
ஃப்ளாட் வாங்கப் போறீங்களா ? கார்ப்பெட் ஏரியா, பில்ட்-அப் ஏரியா, சூப்பர் பில்ட்-அப் ஏரியா என்பது என்ன ? வாங்க தெரிஞ்சுக்கலாம்...
நம்மில் பலர் ஒரு அப்பார்ட்மெண்டில் ஃப்ளாட்டை வாங்கும் போது பல முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுவதில்லை. அப்படியே தெரிந்து கொண்டாலும் மேலோட்டமாகவே தெரிந்து கொள்ளுகிறோம். ஒரு சதுர அடியின் விலையை மட்டும் தெரிந்து கொண்டு ஒரு ஃப்ளாட்டை வாங்கி விடுகிறோம். ஆனால் ஒரு ஃப்ளாட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளும் முன்னால் சில அடிப்படை விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஃப்ளாட்டை விற்கும் கட்டுமான நிறுவனத்தினர் தங்களுடைய விளம்பரங்களில் கார்ப்பெட் ஏரியா மற்றும் பில்ட்-அப் ஏரியா என்ற இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுவார்கள். இந்த பதிவில் நாம் கார்ப்பெட் ஏரியா (Carpet Area) மற்றும் பில்ட்அப் ஏரியா (Built-up Area) மற்றும் சூப்பர் பில்ட்அப் ஏரியா (Super Built-up Area) பற்றிய அடிப்படைத் தகவல்களை எளிமையான முறையில் தெரிந்து கொள்ளுவோம்.
கார்ப்பெட் ஏரியா என்றால் என்ன ?
பல ஃப்ளாட்டுகளைக் கொண்டதே ஒரு அப்பார்ட்மெண்ட் (Apartment) எனப்படுகிறது. எளிதில் புரியும்படியாகக் கூற வேண்டுமென்றால் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் நீங்கள் வாங்கும் ஒரு ஃப்ளாட்டின் உட்புறத்தில் எங்கெல்லாம் கார்ப்பெட்டை விரிக்க முடியுமோ அந்த பகுதிகளின் கூட்டுத்தொகை அதாவது மொத்த சதுரஅடி கார்ப்பெட் ஏரியா (Carpet Area) எனப்படுகிறது. அதாவது ஒரு ஃப்ளாட்டிற்குள் நீங்கள் புழங்கும் பகுதிகள் அனைத்தும் கார்ப்பெட் ஏரியாவிற்குள் அடங்கிவிடும். இதை எப்படிக் கணக்கிடுவது என்பதைப் பார்ப்போம்.
கார்ப்பெட் ஏரியா = படுக்கை அறைகள் + ஹால் + சமையலறை + பூஜை அறை + பால்கனிகள் + கழிவறை மற்றும் குளியல் அறை – ஃப்ளாட்டிற்குள் உள்ள சுவர்களின் பரப்பளவு (Area Thickness of Walls).
படுக்கை அறைகள், ஹால், சமையலறை, பூஜை அறை, பால்கனிகள், கழிவறை மற்றும் குளியல் அறை இவற்றின் மொத்த பரப்பளவை அளந்து அதில் ஃப்ளாட்டிற்குள் கட்டப்பட்டுள்ள சுவர்களின் மொத்த பரப்பளவைக் கழித்தால் வரும் அளவே கார்ப்பெட் ஏரியா எனப்படும்.
ஃப்ளாட்டிற்குள் கட்டப்பட்டுள்ள சுவரானது அரைஅடி அகலமுள்ளதாகவோ அல்லது முக்கால் அடி அகலமுள்ளதாகவோ இருக்கலாம். உதாரணமாக பத்து அடி நீளத்திற்கு அரை அடி சுவர் என்றால் அந்த சுவரின் பரப்பளவு 10 ft x 0.5 ft = 5 Sq.Ft. இப்படியே மொத்த சுவர்களை அளந்து வரும் அளவை கார்ப்பெட் ஏரியா அளவில் கழித்தால் கிடைப்பது மொத்த கார்ப்பெட் ஏரியா (Total Carpet Area) அளவாகும்.
ஒரு ஃப்ளாட்டை வாங்கும் போது நீங்கள் ஒரு சிவில் எஞ்சினியரின் உதவியுடன் உங்கள் ஃப்ளாட்டின் கார்ப்பெட் ஏரியாவை அளந்து அளவானது சரியாக இருக்கிறது என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
பில்ட்அப் ஏரியா (Built-up Area) என்பது என்ன ?
ஒரு ஃப்ளாட்டின் பில்ட்அப் ஏரியா என்பது, அதன் கார்ப்பெட் ஏரியா மற்றும் ஃப்ளாட்டின் எல்லைகளாக நான்கு புறம் உள்ள சுவர் மற்றும் ஃப்ளாட்டிற்குள் அறைகளை பிரிக்க கட்டப்பட்டுள்ள சுவர்களின் பரப்பளவு இவற்றைக் கூட்டினால் வரும் மொத்த பரப்பளவாகும்.
பில்ட்அப் ஏரியாவானது (Built-up Area) 1000 சதுர அடி என்றால் அதில் கார்ப்பெட் ஏரியாவானது 700 சதுரஅடிக்கு மேல் இருக்காது என்பது ஒரு அடிப்படைத் தகவலாகும்.
சூப்பர் பில்ட்அப் ஏரியா (Super Built-up Area) என்பது என்ன?
ஒரு ஃப்ளாட்டின் பில்ட்அப் ஏரியா மற்றும் பொதுவான பயன்பாட்டுப் பகுதிகளான (Common Areas) படிக்கட்டுகள் (Staircase), காரிடார் (Corridor), லிப்ட் (Lift) என அனைத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் அளவானது 'சூப்பர் பில்ட்அப் ஏரியா' (Super Built-up Area) என அழைக்கப்படுகிறது.
ஒரு ஃப்ளாட்டை வாங்குவதற்கு முன்னால் அது தொடர்பான பல விஷயங்களையும் நன்றாகப் புரிந்து கொண்டு பின்னர் வாங்கினால் பல சிக்கல்களையும் மனஉளைச்சல்களையும் தவிர்க்கலாம். மகிழ்ச்சியாக நமது ஃப்ளாட்டில் நாம் வாழலாம்.