நாம் அனைவரும் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களை கடைபிடித்து வருகிறோம். அவை அனைத்தும் நம் முன்னோரிடம் இருந்து நமக்கு கடத்தப்பட்டவை என்றாலும் கூட அவை அனைத்திற்கும் பின்னாலும் ஒரு வகையான அறிவியல் காரணம் இருக்கிறது! இப்பதிவில் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!
எலுமிச்சம் பழத்தை சக்கரத்தின் அடியில் வைப்பதற்கான அறிவியல் காரணம் இதுதானாம்!
பொதுவாகவே நாம் ஏதாவது புதிய வாகனம் எடுக்கும் போது அந்த வாகனத்திற்கு பூஜைகள் செய்து எலுமிச்சம் பழத்தை சக்கரத்தின் அடியில் வைத்து வாகனத்தை எடுப்பது வழக்கம். இது நம்முடைய காலம் காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு பழக்கமாக இருக்கிறது.
ஆனால், இதன் உண்மை காரணம் என்னவென்றால், முந்தைய காலங்களில் பெரும்பாலும் போக்குவரத்து என்றாலே அது மாட்டு வண்டி போக்குவரத்து தான். அப்படி மாடுகள் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அதன் கால்களில் காயங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் தொற்று கிருமிகள் ஏற்பட்டு மாடுகளின் உடல்நிலை பாதிக்கப்படலாம். இதனை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் வண்டியை எடுப்பதற்கு முன்பு மாடுகளின் நான்கு கால்களுக்கு அடியிலும் எலுமிச்சம் பழத்தை வைத்து மிதிக்க வைத்தார்கள். அவ்வாறு மிதிக்கும் போது எலுமிச்சம் பழத்தின் சாறு மாடுகளின் காலில் படும்போது அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்து காயங்கள் ஏதேனும் இருந்தால் விரைவில் ஆறிவிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் வண்டியை எடுப்பதற்கு முன்பு எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தினார்கள்.
இந்த பழக்கம் நாளடைவில் மருவி மருவி சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைக்கும் பழக்கமாக மாறியது. அதை பின்பற்றி தான் நாமும் தற்போது வரை புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை செய்கிறோம். அவ்வாறு எலுமிச்சம் பழத்தை சக்கரங்களுக்கு அடியில் வைத்து நசுக்கும் போது கண் திருஷ்டி கழிவதாகவும் மக்களால் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
ஆரத்தி எடுப்பதற்கான அறிவியல் காரணம் தெரியுமா?
பொதுவாக நாம் யாருக்கெல்லாம் ஆரத்தி எடுப்போம்? புதுமண தம்பதிகள், குழந்தை பிறந்து வீட்டுக்கு வரும் தாய்மார்கள் போன்றோருக்கே நாம் ஆரத்தி எடுப்பது வழக்கம்.
நாம் ஆரத்தி கலக்கும் போது அதில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை பயன்படுத்துகிறோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை ஒன்றாக கலக்கும் போது சிவப்பு நிறம் கிடைக்கும். இதில் வெற்றிலையுடன் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி சுத்தும்போது உருவாகும் நெருப்பில், கீழே உள்ள சுண்ணாம்பானது ஆவியாகும். சுண்ணாம்புக்கு இயல்பிலேயே தொற்று கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இந்த ஆவி புதிதாக வருபவர்களின் மீது படும்போது அவர்களின் மேல் உள்ள தொற்று கிருமிகள் அழியும் என்பதால்தான் முன்காலத்தில் வீட்டுக்குள் வருபவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.
அதுமட்டுமல்ல, முற்காலத்தில் வீடுகளுக்கு வருகை தரக்கூடியவர்கள் அனைவரும் பெரும்பாலும் தொலைவில் இருந்து வருபவர்களாகவே இருப்பர். அவ்வாறு பல்வேறு இடங்களில் இருந்து அவர்கள் வரும்போது பலவகையான தொற்றுகளுக்கு ஆளாகி இருக்கலாம் என்பதை மனதில் வைத்து அக்கிருமிகளை அழிக்கும் பொருட்டே இந்த பழக்கத்தை முன்னோர்கள் கடைப்பிடித்தனர். அதைப் போன்று குழந்தை பெற்ற தாய்மார்கள் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பர். வெளியிடங்களில் இருந்து குழந்தையோடு வரும்போது இந்த கிருமி நாசினிகளை விரட்டுவதற்காகவே ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்கும் பழக்கத்தை கடைபிடித்தனர்.
சாப்பிடும் போது ஏன் தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும்?
நம் முன்னோர்கள் தலை வாழை இலை போட்டு சம்மனமிட்டு சாப்பிட்டு வந்தார்கள். இன்று அந்தப் பழக்கம் மெல்ல மெல்லம் மருவி நாம் அனைவரும் டைனிங் டேபிள் அல்லது சேர்களில் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு மாறிவிட்டோம். தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது நம் உடலானது அஷ்ட பத்மாசனம் என்ற நிலையில் இருக்கும். இத்தகைய நிலையில் உட்கார்ந்து சாப்பிடுவது செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது. சாப்பிட்ட உணவுகள் எந்தவித சிக்கலும் இன்றி செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடித்தார்கள்.