
சிறுவயதில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. வயது அதற்கு இணையாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட உயரம் வந்ததும் சிலர் அதை ஓட்டத் தொடங்குவர். ஆனால், அதுதான் பல இன்னல்களை அவர்களுக்குத் தருகிறது. இதற்கு என்ன வழி உள்ளது?
என்ன நடக்கிறது அவர்களுக்குள்?
சிறுவர்கள் (Teenagers) பெரும்பாலும் சட்டப்பூர்வ வயதை அடைவதற்கு முன்பே கார் அல்லது பைக்குகளை ஓட்ட ஆர்வம் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் அவர்கள் வாகனம் ஓட்டுவதை ஓர் உற்சாகமான திறமையாகக் கருதுகிறார்கள். இது அவர்களின் சமூக நிலையை மேம்படுத்துவது போலவும், ‘நாம் வளர்ந்துவிட்டோம்’ என்ற உணர்வையும் தருகிறது. இந்த உற்சாகத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தாலும் அது அவர்களின் பாதுகாப்பிற்கும், சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்பது இன்னும் இந்தக் காலகட்டத்தில் சிலருக்குப் புரியாமல் இருக்கிறது.
இதை நாம் எப்படி சுமூகமாகக் கையாளலாம்?
சிறுவர்களால் தவறு ஏற்படும்போது அதை நிவர்த்தி செய்ய பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் எடுத்தவுடனே கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் மென்மையான சில ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை பின்பற்றலாம்.
முதலில், திறந்த தகவல் தொடர்பு (Open communication) இதில் முக்கியமானது. 18 வயதிற்கு முன்கூட்டியே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சட்டச் சிக்கல், நெறிமுறை மற்றும் அதன் பாதுகாப்பு தாக்கங்களை அவர்களிடம் எடுத்துக்காட்டுடன் விளக்கினால் பொறுப்புணர்வைத் தூண்டும்.
இந்த உணர்வை அவர்களுக்கு அதிகரிக்க பள்ளிகளில் விளையாட்டு அல்லது கல்வித் திட்டங்களில் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அவர்களுக்குக் கொடுக்கலாம். இது அவர்களின் கவனத்தையும், விருப்பத்தையும் மாற்றியமைக்கலாம்.
தற்போது சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்களின் பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க சட்டமியற்றுப்பட்டுள்ளது. இந்த விதிகளை அவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும்.
இதுபோக விதிகளைப் பின்பற்றினால் கிடைக்கும் வெகுமதிகள் (Rewards), வயது ஏற ஏற அவர்களுக்கானப் பொறுப்புகளை வழங்குவது போன்றவை அவர்களின் ஆற்றலை நேர்மறையாக வழிநடத்தும்.
இதற்கு வாகன உற்பத்தியாளர்களிடம் என்ன தீர்வு உள்ளது?
இந்தப் பிரச்னையை புதுமையான முறையில் சமாளிக்க வாகன உற்பத்தியாளர்களிடம் பல திட்டங்கள் உள்ளன.
பயோமெட்ரிக் அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்கள் (Biometric ignition systems) அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வாகனத்தை ஓட்ட முடியும் என்பதை உறுதி செய்கின்றன. இதனால் குறைந்த வயதுடையவர்கள் வாகனம் ஓட்டுவது தடுக்கப்படுகிறது.
GPS-இயக்கப்பட்ட பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்கள் (Parental control) வாகனத்தின் இயக்கத்தைக் கண்காணிக்கவும் குறிப்பிட்ட மணி நேரங்களில் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்றன.
கார்களில் இப்போதுள்ள உள்ள செயற்கை நுண்ணறிவு வாகனம் ஓட்டுவதற்கு அங்கீகரிக்கப்படாத யாரவது வாகனம் ஓட்ட முயற்சி மேற்கொண்டால் அதை கண்டறிந்து பெற்றோர் அல்லது உரிமையாளரிடம் எச்சரிக்கைகளை அனுப்பும். இதுபோக, வாகனங்கள் இயங்குவதற்கு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஐடிகளுடன் இணைக்கப்பட்ட வயது சரிபார்ப்பு செய்தபின்தான் ‘ஸ்டார்ட்’ ஆகும் வகையில் வசதிகளையும் வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.
பதின்ம வயது (Teenage) என்பது சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் தொடங்கும் வயது. அதனால் மேலே குறிப்பிட்டதுபோல் அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பியும், தேவையான விழிப்புணர்வுகளைக் கொடுத்தும் இந்தக்காலகட்டத்தைச் சுமூகமாக கடந்துவர உதவி புரியலாம்.