

வீட்டில் கைக்குழந்தையோ அல்லது தவழும் மழலையோ இருந்தால், பெற்றோர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித்தான் கண்காணிக்க வேண்டும். காரணம், குழந்தைகளின் உலகம் ரொம்பவே வித்தியாசமானது. தரையில் கிடக்கும் பட்டாணி, சில்லறைக் காசு, பட்டன் என எதைப் பார்த்தாலும், "இது என்ன ருசிக்கும்?" என்று எடுத்து வாயில் வைப்பதுதான் அவர்களின் முதல் வேலை.
சமீபத்தில் ஈரோட்டில் ஒரு சிறுவன் வாழைப்பழம் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்த சோகம் நம் எல்லோரையும் உலுக்கியது. "ஐயோ, என் குழந்தைக்கும் இப்படி நடந்தா என்ன பண்றது?" என்ற பயம் எல்லாருக்கும் இருக்கும். அந்தப் பயம் வேண்டாம். சரியான நேரத்தில், சரியான முதலுதவி செய்தாலே போதும், எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்தும் குழந்தையைக் காப்பாற்றிவிடலாம்.
வாயைத் திறந்து பாருங்கள்!
குழந்தை மூச்சுவிடத் திணறுகிறது, ஏதோ முழுங்கிவிட்டது என்று தெரிந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது 'பதறாமல் இருப்பது'. நீங்கள் பதறினால், குழந்தை இன்னும் பயந்துவிடும். உடனே குழந்தையின் வாயைத் திறந்து பாருங்கள்.
தொண்டைக்குழியில் சிக்கியிருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், உங்கள் ஆட்காட்டி விரலை ஒரு கொக்கி போல வளைத்து உள்ளே விட்டு, லாவகமாக வெளியே இழுக்கப் பாருங்கள். பொருள் தெரியவில்லை என்றால், குருட்டுத்தனமாக விரலை விட்டுத் தேடாதீர்கள். அது அந்தப் பொருளை இன்னும் ஆழமாகத் தள்ளிவிட்டுவிடும் ஆபத்து உண்டு.
படுக்க வைக்கலாமா?
நம்மில் பலர் செய்யும் தவறு, குழந்தையை உடனே படுக்க வைத்துத் தண்ணீர் கொடுப்பது. தொண்டையில் அடைப்பு இருக்கும்போது தண்ணீர் குடித்தால் அது இன்னும் சிக்கலாகும். குழந்தையை உட்கார வையுங்கள் அல்லது நிற்க வையுங்கள். எக்காரணம் கொண்டும் படுக்க வைக்காதீர்கள். புவியீர்ப்பு விசை நமக்கு உதவ வேண்டும்.
முதுகில் தட்டும் முறை!
இதுதான் மிக முக்கியமான டெக்னிக். குழந்தையைச் சற்று முன்னோக்கிச் சாய்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கையின் அடிப்பகுதியைக் கொண்டு, குழந்தையின் இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கும் நடுவே, அதாவது முதுகின் மையப்பகுதியில் 'தட்... தட்...' என்று 5 முறை மிதமான வேகத்தில் தட்ட வேண்டும். இப்படித் தட்டும்போது ஏற்படும் அதிர்வில், தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் தானாகவே வெளியே வந்துவிடும். குழந்தை இருமினாலோ அல்லது தும்மினாலோ தடுக்காதீர்கள், அது அடைப்பை வெளியேற்ற உதவும் இயற்கை வழி.
தடுப்பு நடவடிக்கைகள்!
முக்கியமாக, கேரட், ஆப்பிள், திராட்சை போன்றவற்றை முழுசாகக் கையில் கொடுக்காதீர்கள். கேரட், வெள்ளரிக்காய் போன்ற கடினமான காய்கறிகள் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். அவற்றைச் சின்னச் சின்னத் துண்டுகளாகவோ அல்லது மசித்தோ கொடுப்பது நல்லது. குழந்தைக்குப் பொறுமையாக மென்று சாப்பிடக் கற்றுக் கொடுங்கள்.
மேலே சொன்ன முதலுதவிகளைச் செய்தும் பொருள் வெளியே வரவில்லை என்றாலோ, அல்லது குழந்தை மூச்சுவிடத் தொடர்ந்து சிரமப்பட்டாலோ, அடுத்த விநாடியே தாமதிக்காமல் மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுங்கள்.
ஆபத்து வரும் முன் காப்பது சிறந்தது; வந்தால் பதறாமல் எதிர்கொள்வது அதைவிடச் சிறந்தது. இந்த எளிய முறைகளை மனதில் வைத்துக்கொண்டால், உங்கள் குழந்தையின் பாதுகாப்பிற்கு நீங்களே முதல் மருத்துவர்.