
பலருக்கும் பிராண்டட் பொருட்கள் மீது தீராத மோகம் உண்டு. அவர்கள் தாங்கள் அணியும் ஆடைகள் முதல் பயன்படுத்தும் கைக்குட்டை வரை ஒவ்வொன்றையும் பிராண்டட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக எவ்வளவு பணம் செலவழிக்கவும் தயாராக இருப்பார்கள். இந்த பிராண்டட் பொருள்கள் தான் தரமானவை என்கிற மாயையில் இருந்து விடுபட்டு பணத்தை சேமிக்கும் சில வகையான உத்திகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிராண்டட் பொருட்களை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்:
சிலர் அதிக விலை கொடுத்து கைப்பை, வாட்ச், பேன்ட், சேலைகள், ஆடம்பர காலணிகள், ஷூக்கள், சொகுசு கார்கள், மின்னணு சாதனங்கள், பெரிய சைஸ் டிவி போன்றவற்றை வாங்குவார்கள்.
தரம்:
உயர்தர பிராண்டட் பொருள்கள் விலை அதிகமாக இருந்தாலும் அவை உயர்தரமாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தங்களது நற்பெயரை காத்துக் கொள்ள பல நிறுவனங்கள் தங்கள் பிராண்டட் பொருட்களைத் தரமான முறையில் தருகிறார்கள் என்பது நிஜம். ஆனால் நல்ல தரத்துடன் கூடிய பிராண்டட் அல்லாத பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன என்பதும் உண்மை.
சமூக அந்தஸ்து:
பிராண்டட் பொருட்களை வாங்குவது தங்களது சமூக அந்தஸ்தை காட்டும் அடையாளமாக மக்கள் நினைக்கிறார்கள். தாங்கள் நல்ல பொருளாதார வசதியுடன் இருக்கிறோம் என்பதை பிறருக்கு தெரிவிப்பதற்காக அவர்கள் பிராண்டட் பொருட்களை வாங்குகிறார்கள்.
விளம்பரங்கள்:
உண்மையில் எல்லா பிராண்டட் பொருட்களும் உயர்தரத்தில் இருப்பது இல்லை. அவற்றை விட மாற்று தயாரிப்புகளும் சிறந்தவர்களாக இருக்கின்றன. தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் சமூக ஊடகங்களின் வழியாக பார்க்கும் விளம்பரங்கள் மூலமாக மக்கள் பிராண்டட் பொருள்களுக்கு அடிமையாகிறார்கள்.
பொருளாதாரம் பாதிப்பு:
செல்வந்தர்கள் பிராண்டட் பொருள்களை வாங்குவதில் ஏதும் சிக்கல்கள் இருப்பதில்லை. ஆனால் மத்தியதரவர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மக்கள் பிராண்டட் பொருட்கள் மீது இருக்கும் மோகத்தினால் தங்கள் சேமிப்பிலிருந்து கூட பணத்தை செலவழிக்க தயங்குவதில்லை. இதனால் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. பலர் கடன், லோன் போட்டும் அதிக விலையில் உள்ள பொருட்களை வாங்குகிறார்கள்.
பிராண்டட் மோகத்தில் இருந்து விடுபட உதவும் பொருளாதார உத்திகள்:
தெளிவான நிதி இலக்குகள்:
முதலில் தமக்கு எது தேவை என்பதில் ஒருவர் தெளிவாக இருக்க வேண்டும். ஆடம்பரம் பிராண்டுகளில் பணம் செலவு செய்வதை விட அத்தியாவசிய பொருட்கள் அல்லது நீண்ட கால இலக்குகளுக்காக பணம் சேமிக்க தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு பொருளையும் வாங்கும் முன்பு அது அவசியம் தேவைதானா என்று பார்க்க வேண்டும்.
தூண்டுதல்களை தவிர்க்க வேண்டும்:
சமூக ஊடகங்களில் ஆடம்பர பிராண்டுகளை பின் தொடர்வதை நிறுத்த வேண்டும். அவை ஒரு மனிதனைத் தூண்டி மூளைச்சலவை செய்து ஷாப்பிங் செய்ய வைக்கின்றன.
தள்ளிப் போடுதல்:
ஆடம்பரமான சட்டையோ, உடையோ அல்லது பொருளோ வாங்க வேண்டும் என்று விரும்பினால் 24 மணி நேரம் வரை காத்திருந்து மறுநாளும் அந்த பொருள் மீது ஆசை இருக்கிறதா என பரிசோதித்துவிட்டு பிறகு வாங்குவதை பற்றி யோசிக்க வேண்டும். பெரும்பாலும் வாங்கும் எண்ணம் போய் விடும்.
தேவையில்லாத பொருளை வாங்க வேண்டாம்:
சிலர் தேவை இருக்கிறதோ இல்லையோ ஆஃபர் விளம்பரங்களை பார்த்துவிட்டு தங்களிடம் ஏற்கனவே இருக்கும் உடைகள் மற்றும் அணிகலன்கள் போன்றவற்றை வாங்கிக் குவிப்பார்கள். எனவே தேவையில்லாமல் எந்த பொருளையும் வாங்கக்கூடாது என்று மனதார உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொருளின் மதிப்பு:
நீங்கள் வாங்கும் பொருளின் விலையை கருத்தில் கொண்டு அந்தப் பணத்தை சம்பாதிக்க எத்தனை மணி நேரம் நீங்கள் உழைக்க வேண்டும் என்பதைக் கணக்கிட வேண்டும். இப்படி கணக்கிட்டாலே தேவை இல்லாமல் செலவு செய்யவும் அல்லது அவசியமில்லாத பொருளை வாங்கவும் மனம் வராது.