
வீட்டில் தினசரி நாம் பயன்படுத்தும் பிரிட்ஜ் முதல் மைக்ரோவேவ், மெத்தை போன்றவற்றை சரியாகப் பராமரிக்காமலோ அல்லது சுத்தம் செய்யத் தவறினாலோ அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசும். நாள்பட்ட அழுக்கு மற்றும் கறைகளால் இவை ஏற்படுகின்றன. இது போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் துர்நாற்ற வீச்சத்தைப் போக்கவும், தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மெத்தை நாற்றம் நீங்க: கோடைக்காலமோ, மழைக்காலமோ படுக்கையில் இருந்து சில சமயம் துர்நாற்றம் வீசும். இதைத் தவிர்க்க மெத்தைகளில் பேக்கிங் சோடாவை தூவி, சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் அதை வாக்குவம் கிளீனர் உதவியுடன் சுத்தம் செய்தால் நாற்றம் போய்விடும்.
மைக்ரோவேவ் துர்நாற்றம் நீங்க: அழுக்கு படிந்த மைக்ரோவேவை சுத்தம் செய்ய பாதுகாப்பான பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் எலுமிச்சை சாறு சிறிது சேர்க்கவும். இப்போது பாத்திரத்தை உள்ளே வைத்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் டைமரில் இயக்குவதன் மூலம் துர்நாற்றம் போய்விடும்.
கம்பளத்தில் நாற்றம் போக: கம்பளத்தில் வீசக்கூடிய துர்நாற்றத்தை சமாளிக்க சிறிதளவு எண்ணெய்யுடன் சில துளிகள் வினிகர் கலந்து பாட்டிலில் ஊற்றி ஒரு ஸ்ப்ரே தயாரித்து இவற்றை சம்பளத்தின் மீது தெளிப்பதன் மூலம் துர்நாற்றம் போய்விடும்.
குப்பைத் தொட்டியின் துர்நாற்றம் போக: குப்பைத் தொட்டியின் அடியில் பேப்பரில் பேக்கிங் சோடாவை போட்டு விட்டால் அதிலிருந்து வெளியே வரும் துர்நாற்றம் போய்விடும்.
ஃபிரிட்ஜ் துர்நாற்றம் போக: குளிர்சாதன பெட்டியின் துர்நாற்றம் போக ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை தண்ணீரில் நிரப்பி வைக்கலாம் அல்லது எலுமிச்சம் பழம் பிழிந்த தோலை ஃபிரிட்ஜின் உள்ளே வைத்தால் துர்நாற்றம் போகும்.
வடிகால் துர்நாற்றம் நீங்க: மழை நாட்களில் வடிகால் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த துர்நாற்றத்தைப் போக்க பேக்கிங் சோடா வினிகரை சூடான நேரில் கலந்து பின் அந்த கலவையை வடிகாலில் ஊற்றலாம் அல்லது பினாயிலை நீர் கலந்து ஊற்றினால் நாற்றம் நீங்கும்.
காலணி துர்நாற்றம் நீங்க: காலணிகளில் வெளிப்படும் வலுவான துர்நாற்றத்தைப் போக்க, காலணிகளின் உள்ளே செய்தித்தாள்களை நிரப்பி, தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் சேர்த்தால் துர்நாற்றம் நீங்கி விடும்.