
வேலை, கல்வி போன்ற காரணங்களுக்காகப் பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கும் வாடகை வீடுதான் புகலிடமாக இருக்கிறது. ஆனால், "வீட்டின் உரிமையாளர்" என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிலர் வாடகைக்குக் குடியிருப்போரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதும், திடீரென வீட்டைக் காலி செய்யச் சொல்லி அழுத்தம் கொடுப்பதும் பரவலாக நடக்கிறது.
சில சூழல்களில் சட்டரீதியான உரிமைகள் பற்றித் தெரியாததால், பல வாடகைதாரர்கள் மௌனமாகத் துன்பங்களைச் சகித்துக்கொள்கிறார்கள். இந்தியச் சட்டம் வாடகைதாரர்களுக்கு வழங்கியுள்ள முக்கியப் பாதுகாப்பு அம்சங்களையும், உரிமைகளையும் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம்.
உங்கள் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமை:
ஒரு வீட்டை நீங்கள் வாடகைக்கு எடுத்த பிறகு, அந்த இடத்தின் மீதான முழுமையான தனிப்பட்ட உரிமையும் உங்களுக்குக் கிடைக்கிறது. வீட்டு உரிமையாளர், அது தன் சொந்த வீடாகவே இருந்தாலும், உங்கள் அனுமதியின்றி அல்லது முன்னறிவிப்பு இன்றி வீட்டிற்குள் நுழைய அவருக்கு உரிமை இல்லை.
பழுதுபார்ப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக அவர் வர விரும்பினால், உங்களுக்குத் தகவல் தெரிவித்து, உங்கள் சம்மதத்தைப் பெற்ற பிறகே உள்ளே வர வேண்டும். அனுமதியின்றி நுழைவது உங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் ஒரு சட்டவிரோதச் செயலாகும்.
எழுத்துப்பூர்வ ஒப்பந்தம்:
வாடகைதாரரின் மிக முக்கியமான பாதுகாப்பு அரண், எழுத்துப்பூர்வமான வாடகை ஒப்பந்தம்தான். 11 மாதங்களுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருந்தால், சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தத்தைப் பெறுவது கட்டாயமாகும். வெறும் காகிதத்தில் கையால் எழுதியோ அல்லது பதிவு செய்யப்படாத ஒப்பந்தத்தையோ நம்பி இருக்க வேண்டாம். ஏனெனில், பிற்காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தை அணுக நேர்ந்தால், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் மட்டுமே செல்லுபடியாகும். அதுவே உங்கள் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கும்.
திடீரென வெளியேற்றுவதற்கு எதிரான பாதுகாப்பு:
வாடகைதாரர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சம், திடீரென வீட்டைக் காலி செய்யச் சொல்வதுதான். வாடகை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது உரிமையாளருடன் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலோ கூட, உங்களை ஒரே இரவில் வெளியேற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை.
இந்தியச் சட்டப்படி, ஒரு வாடகைதாரரை வெளியேற்றுவதற்கு முறையான சட்ட வழிமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டும். பொதுவாக, வீட்டைக் காலி செய்யச் சொல்வதற்கு முன், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் (Notice Period) வழங்கி, முறையான அறிவிப்பு கொடுக்க வேண்டும். இந்த அறிவிப்பு இல்லாமல் உங்களை வெளியேறச் சொன்னால், நீங்கள் அதை எதிர்த்து சட்ட உதவியை நாடலாம்.
ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் வாடகைக்கு ரசீது பெறுவது உங்கள் அடிப்படை உரிமை. எதிர்காலத்தில் வாடகைப் பாக்கி போன்ற தேவையற்ற சர்ச்சைகள் எழும்போது, இந்த ரசீதுகள் நீங்கள் வாடகையை முறையாகச் செலுத்தியுள்ளீர்கள் என்பதற்கான முக்கிய ஆதாரமாக விளங்கும்.
இது தவிர, கட்டிடத்தின் பெரிய அளவிலான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளை வீட்டு உரிமையாளர்தான் ஏற்க வேண்டும். மேலும், பல மாநிலங்களில் உள்ள வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின்படி, வீட்டு உரிமையாளர் தனது விருப்பம் போல வாடகையை உயர்த்த முடியாது.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உங்கள் உரிமைகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது, வீட்டு உரிமையாளருடன் ஒரு சுமூகமான உறவைப் பேணவும், தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவும்.