
வீட்டுத் தோட்டத்தில் சில வகையான தாவரங்களையும் மரங்களையும் வளர்க்கக் கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். அவை வீட்டிற்கு வரும் அதிர்ஷ்டத்தைத் தடுத்து துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாத தாவரங்களையும், அதற்கான காரணங்களையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பருத்திச் செடி:
இந்தச் செடியில் மென்மையான, வெண்மையான பஞ்சு விளைகிறது. பொதுவாக வெள்ளை நிறம் சோகம், இழப்பு மற்றும் துன்பத்தைக் குறிக்கிறது. இது இறுதிச் சடங்கு, சம்பிரதாயங்களுடன் தொடர்புடையது. மேலும் இது வீட்டிற்கு வறுமை மற்றும் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது .எனவே பருத்திச் செடியை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது.
முட் செடிகள்:
ரோஜாச் செடிகளைத் தவிர முட்கள் உள்ள பிற செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. போகன்வில்லா, கற்றாழை செடிகளை கூட வீட்டில் வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவை எதிர்மறை சக்தியை வீட்டிற்கு கொண்டு வரும். அதனால் வீட்டில் கடுமையான சண்டைகள், அச்சம், மோதல்கள் போன்றவை உருவாகும் என்று நம்பப்படுகிறது.
ரப்பர் செடி:
ரப்பர் செடியை பலர் இப்போது வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால் வாஸ்துவில் இது எதிர்மறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பெரிய, கருப்பு இலைகள் தீய சக்திகளை ஈர்க்கும் என்றும், அனைத்து நல்ல சக்தியையும் உறிஞ்சும் என்றும் கூறப்படுகிறது. அவற்றை வீட்டிற்குள் வைத்திருந்தால், அவற்றை மிகக் குறைவாகப் பார்வையிடும் பகுதிகளில் வைக்கவும்.
நோய்வாய்ப்பட்ட, வாடிப்போன செடிகள்:
இறந்த, நோய்வாய்ப்பட்ட அல்லது வாடிப் போன எந்தவொரு தாவரமும் வாஸ்துவில் மிகவும் துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படுகிறது. தாவரங்கள் எதிர்மறை சக்திகளை வெளியிடுவதாகக் கருதப்படுவதால், அவை எதிர்மறை சக்திகளை ஈர்க்கக்கூடும். முடிந்தவரை விரைவாக, அத்தகைய தாவரங்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
போன் சாய் மரங்கள்:
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் குட்டையான போன்சாய் மரங்கள் வாஸ்துப்படி வீட்டுத் தோட்டங்களுக்கு ஏற்றதல்ல. அசுபமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அதனுடைய குறுகிய வளர்ச்சி வீட்டில் உள்ளவர்களுக்கு முன்னேற்றத்தடை, செழிப்பின்மை போன்றவற்றை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வளர்ச்சி மற்றும் வெற்றியை தடுக்கும். எனவே இதை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் திறந்த வெளியில் வைப்பது நல்லது.
அல்லிச் செடிகள்;
பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இவை அதிர்ஷ்டமற்றவையாக கருதப்படுகின்றன. வீட்டில் உள்ளவர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தி ஆரோக்கிய கேட்டை உண்டாக்கும். எனவே இந்த செடி அதிர்ஷ்டமற்றதாக கருதப்படுகிறது.
மருதாணிச் செடி;
ஆன்மீக ரீதியாக இது மகாலட்சுமிக்கு உகந்தது என்று கருதப்பட்டாலும் சில வாஸ்து சாஸ்திரங்களின்படி இது வீட்டுக்கு எதிர்மறை சக்தியை கொடுக்கிறது. சீர்குலைக்கும் ஆற்றலுடன் தொடர்புடையது. உறவுகளில் விரிசல், மோதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது
அரசமரம்:
அரசமரம் மிகவும் புனிதமானதும் வழிபாட்டிற்குரியதும் ஆகும். ஆனால் இந்த மரத்தை வீட்டுத் தோட்டத்திலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ நிச்சயமாக வளர்க்கக்கூடாது. இது ஆவிகள் அல்லது கெட்ட சக்திகளை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இதனுடைய வேர்ப் பகுதி வீட்டின் அடித்தளத்தை சேதப்படுத்தும்.
புளிய மரம்:
வாஸ்து சாஸ்திரப்படியும் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின் படியும் புளிய மரம் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் என்றும் பேய், ஆவி போன்ற தீய சக்திகளின் வசிப்பிடமாகவும் கருதப்படுகிறது. அதனால் வீட்டுப் பின்புறத்திலோ குடியிருப்புப் பகுதிகளிலோ கட்டாயமாக இதை வளர்க்கக்கூடாது.
யூகலிப்டஸ்:
வேகமாக வளரும் யூகலிப்டஸ் மரங்கள் விரைவில் வீட்டுத் தோட்டத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். இவை நீர் உறிஞ்சும் மரங்கள் என்று பெயர் பெற்றவை. தோட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக குறைக்கும். அருகில் உள்ள பிற தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவற்றின் வேர்கள் வீட்டின் அடித்தளத்தை சேதப்படுத்தும். செழிப்பின்மையை கொண்டு வந்து விடும். எனவே இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்