
ஹார்னெட்களுக்கு இரையை கொல்வதற்கும், கூடுகளை பாதுகாக்கவும் ஸ்டிங்கர்கள் பயன்படுகின்றன. இதன் விஷத்தில் அதிக அளவு அசிடைல்கொலின் இருப்பதால் இது கொட்டினால் மனிதர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். தேனீக்களைப் போல இவை கொட்டிய பிறகு இறக்காது. காரணம் ஸ்டிங்கர்கள் மிக நுண்ணிய முட்களால் ஆனவை. எனவே அவற்றை வெளியேற்றும் பொழுது அவற்றின் உடலில் இருந்து வெளியே இழுக்கப்படுவதில்லை.
இவற்றை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சில வழிகள்:
1) இயற்கையான வழியில் குளவிகளை விரட்ட உதவும் தைம், சிட்ரோனெல்லா, யூகலிப்டஸ்,ஸ்பியர்மின்ட் போன்ற தாவரங்களை வீட்டில் வளர்க்கலாம். இவை குளவிகளை வீட்டில் வரவிடாமல் விரட்ட உதவும்.
2) குளவிக் கூட்டை நாமாக அகற்றும் பொழுது, அவை நம்மைக் கொட்டி வலியை உண்டாக்கலாம். எனவே அவற்றை அகற்றுவதற்கு தொழில்முறை உதவியை நாடுவது சிறந்தது. தொழில்நுட்ப வல்லுநர்கள் கூடுகளை பாதுகாப்பாக கையாள்வதில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பதால் கூடுகளை எளிதாக அகற்றுவதுடன், திரும்பவும் கூடு கட்டாமல் இருப்பதற்கான வழி முறைகளையும் செயல்படுத்துவார்கள்.
3) மிளகுக்கீரை, எலுமிச்சை, கிராம்பு, ஜெரனியம் மற்றும் லவங்கப்பட்டை போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை ஒவ்வொன்றிலும் சில துளிகளை ஸ்ப்ரே பாட்டிலில் விட்டு சிறிது தண்ணீர் கலந்து வீட்டிலேயே எளிதாக ஸ்பிரேக்களை தயாரிக்கலாம். இவற்றை குளவிக் கூட்டிலும், குளவிகள் பொதுவாக காணப்படும் கதவுகளின் பின்புறம், மேற்கூரைப் பகுதிகளிலும் தெளிப்பதன் மூலம் குளவிகளை எளிதில் விரட்டலாம்.
4) மற்றொரு சிறந்த முறை ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் முக்கால் பங்கு, பாத்திரம் கழுவும் லிக்விட் சோப் கால் பங்கு என நிரப்பி ஸ்பிரேக்களை தயாரித்து தெளிக்கலாம். இந்த சோப்பு கரைசல் குளவிகளை விரட்ட விரைவாக வேலை செய்கிறது.
5) குளவிகளை அகற்றுவதற்கு முன்பு பாதுகாப்பாக எப்படி அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறலாம் என்பதை உறுதி செய்து கொண்டு செயலாற்றுவது மிகவும் முக்கியம். அத்துடன் குளவிகளை அகற்றியவுடன் குளவிக் கூடுகளையும் அகற்றி சுத்தப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
6) ஹேர் டிரையர்கள் அல்லது பெடஸ்டல் ஃபேன் மின்விசிறியைப் பயன்படுத்தி காற்றோட்டத்தை உருவாக்குவதன் மூலம் குளவிகளை திறந்த கதவு அல்லது ஜன்னல்களை நோக்கி பாதுகாப்பாக வெளியேற்றலாம்.
7) குளவியை வெளியேறும் பாதையை நோக்கி மெதுவாக தள்ளுவதற்கு ஒரு அகலமான அட்டைத் துண்டை பயன்படுத்தி அவற்றை வெளியேற வைக்கலாம். அதற்கு முன் அறையில் ஒளிரும் விளக்குகளை அணைக்கவும். குளவிகள் இயற்கையாகவே ஒளியால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலும் ஒளிரும் பகுதியை நோக்கி நகரும். எனவே அறையில் ஒளிரும் விளக்குகளை அணைப்பதன் மூலம் வெளியேற்றும் செயலை எளிதாக்கலாம்.
8) கடைகளில் குளவிகளை விரட்ட ஸ்ப்ரேக்கள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி அவற்றில் குறிப்பிட்டிருக்கும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றி விரட்டலாம்.
முக்கியக் குறிப்பு: குளவிகளுக்கு மிக அருகில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து குளவிகளை விரட்ட முயற்சிக்கவும். கையுறைகள், முழுக்கை சட்டை அணிவது, கண் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகளை கவனத்தில் கொண்டு குளவிகளை அகற்றலாம்.