
கல்லூரி, அலுவலகம், வீட்டைச் சுற்றி உள்ளவர்கள், பேருந்து, ரயிலில் தினமும் உடன் பயணிப்பவர் என பலருடனும் தினமும் பழகுகிறோம், பேசுகிறோம். அவர்கள் உண்மையான நபர்களா அல்லது ஃபேக்கான போலி நபர்களா என்பதை கண்டறிய உதவும் 12 உபயோகமான டிப்ஸ்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. பொய்யான போலிப் புன்னகை;
போலி நபர்கள் புன்னகைக்கும்போது அது உண்மையாக இருக்காது. அது போலித்தனமான பொய் புன்னகையாகும். பிறரை மகிழ்விப்பதற்காக வெறுமனே புன்னகை செய்வார்கள். அது ஜீவனின்றி இருக்கும். கண்களில் சிரிப்பு இருக்காது.
2. இனிக்க இனிக்கப் பேசுவது;
போலி நபர்கள் இனிக்க இனிக்கப் பேசுவார்கள். அது மிகவும் செயற்கையாக இருக்கும். தேவைக்கு அதிகமாக புகழ்வார்கள். காரியம் முடிந்ததும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
3. நேர்மையற்ற நடத்தை;
இவர்கள் பேசுவது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள். செய்யும் செயல்களில் நேர்மை இருக்காது.
4. வதந்தி பரப்புதல்;
இவர்கள் உங்களிடம் பிறரைப் பற்றி குறைசொல்லி பேசுவார்கள். அதேபோல பிறரிடத்தில் உங்களைப் பற்றி குறைசொல்லி பேசுவார்கள். தேவையற்ற வதந்திகளை பரப்புவார்கள்.
5. அனுதாபம் இருக்காது;
பிறர் மேல் துளி அளவும் பச்சாதாபமோ அனுதாபமோ இருக்காது. சிறிதும் இரக்கமின்றி நடந்து கொள்வார்கள்.
6. பொறுப்பற்றவர்கள்;
எந்த செயலையும் செய்து முடிக்கிறேன் என்று பொறுப்பெடுத்துக்கொள்ள மாட்டார்கள். வாய்ப் பேச்சோடு சரி. செயலில் ஏதும் இருக்காது.
7. பொய்யான வாக்குறுதி;
‘நான் இதைச் செய்கிறேன், அதை செய்து தருகிறேன்’ என்று ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள். ஆனால் எதுவும் செய்யமாட்டார்கள்.
8. ஆழமற்ற உறவுகள்;
அவர்களது நட்பிலும் உறவிலும் எந்தவிதமான அர்த்தமும் இருக்காது, ஆழமும் இருக்காது. அர்த்தமற்ற உரையாடல்கள் மட்டுமே இருக்கும். அவர்களது தொடர்புகள் மேலோட்டமாக சுயநலமாக இருக்கும்.
9. பொருந்தாத உடல் மொழி;
அவர்களுடைய வார்த்தைகள் உடல் மொழியுடன் ஒத்துப் போகாமல் இருக்கும். கண்ணைப் பார்த்து பேசமாட்டார்கள். அந்த உடல் மொழியே அவர்களது நேர்மையற்ற தன்மையை வெளிப்படுத்திவிடும்.
10. பிறரை தாழ்த்துதல்;
தன்னை உயர்ந்தவராக காட்டிக்கொள்வதற்காக பிறரை மிகவும் தாழ்த்திப் பேசுவார்கள். அவர்களை மட்டமாக நடத்துவார்கள்.
11. கேட்கும் திறன் இல்லை;
போலியான நபர்கள் பெரும்பாலும் பிறர் பேசும்போது கேட்பதுபோல நடிப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய முறை வருவதற்காக காத்திருக்க மாட்டார்கள். போதே குறுக்கிட்டு தான் சொல்ல வருவதை அழுத்திச் சொல்வார்கள். பிறர் பேசுவதை கண்டுகொள்ள மாட்டார்கள்.
12. பெருமை அடித்து கொள்ளுதல்;
தாங்களே தங்களை ஆகா ஓஹோ என்று புகழ்ந்து பேசிக்கொள்வார்கள். அளவுக்கு அதிகமாக சுய தம்பட்டம் அடிப்பார்கள். பிறரைக் கவரவேண்டும் என்பதற்காக இல்லாதவற்றையெல்லாம் சொல்வார்கள். அவற்றில் 80 சதவீதத்திற்கு மேல் உண்மை இருக்காது.
இந்த 12 குணங்களை உடைய நபர்களிடம் நெருங்கிப் பழகக்கூடாது. தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். எனவே இவர்களை தவிர்த்தல் நலம் அல்லது மிக மிக அளவோடு பழகுதல் நன்று.