
வீட்டிலேயே மாடு வளர்த்து பசும்பால், எருமைப் பால் என குடித்த காலங்கள் தற்போது இல்லை. பாக்கெட் பால் நம் வசதிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றவாறு பல விதங்களில் தற்போது கிடைக்கின்றன. கவரில் அந்தப் பாலைப் பற்றிய விவரங்கள் இருக்கும். இருந்தும் பலருக்கும் ஸ்கிம்டு, டோன்ட் (tonned) என்று அந்தக் கவரில் இருப்பது பற்றி தெரியாமல் அதை நாமும் தினசரி உபயோகிப்போம்.
ஸ்கிம்டு, டோன்ட்டு போன்ற வார்த்தைகள் அதில் உள்ள கொழுப்புச் சத்தின் அடிப்படையிலும், சில சமயங்களில் அதில் கலக்கப்படும் வைட்டமின், மினரல்கள் மற்றும் பதப்படுத்திகள் தொடர்பாக வகைப்படுத்தப்படுகின்றன.
ஃபுல் க்ரீம் மில்க் அல்லது ஹோல் க்ரீம் மில்க்: இதில் ஆறு சதவிகித கொழுப்பு சத்து இருக்கும். இது பால் அருந்தும் சிறு குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு இது அவசியம் இல்லை. நாம் உண்ணும் உணவிலேயே நமக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் பெரியவர்களுக்கு இந்தப் பால் தேவைப்படாது.
டோன்ட் மில்க்: நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பால் வகை இது. இதில் மூன்று முதல் மூன்றரை சதவிகிதம் அளவு கொழுப்புச் சத்து இருக்கும். எனவே, இது அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற பால். பால், தயிர், வெண்ணைய் என எல்லா வகை பயன்பாட்டிற்கும் இதை உபயோகிக்கலாம்.
ஸ்டாண்டரைஸ்டு மில்க்: இதில் 4.5 சதவிகிதக் கொழுப்புச் சத்து இருக்கும். வீட்டில் உள்ள அனைவருக்கும் இது ஏற்றது. அனைத்து வயதினரும் இதைப் பருகலாம்.
டபுள் டோண்ட்டு மில்க்: இதில் கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு இருக்கும். பலரும் இதனை ஸ்கிம்டு மில்க் உடன் குழப்பிக் கொள்வர். இருந்தாலும் இது முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்டது அல்ல என்கின்றனர் பலரும்.
ஸ்கிம்டு மில்க்: இந்த வகை பாலில்தான் கொழுப்புச் சத்து முழுமையாக நீக்கப்பட்டிருக்கும். நூறு சதவிகிதம் முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்டால்தான் அது ஸ்கிம்டு மில்க் எனப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் இந்த வகை பாலைப் பயன்படுத்தலாம்.
இப்படிப் பல விதங்களில் பயன் தரும் பால் வகைகள் இருக்கின்றன. நம் தேவைக்கேற்ப நாம் அவற்றை உபயோகித்து உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம்.