அந்த ஆர்வம் ஒரு கட்டுப்பாடற்ற போதை போல் மாறிவிடும். அதிகப்படியான ஆர்வம் ஆபத்தானது. அதற்காக எந்த விஷயங்களிலும் ஆர்வமே இல்லாமல் சன்னியாசி போல் பற்றற்று இருப்பதும் தவறு. புதிய அறிவை கற்றுக்கொள்ள, புதுப்புது விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் தேவை. ஆர்வம் இல்லையென்றால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. பிடிப்பு இருக்காது.
ஆர்வம்தான் நம்மை எதையும் ஆராயத் தூண்டுகிறது. தெரியாதவற்றை சிந்திக்கவும், புரிந்து கொள்ளவும் நம்மை ஊக்குவிக்கிறது. இது மனித குலத்திற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதிகப்படியான ஆர்வம் என்பது ஒருவரது மன அல்லது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றாலும் சரியான வழிகாட்டுதலுடன் கூடிய ஆர்வம் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது.
ஆர்வமுள்ள ஒரு விஷயத்தில் திறமை இல்லாமல்போனால் அது பயனற்றதாகி விடும். சில சமயங்களில் ஆர்வம் அதிகமாவதால் நம்மால் நேரத்தை முறையாக நிர்வகிக்க முடியாமல் போய்விடும். அத்துடன் அதற்கான தகுந்த திட்டமிடலும் இல்லாமல் நம்மைப் பின்தங்க வைத்து விடும். அதிகப்படியான ஆர்வம், ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி, மற்ற பொறுப்புகளை புறக்கணிக்கச் செய்து சிக்கலாக்கிவிடும். எனவே, ஆர்வம், திறமை மற்றும் வாய்ப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துவது அவசியம். நம்முடைய முக்கியப் பணிகளை புறக்கணிப்பதற்கு வழிவகுக்கும் அதிகப்படியான ஆர்வத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
அதிகப்படியான ஆர்வம் ஆபத்தானதாக மாறக்கூடிய சூழல்கள், நமக்குக் கவலை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தை உண்டாக்கும். ஒரு விஷயத்தின் ஆபத்துக்களை அறியாமல் அதன் மீது ஆர்வம் காட்டும்பொழுது உடல், மனம் இரண்டிற்குமே தீங்கு ஏற்படும். எனவே, ஆர்வத்தை ஒரு சாதகமான வழியில் திசை திருப்பி பயன்படுத்தவும், ஆபத்துக்களை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
அதீத ஆர்வத்தின் காரணமாக இடைவிடாத தகவல் தேடுதல் கவனத்தை சிதறடிக்கும். வேலை செய்யும் நினைவாற்றலை குறைக்கும் மற்றும் முடிவெடுக்கும் தரத்தையும் பாதிக்கும். எனவே, ஆர்வம் எப்போது உதவுகிறது, எப்போது ஆபத்தானது என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.