
குளிப்பது என்பது நம் தினசரி வாழ்வியலின் ஒரு முக்கியமான அங்கம். அதற்கும் நம் முன்னோர்கள் சில வழக்கங்களை வகுத்து வைத்துள்ளனர். நம்மில் பலரும் பாத்ரூமுக்குள் சென்றதும் உடனடியாகச் செய்வது ஷவரைத் திறந்து கொட்டும் நீருக்கடியில் தலையை காண்பித்தபடி நிற்பதுதான். நீர் முகத்தின் வழியே பயணித்து கால் வரை சென்றடையும்.
இது சரியான முறையாகாது. ஏனெனில், திடீரென தலையில் குளிர்ந்த அல்லது சூடான நீர் விழும்போது அந்தப் புதிய தட்பவெப்ப நிலைக்கு உடலியல் உடனடியாக பழகிக்கொண்டு அதற்கேற்றவாறு எதிர்வினையாற்றுவதென்பது முடியாத காரியம்.
வயதானவர்களில் பலர் குளியலறையில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விடுவதை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இதற்கான கரணங்களை சற்று விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஷவரைத் திறந்து தலையைக் காட்டுவது சுகானுபவமாகத் தோன்றினாலும் அதன் பின் உண்டாகும் விளைவுகள் உண்மையாகவே அபாயகரமானவை. திடீரென தலையில் அல்லது உடலின் மேற்பரப்பில் தண்ணீர் விழும்போது அந்தத் தண்ணீரின் உஷ்ண நிலைக்கு ஏற்ப உடலானது உடனடியாக எதிர்வினையாற்ற முடியாது. திடீரென இரத்த நாளங்கள் சுருங்கவோ விரியவோ செய்யும். இரத்த அழுத்தத்தில் அப்போது உண்டாகும் மாற்றத்தினால் தலை சுற்றலும் மயக்கம் வருவதும் சகஜமாகும்.
இதற்கு மாறாக, தண்ணீரை பாதத்தில் ஊற்ற ஆரம்பித்து படிப்படியாக மேலே செல்லும்போது, வெப்பநிலை மாற்றத்தைப் பற்றி மூளைக்குச் செய்தி அனுப்பப்பட்டு, மூளை இரத்த நாள அமைப்புகளுக்கு முறையாக எச்சரிக்கை கொடுத்து இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்திக்கொள்ள முடியும். இந்த முறையானது மூத்த குடிமக்களுக்கு மட்டுமின்றி, இளைய தலைமுறையினருக்கும் பொருந்தும். அவர்கள் உடலும் தட்ப வெப்ப நிலைக்கு பழக்கப்படாதிருக்கையில் (Acclimatization) தற்காலிக மயக்கத்தையும் தலை சுற்றலையையும் உணர முடியும்.
சீனியர் சிட்டிசன்கள் வயது முதிர்ந்த காரணத்தினால் படுத்த அல்லது உட்கார்ந்த நிலையிலிருந்து திடீரென வேகமாக எழும்போது அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வருவதுண்டு. இதை postural Hypotention அல்லது ஆர்தோஸ்டிக் ஹைப்போடென்ஷன் என்கின்றனர்.
பாத்ரூமை பாதுகாப்புடன் உபயோகிப்பது எப்படி?
1. பாதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி குளியலைத் தொடங்குங்க.
2. சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துப் பாதுகாக்க முடியும்.
3. பாத்ரூமின் வெப்ப நிலையை அதிக உஷ்ணமாக அல்லது அதிக குளிர்ச்சியாக இல்லாமல் சம நிலையில் இருக்கும்படியும், நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும்படியாகவும் அமைத்துக் கொள்ளுங்கள்.
4. வயதானவர்கள் அவசரத்திற்குப் பிடித்துக்கொள்ள தரமான உலோகத்திலான கிராப் பார் (Grab Bar), வழுக்காத மேட் (Non-slip mat), ஷவர் ஸ்டூல், அவசர கால அழைப்பு மணி பட்டன் போன்ற உபகரணங்களை பாத்ரூமில் அமைத்துக் கொடுங்கள்.
5. குறைந்த இரத்த அழுத்தம் அல்லது ஹார்ட் பிரச்னை உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி மயக்கம், நெஞ்சு வலி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.