
சீனாவில் உணவு உண்பது என்பது ஒரு அற்புதமான நிகழ்வாகும். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் உரையாடியபடி உணவு உண்பார்கள். தனிப்பட்ட முறையில் தொழில் ரீதியாகவும் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள அதை ஒரு வாய்ப்பாகக் கொள்வார்கள். உணவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்களுக்குள் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள்.
அனைவரும் சேர்ந்து உண்ணும்போதுதான் உறவுகள் மலர்கின்றன. உணவருந்தும் அறையின் அமைப்பைப் பொறுத்து அங்கு நுழைபவர்களின் உணர்வுகளும் அமையும் என்பது பொதுவாக அறிந்த விஷயம்தான். ஆதலால், அந்த அறை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து, ஃபெங் சுயியின் தாயகமான சீன நாட்டினர் கூறுவதை இந்தப் பதிவில் காண்போம்.
கதவு கீழ் திசையில் இருந்தால் அந்த அறையில் உண்பவர் நம்பிக்கையும், மனநிறைவையும் காண்பர். கதவு வடகிழக்கில் அமைந்திருப்பின் உந்துதலையும், குறிக்கோளையும் பெறுவர். தெற்கு பகுதி தவிர, மற்ற எந்தப் பகுதிகளிலும் கதவு அமைக்கலாம். தென்பகுதி சக்தியையும், உணர்ச்சியும் கட்டுப்படுத்துவது. தென்புற வாசலில் இருந்து அவ்வழியே உணவருந்த வருகிறவர் சாப்பாட்டின்போது ஓய்வாக உணர்வது கடினம். இந்த பாதிப்பை சரிசெய்ய காற்றில் ஒலிக்கும் மணி தொடரையோ (Chimes) ஒரு ஸ்படிகத்தையோ கதவுக்கு மேலாக தொங்க விடலாம். சாப்பாட்டு மேஜையை அமைதிக்குரிய வடதிசையில் போட வேண்டும் என்கிறது ஃபெங் சுயி.
அதேபோல், உணவு பரிமாறும் அறையின் கதவு எங்கே அமைக்கப்பட்டிருந்தாலும் கதவைத் திறந்ததும் அங்கே விசாலமான பரப்பு இருக்க வேண்டும். உள்ளே காலடி வைக்கும்போது ஒரு சுவர் எதிர்ப்படும் என்றால் அது உணவருந்த வருகிறவருக்கு அசௌகரிய உணர்வைத் தரும். அவரால் உண்ணும்போது இளைப்பாறலாக உண்ண முடியாது. ஒரு நிர்பந்த உணர்வை அடைவார் என்கிறார்கள். அதை மாற்றுவதற்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது தொலைவான இயற்கைக் காட்சி ஓவியம் ஒன்றை சுவற்றில் மாட்டி வைப்பது தகுந்த மாற்றமாக இருக்கும் என்கிறார்கள்.
வீட்டு நபர்கள் சேர்ந்து உண்பதாயின் அவரவர்க்குரிய ராசியான திசைகளில் நாற்காலி போட்டுக் கொள்ளலாம். கண்ணாடியை நான்கு சுவர்களில் மாட்டி வைத்தாலும் தவறு இல்லை. அது உணவின் தரத்தை உயர்த்திக் காட்டும் என்கிறது. அதேபோல், உணவு பரிமாறும் அறையின் கூரை முடிந்த அளவு உயரமாக இருக்க வேண்டும். அப்படி அந்த அறை எத்தனைக்கு எத்தனை பெரியதாகத் தோன்றுகிறதோ அவ்வளவு நல்லது. ஏனெனில், விசாலமான உணவுக்கூடம் என்பது செல்வ வளத்தை சங்கேத குறியாய் தெரிவிக்கும் ஒரு நிகழ்வு என்கிறார்கள்.
உணவருந்தும் இடத்தின் கூரை தாழ்வாக இருந்தால் அங்குள்ள உயிர் சக்தி உண்பவர்கள் மீது கடுமையாகத் தாக்குமாம். அதை மாற்றுவதற்கு சுவற்றில் விளக்குகளைப் பொருத்துவதுதான் நல்ல தீர்வு. அதனால் கூரைப் பகுதியும் பிரகாசமாகத் தெரியும் என்று கூறப்படுகிறது.
இப்படி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அறையிலும் அங்குள்ள இடர்பாடுகளை நீக்க எந்தெந்த பொருளை எங்கெங்கு வைத்தால் நன்மை பெறலாம் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது ஃபெங் சுயி.