
தற்காலத்தில் நம் வீட்டுக் குழந்தைகளிடம் நாமே செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறோம். ஆனால், செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் எவ்வளவு பேராபத்துக்கள் பிற்காலத்தில் அவர்களுக்குக் காத்திருக்கிறது என்பதை நீங்கள் என்றைக்காவது உணர்ந்து இருக்கிறீர்களா? இந்த நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சில பெற்றோர்கள் தக்கள் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட் போன்கள் மூலம் அதிக தகவல்களை அவர்கள் தெரிந்துக்கொள்வதாகவும் நினைக்கின்றனர்.
இன்னும் சிலர் தங்கள் குழந்தைகள் அடம் பிடிக்காமல் இருக்கவும், சாப்பிடுவதற்காகவும் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதில் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது குழந்தைகளின் மூளையின் செயல்திறனையும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
சமீப காலமாகவே குழந்தைகள் அதிக அளவு செல்போன் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் செல்போன் பார்ப்பது சுமார் 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகளின் மன நலன், உடல் நலம், பெற்றோர்களின் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து பல கேள்விகளை முன்வைத்துள்ளது.
குழந்தைகள் மத்தியில் செல்போன் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பல்வேறு உடல் நல மற்றும் மன நல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது அவர்களின் மூளையை மிக கடுமையாக பாதிக்கும் என்றும், இந்த பாதிப்புகளின் தாக்கம் நீண்ட நாட்கள் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது குழந்தைகளின் மூளையில் வேதியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மூளையின் செயல்திறன் சமனற்று இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி ஸ்மார்ட் போன் பயன்பாடு மூளையில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் நிலையில், குழந்தைகளுக்கு இயல்பாக வரும் யோசனைகள் மற்றும் நினைவாற்றலை அது கடுமையாக பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, ஸ்மார்ட் போன் மூலம் அதிக சத்தத்தை விரும்பும் நபராக நீங்கள் இருந்தால் விரைவில் உங்களுக்குக் காது கேட்காமல் போகலாம்! எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மன நலன் மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாமல் குழந்தைகளைப் பாதுகாப்பாது மிகவும் அவசியமாகிறது.
இத்தனை பெரிய ஆபத்துகள் உங்கள் குழந்தைகள் கையில் செல்போனை கொடுப்பதால் உண்டு என்பதை இனியாவது உணருங்கள். குழந்தைகளுக்குப் புரியாது. நீங்கள் புரிந்து கொண்டால் சரி. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் அக்கறையிலும் கவனத்திலும்தான் உள்ளது.