- அனிஷா வி.எஸ்.
இன்று வேகமாக இயங்கி வரும் உலகில் கல்வி முறையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பள்ளிக்கூடங்கள், ஆன்லைன் வகுப்புகள், கணினி மூலம் கற்றல் என பல்வேறு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்குத் திறமையை வளர்க்கும் சிறந்த கல்வி தேவை என்று நினைக்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வி எல்லா குழந்தைகளுக்கும் சரியாக அமையுமா? என்பது ஒரு கேள்வியாக உள்ளது.
சிலர் விரைவாகவும், சிலர் மெதுவாகவும் கற்றுக்கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒப்பில்லாத விதத்தில் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால், ஒரே மாதிரியான பள்ளிக் கல்வி முறை எல்லாருக்கும் பொருத்தமாக இருப்பதில்லை.
இந்த நிலையில், வீட்டு கல்வி (Home schooling) என்பது பலருக்கும் சிறந்த மாற்று வழியாக பயன்படுகிறது. ஆனால், இந்த வீட்டு கல்வி முறை (Home schooling) okva? அதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.
தனிநபர் கவனம் கிடைக்கும்:
பள்ளிகளில் ஒரு ஆசிரியர் பல மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பாடம் நடத்துகிறார். ஆனால் வீட்டு கல்வியில் ஒரு குழந்தைக்கு நேரடியாக, தனிப்பட்ட கவனம் வழங்க முடியும். இது குழந்தையின் தேவைகளுக்கேற்ப பாடங்களை வடிவமைக்க உதவுகிறது.
விருப்பப்படியான கற்றல்:
எல்லா குழந்தையையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. சிலருக்கு கணிதம் பிடிக்கும், சிலருக்கு வரலாறு, அறிவியல். வீட்டு கல்வியில், குழந்தையின் விருப்பத்தையும் திறமையையும் புரிந்துகொண்டு, அந்த வகையில் பாடங்களை கற்று கொடுக்கலாம்.
குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பு:
வீட்டு கல்வியின் மூலம், பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிட்டு, அன்பைப் பகிர்ந்து கொள்ள முடியும். இது குழந்தையின் மனநிலைக்கு ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வாழ்க்கை கற்றல்:
வீட்டு கல்வியில், பாடங்களை இயற்கை, பயணம், சமையல், விவசாயம் போன்ற வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்து கற்றுக்கொடுக்கலாம். இது புத்தக பூச்சியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை நேரடியாக கற்றுக்கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
தனிப்பட்ட பாடத்திட்டம்:
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை மற்றும் விருப்பங்கள் உண்டு. வீட்டு கல்வி மூலம் குழந்தையின் திறனுக்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றிக்கொள்ள முடியும். இது குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி அந்த பாடத்தில் கவனம் செலுத்த உதவும்.
சுயக் கட்டுப்பாடும், பொறுப்பும் வளரும்:
வீட்டிலிருந்து கல்வி பெறும் குழந்தைகள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, பொறுப்புடன் செயல்படக் கற்றுக்கொள்கிறார்கள். இது அவர்களை எதிர்கால வாழ்க்கைக்கு தயாராக்குகிறது.
திறன்களை மேம்படுத்தும் வாய்ப்பு:
குழந்தைகளுக்கு இசை, நடனம், ஓவியம், தொழில்நுட்பம் போன்ற பன்முக திறன்கள் இருந்தால், அவற்றில் நேரம் செலுத்தும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும். பள்ளி நேரத்தை வீணாக்காமல், பயனுள்ள திறன்களை மேம்படுத்த முடியும்.
மன அழுத்தம் குறையும்:
தேர்வுகள், மதிப்பெண் போட்டிகள் போன்ற மன அழுத்தங்கள் கொடுக்கும் சூழல் வீட்டு கல்வியில் குறைவாக இருக்கக்கூடும். அவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையோடு நிம்மதியாக கற்றுக்கொள்ள முடிகிறது.
வீட்டு கல்வி என்பது ஒரு சவாலான முடிவாக இருக்கலாம். ஆனால், அது குழந்தையின் வாழ்க்கையை மாற்றும் நல்ல வாய்ப்பாகவும் இருக்கக்கூடும்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்திறன் கொண்டவர்களே. அதனால், அவர்களுக்கு பொருத்தமான கல்வி முறையை பெற்றோர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த நடைமுறை உங்கள் பிள்ளைக்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து, தேவையான நேரத்தில், சரியான முடிவை எடுக்க வேண்டும். கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒரு பயணம். அது எங்கு தொடங்குகிறது என்பது முக்கியமல்ல, எப்படி செல்கிறது என்பதுதான் முக்கியம்.