
உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ உடல் நலம் குன்றி மருத்துவமனையிலோ அல்லது அவரது இல்லத்திலோ இருக்கும்போது அவரைக் காணச் செல்லும்போது நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. உடல் நலம் சரியில்லாதவரை மருத்துவமனையில் அல்லது அவரது வீட்டில் உடல் நலம் விசாரிக்க நீங்கள் செல்லும்போது அவர்களிடம் அதிகமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
2. அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரிடமாவது அவரது உடல் நிலை குறித்த விவரங்களை மேலோட்டமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
3. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களிடம், அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் வகையில் எதையும் பேசக் கூடாது.
4. உடல் பிரச்னை இருந்தால் ஒருவருக்கு அவரது மனமும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் நோயின் தாக்கம் குறித்து அவரிடம் விரிவாக உரையாடக் கூடாது. ஏனெனில், அவரது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்தினர் சில விஷயங்களை அவருக்குத் தெரியப்படுத்தாமல் இருக்கலாம்.
5. ஒருவரின் உடல் பிரச்னை பற்றியோ அல்லது அவரது நோயின் தாக்கம் குறித்தோ எதிர்மறை எண்ணங்கள் கொண்ட பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
6. உணவு இடைவேளையின்போது செல்ல நேர்ந்தால், அவரிடம் சுருக்கமாக நலம் விசாரித்து விட்டு, அவர்கள் உணவருந்த இடையூறு இல்லாமல் இருக்கலாம்.
7. உடல் நலம் பாதிக்கப்பட்டவரைக் காணச் செல்லும்போது நாமே அவருக்கு மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது. ஏனெனில், மருத்துவர் நோயாளிகளுக்கு அவரது உடல் நிலைக்கு ஏற்றாற்போல்தான் மருந்துகளை பரிந்துரைத்திருப்பார்.
8. மருத்துவமனைகளுக்கு குழந்தைகள் மற்றும் வயதில் பெரியவர்களை அழைத்துச் செல்வதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
9. உடல் நலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் அவரது மருத்துவச் செலவுகள் குறித்து அறிய முயற்சிக்கக் கூடாது.
10. நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு கூட்டமாக செல்வதைத் தவிர்க்கலாம்.
11. அதிக சத்தத்துடன் பேசுவது மற்றும் கைபேசி பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்கலாம்.
12. நோயின் காரணமாக ஏற்பட்ட எதிர்மறை நிகழ்வுகளை அவர்களிடம் கூறக் கூடாது. அது, அவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
13. உடல் நலம் பாதிக்கப்பட்டவரைக் காண இரவு நேரங்களில் செல்ல நேர்ந்தால், முடிந்த அளவு சுருக்கமாக நலம் விசாரித்து விட்டு வந்து விடலாம். அது அவர்களின் இரவு உணவுக்கோ அல்லது உறக்கத்திற்கோ இடையூறு விளைவிக்காமல் இருக்கும்.
14. மருத்துவர் அல்லது மருத்துவமனை பற்றியோ, நோயாளியிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ நம் கருத்துகள் எதையும் பகிரக் கூடாது.
15. உங்கள் விசாரணை உடல் நலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்பதை அறிவதற்கான மனப்பான்மையோடு இருந்தால் அது நலம் பயக்கும்.