
பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவும், ஒரு செயலுக்கு விளக்கம் தரவும் சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து அறிவுரையையும் சொல்லும். கிராமப்புறங்களில் ஒருசில செய்கையை குறிக்கவும், அதன் மூலம் கருத்து சொல்லவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள் பழமொழிகளை சொல்லி வைத்தனர். பழமொழிகள் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை.
1. குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்: நம்முடைய தகுதிக்கும் வசதிக்கும் தகுந்ததுதான் கிடைக்கும் என்னும் அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. குருவிக்கும் ராமேஸ்வரத்திற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லையே. 'குறி வைக்க தப்பாது ராமசரம்' என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை சென்றடையும் என்பதே இதன் பொருள். இதுவே நாளடைவில் மருவி 'குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்' என்று கூறப்படுகிறது.
2. சோழியன் குடுமி சும்மா ஆடாது: சோழியன் என்பது பிராமண சமுதாயத்தின் ஒரு பிரிவு. பொதுவாக, பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பார்கள். ஆனால், சோழியன் பிரிவை சேர்ந்தவர்கள் மலையாள நம்பூதிரியைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும்படி முன்குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன் பக்கத்தில் அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக இருக்க முடியாது. 'சும்மாடு' என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியை சுருட்டி வைத்துக்கொண்டு அதன் மேல் சுமையை வைத்து தூக்குவார்கள். முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடு போல் ஆகாது. அதாவது சும்மாட்டுக்கு இணையாகாது. அவர்களும் சுமை தூக்கும்பொழுது சும்மாடு வைத்துதான் தூக்க வேண்டும். ‘சோழியன் குடுமி சும்மாடு ஆகாது’ என்பதுதான் இப்படி மருவியுள்ளது.
3. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லை காணோம்: இது ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகையும் பெருமையையும் காண்பவர்களுடைய பார்வையைப் பொறுத்தே உள்ளது என்பதை விளக்கும் வகையில் அமைந்த பழமொழியாகும். ஆனால், இப்பொழுது நாயைக் காணும்போது அதை அடிப்பதற்கு கல்லை காணோம் என்றும், கல்லைக் காணும் பொழுது நாயை காணவில்லை என்னும் பொருள்பட கூறப்படுகிறது. பைரவரின் வாகனமாக நாயை பார்க்கும்பொழுது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும்போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவும் தெரியும். அதாவது, பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்தே எதுவும் உள்ளது என்பதைக் குறிக்கிறது.
4. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்: இது இன்று தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. உண்மையில் இதன் பொருள் என்னவென்றால், அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பதே. வள்ளல் ஆனவரை நாம் கஞ்சனாக மாற்றிவிட்டோம்.
5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு: நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு என்பதே சரியானது. சந்தையில் மாட்டை வாங்கும்பொழுது அது பதிக்கும் தடம் சுவடு எனப்படும். அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டைப் பார்த்தாலே மாட்டின் பலம் நன்கு புலனாகும். இதுவே நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று தவறாகக் கூறப்படுகிறது.
6. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்: பெரும்பாலானவர்கள் ஊரில் உள்ள குழந்தைகளை தன் குழந்தை போல் வளர்த்தால், தன்னுடைய குழந்தை தானாகவே வளரும் என்று தவறான விளக்கம் கொள்கிறார்கள். உண்மையில் இதன் பொருள் என்னவென்றால் ஊரார் பிள்ளையாகிய தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது, நல்ல பணிவிடைகள் செய்து, அவளின் மனம் நோகாமல் தேனும், பாலும், பழங்களும், உணவும் கொடுத்து ஊட்டி வளர்த்தால், வயிற்றில் இருக்கும் தனது குழந்தை தானே வளரும் என்பதை உணர்த்தும் பழமொழியாகும்.