
குழந்தை பிறந்த ஆர்வத்தில் உற்றார் உறவினர்கள் குழந்தையை பார்க்க வரும்பொழுது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
உறவினர்களும் நண்பர்களும் குழந்தை பிறந்த செய்தியை கேட்டவுடன் அவர்கள் தங்கி இருக்கும் ஆஸ்பத்திரிக்கு படையெடுப்பார்கள். அப்போது அளவுக்கு அதிகமாக பார்க்க வருபவர்களை ஆஸ்பத்திரியில் இருக்கும் செக்யூரிட்டி நேர காலத்தைக் கூறி இவ்வளவு நேரம்தான் பார்க்க வேண்டும் என்று அனுமதி கொடுத்தால் அதன்படி நடந்துகொள்வது நல்லது. அதை விடுத்து அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தால் தாய்க்கும், சேய்க்கும் இடையூறாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு நடப்பது நல்லது.
ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் குழந்தை குட்டிகளுடன் செல்வதை தவிர்ப்பது அவசியம். அப்படியே அழைத்துச் சென்றாலும் அதன் வளாகத்தில் சத்தம் போட்டு விளையாட விடாமல், குழந்தையை தூக்கி கொஞ்சியே தீருவேன் என்று அடம் பிடிக்காத படிக்கும், பிரசவித்தவர்கள் இருக்கும் அறையில் கத்தி கூச்சல்போட அனுமதி கொடுக்காமல் அழைத்து வந்துவிடுவது அவசியத்திலும் அவசியம்.
மேலும் பிறந்த குழந்தையின் கையில் பணத்தைக் கொடுத்தே தீருவேன் என்று அடம் பிடிப்பதை பெரியவர்களும் தவிர்ப்பது நலம். அப்படி கொடுக்கும் எந்தப் பரிசையும் குழந்தைகள் கையில் திணிக்காமல் குழந்தையின் தாயாரிடமோ, அவர்களைச் சார்ந்த உறவினர்களிடமோ கொடுத்துவிடுவது நல்லது. இதனால் பிறந்த புத்தம் புது மலரான குழந்தைக்கு எந்தவிதமான தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அளவுக்கு அதிகமான அனுபவ அட்வைஸ்களை அங்கு அள்ளி வீசாமல் இருப்பது நல்லது. இதனால் பிரசவித்த பெண்ணும் அவரைச் சார்ந்தோரும் குழம்பி போகாமல் இருப்பதற்கு வழி வகுக்கும். அவர்களாக கேட்டால் மாத்திரம் சரியான பதிலை சொல்வது அவர்களின் குழப்பத்தை தீர்ப்பதற்கு சரியான சந்தர்ப்பமாக அமையும்.
குழந்தையின் முகத்தைப் பார்த்து இது இன்னாரை போல் இருக்கிறது என்று அழுத்தி சொல்லாமல் இருப்பது அவசியம். இதனால் குடும்பத்தில் குழப்பம் வராமல் தடுக்கலாம்.
விசிட்டர்களின் வருகை அதிகமாக இருப்பதால் இளம் தாய்மார்கள் குழந்தை அழுதாலும் அதைத் தூக்கி பசியாற்றுவதற்கு சங்கடப்பட்டு கொண்டு வெளியில் சொல்லவும் முடியாமல், மனதிற்குள் வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிப்பார்கள். அதைப் புரிந்துகொண்டு சீக்கிரமாக அவர்களைப் பார்த்துவிட்டு வெளியில் வருவது நல்ல மேனர்சாக மதிக்கப்படும்.
அவர்கள் வீட்டில் முதல் குழந்தை இருந்தால் அதன் கையில் ஏதாவது ஒரு பரிசு பொருளை கொடுத்துவிட்டு பிறகு பிறந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டியதை கொடுங்கள். இதனால் மூத்த குழந்தையின் மனது அமைதியுறும். அதற்கு இரண்டாவது குழந்தையைப் பார்த்து பொறாமை வராமல் இருக்கும். அதேபோல் மூத்த குழந்தையையும் பாராட்டி கொஞ்சிவிட்டு அடுத்த குழந்தைத் தூங்குங்கள்.
வீட்டில் உள்ளவர்கள் குழந்தையை படுக்க வைக்கும் இடத்தில் வெளிர் நிற துணி அல்லது வெள்ளை துணியை விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்தால் எறும்பு ஏதாவது பூச்சிகள், கொசு போன்றவை அங்கு சுற்றிக்கொண்டிருந்தால் கண்டுபிடிப்பதற்கும் வசதியாக இருக்கும். குழந்தை அழுதால் உடனே ஏன் அழுகிறது என்பதும் புரிந்துவிடும்.
பிறந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தால் அதை கொஞ்சுகிறேன் என்று விழிப்பு காட்டாமல் இருப்பது அவசியம். இதுபோல் சில விஷயங்களை கையாளும் பொழுது தாயும் சேயும் நலமுடன் இருப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.