

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் கூட்டுறவுத்துறை வழங்கி வருகிறது.
ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டை கட்டாயம் என்ற சூழலில், புதிதாக திருமணமானவர்கள் மற்றும் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த பொதுமக்களுக்கு, அட்டை காலதாமதமாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்ட பிறகு, ரேஷன் அட்டை விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் ரேஷன் அட்டை விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது தமிழக அரசு. அதன் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் சுமார் ஒரு லட்சம் புதிய ரேஷன் காடுகளை விநியோகித்தது தமிழக அரசு.
இந்நிலையில் தற்போது புதிதாக 55 ஆயிரம் ரேஷன் கார்டுகளை விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் பல்வேறு சிறப்புத் திட்டங்களில் பயன் பெறுவதற்கு ரேஷன் அட்டை அவசியம். இந்நிலையில் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உரிமைத் தொகையை பெறுவதற்கு புதிய ரேஷன் கார்டுக்காக அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதோடு அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பொங்கல் பரிசாக தமிழக அரசு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்பதாலும், ரேஷன் அட்டைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன், ரேஷன் அட்டைக்கு தலா ரூ.5,000 வழங்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்குள் ரேஷன் அட்டையை பெற்று விட வேண்டும் என 1 லட்சததுக்கும் மேலான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் தங்களுக்கு விரைவாக ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் தகுதியான விண்ணப்பங்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு, விரைவில் சுமார் 55,000 புதிய ரேஷன் அட்டைகளை விநியோகிக்க தமிழக கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருமணச் சான்று மற்றும் தனி சமையல் அறையுடன் கூடிய முகவரிச் சான்று ஆகிய ஆவணங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் முக்கிய ஆவணங்களாக கருதப்படுகின்றன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் புதிய அட்டை விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதால், பொதுமக்கள் விரைந்து வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
புதிய ரேஷன் அட்டை விநியோகம் குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாட்டில் தற்போது புதிய ரேஷன் அட்டைக்கு 1.07 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக உரிய ஆவணங்களுடன் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்த தகுதியான 55,000 நபர்களுக்கு வெகு விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்படும். மற்ற விண்ணப்பதாரர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் ரேஷன் அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.