கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - கற்க வேண்டியவற்றைப் பிழையில்லாமல் கற்று, அவ்வாறு கற்றபின், கற்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று கல்விக்கு ஆழமான விளக்கம் அளித்தார் திருவள்ளுவர். பிச்சை புகினும் கற்கை நன்றே! என இன்னும் அழுத்தமாக கல்வியை வலியுறுத்தினர் ஆன்றோர். அப்படியிருக்கையில் நாம் கற்கும் கல்வியானது நம் வாழ்வியலுக்கு எவ்வளவு தூரம் உறுதுணையாக இருக்கிறது என்று கேட்டால் பதில் கூறுவது சிறிது தயக்கமே !
சமீபத்தில் தோழி ஒருவரின் மகள் படிக்கும் பள்ளிக்கு பொது பிரார்த்தனை கூட்டத்திற்காக சென்றிருந்தோம்! முதல் வகுப்பு பயிலும் மாணவர்களை எல்லாம் ஒன்றாக அமர வைத்து அந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். அந்நிகழ்வில் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்கள், திருக்குறள், ஐம்பெரும் ஐஞ்சிறு காப்பியங்கள், ஆங்கிலத்தில் இலக்கண வகைகள், கணிதத்தில் வாய்ப்பாட்டு வகைகள் மற்றும் மாதங்களின் வகைகள் இப்படி எவ்வளவோ நிகழ்வுகளை ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆசிரியர்கள் கேட்க கேட்க மாணவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நம் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்தின் பெயரைச் சொல்லி அதன் தலைநகரை சொல்லக்கேட்டால் உடனே பதில் சொல்லத் தெரியுமா என்று கேட்டால் சிறிது சந்தேகமே. ஆனால் குழந்தைகளோ தலைநகரை சொல்லி மாநிலத்தை கேட்டாலும் சொல்வதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். நம்மை விட நம் குழந்தைகள் கற்பதில் மிகுந்த பலசாலியாக இருக்கிறார்கள், என்ற பெருமிதம் மனம் முழுவதும் இருந்தது.
அந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் கழித்து, அதே குழந்தைகளை, அருகில் உள்ள கடைக்கு சென்று இரண்டு, மூன்று மளிகை பொருட்களை வாங்கி வரச் சொன்னால், கடைக்காரரிடம் போய் சொன்ன பொருட்களை மறந்து விட்டு கடைக்காரர் மூலம் போன் செய்து விவரங்களை கேட்கிறார்கள். அது மட்டுமல்ல பணம் கொடுக்கும் போது அந்த பணத்தைக்கூட அவர்களால் சரியாக கணக்கிட முடியவில்லை. பொருட்களின் விலையை கேட்க தெரியவில்லை. சில நேரங்களில் பொருள்களின் பெயரும் தெரியவில்லை. மீதம் எவ்வளவு வரும் என்று கேட்டால் அதற்கும் சரிவர பதில் சொல்லத் தெரியவில்லை. இப்படி அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு விஷயங்களே அவர்களுக்கு மிகுந்த சிக்கலாக இருக்கின்றன.
அப்படியானால் நாம் கற்கும் கல்வியானது நம் வாழ்வியலுக்கு பயன்படவில்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? தெரியவில்லை. கணிதத்தில் வாய்ப்பாடுகளை மனனம் செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள், ஆனால் அதை எந்தெந்த இடங்களில் எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை யார் கற்றுக் கொடுக்கிறார்கள்?
முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இரண்டு இலக்க எண்களை கூட கூட்டவோ கழிக்கவோ கற்று கொள்கிறார்கள். ஆனால் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களை கொடுத்து மொத்தம் எவ்வளவு என்று கேட்டால் பதில் சொல்ல தடுமாறுகிறார்கள்.
முன்பெல்லாம் நாம் அன்றாடம் வாங்கக்கூடிய அனைத்து பொருட்களின் விலையும் பெரும்பாலும் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இன்று குழந்தைகளை கடைக்கு அனுப்பும்போது அவர்கள் மிகுந்த தடுமாற்றத்தை சந்திக்கிறார்கள்.
ஒருமுறை பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று இருந்த போது குழந்தைகள் சாக்லேட் கேட்டார்கள். வாங்குவதற்கு பணம் இல்லை என்று கூறிய போது, அப்படி என்றால் gpay செய்யுங்கள் என்றார்கள். அப்படி என்றால் gpay வில் இருப்பது பணம் இல்லையா? இதை அவர்கள் கூற கேட்டபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பணம் என்பதை எல்லோரும் வெறும் எண்களாகவே பார்க்க பழகி விட்டோம். அதனை கையில் எடுத்து பயன்படுத்தும்போது நமக்கு இருக்கும் நிதானம் அதனை டிஜிட்டல் முறையாக பயன்படுத்தும் போது நமக்கு இருப்பதில்லை.
பள்ளிகள் பெரும்பாலும் கற்றலை சிறப்பாக செய்தாலும் கூட, வாழ்வியலையும் கற்றுத் தர வேண்டிய கடமைகள் அவற்றுக்கு இருக்கவே செய்கின்றன. அதையும் தாண்டி அதில் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வாழ்வின் அத்தனை விஷயங்களையும் பெற்றோர்களால் மட்டுமே கற்றுத் தர முடியும். ஒவ்வொரு நாளும் வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுங்கள். வாழ்வியல் தெரியாத போது கடலளவு கற்றாலும் அதில் கடுகளவும் பயன் இருக்கப் போவதில்லை.
விழித்துக் கொள்ளுங்கள் பெற்றோர்களே, எது ஒன்றையும் சிறு விஷயம் தானே என்று நினைக்காதீர்கள். எந்த ஒன்றும் கற்றல் இல்லாமல் நடைபெறாது.
ஒருவேளை நாம் நம் கடமைகளை சரியாக செய்யாவிட்டால், "பூசணிக்காய் செடியில் காய்க்குமா? கொடியில் காய்க்குமா?" என்ற நமது கேள்விக்கு, "பூசணிக்காய் பெரிதாய் இருக்கிறது. நிச்சயம் மரத்தில்தான் காய்க்கும்" என்று பதில் சொல்வது போல் ஆகிவிடக் கூடாது நிலைமை!