

ஒரு காலத்தில் படுக்கையறை என்பது தனித்தனியாக இருப்பது அரிதாக இருந்த நிலை மாறி, தற்போது பிறந்த குழந்தைக்கும் தனி அறை என்று பார்த்துப் பார்த்து வீடு கட்டுகிறோம். அப்படியிருக்க, நமது தனியறையில் நமது ரசனைக்கு ஏற்ற வகையில் விளக்குகள் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஒருவரின் நாளின் தொடக்கமும் முடிவும் படுக்கை யறையில்தான் உள்ளது. அந்த அறை மனஅமைதியையும் நல்ல தூக்கத்தையும் தரும் அமைதியான இடமாக இருக்கவேண்டும். அந்த அமைதியை உருவாக்குவதில் படுக்கை மேசை விளக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அது வெறும் அலங்காரமாக மட்டுமல்லாமல், அந்த அறையில் இருப்போரின் மனஅமைதியை காக்கும் வகையிலும் இருக்கவேண்டும்.
அதனைத் தேர்வு செய்ய உதவும் வகையில் உங்களுக்கு இந்த பதிவு.
குறைந்த ஒளியுடன் கூடிய செராமிக் பேஸ் விளக்கு
எளிமையான பீங்கான் அடித்தளம், மென்மையான ஒளி; அமைதியான சூழலை உருவாக்கும். எளிமையை விரும்புவோருக்கு ஏற்றது.
நவீன உலோக சட்ட விளக்கு
மெல்லிய உலோக வடிவம்; நவீன இன்டீரியர் அலங்காரத்திற்கு பொருத்தமானது. கருப்பு அல்லது தங்க நிற முடிப்புகள் அறைக்கு நுட்பமான அழகை சேர்க்கும்.
மரத்தாலான பழமையான விளக்கு
இயற்கையான பாரம்பரியம் மிக்க மர பொருட்கள் உயர்ந்த (High look) மற்றும் ஸ்டைலான தோற்றத்தை தரும்.
கண்ணாடி குளோப் விளக்கு
உருண்டை வடிவில் ஒளி சமமாகப் பரவும்; நேர்த்தியான தோற்றத்தை தரவல்லது.
டச் சென்சார் விளக்கு
தொடுதலில் இயங்கும் வசதி உள்ளதால், முதியவர்கள் உறங்கும் படுக்கையறைகளில் இரவில் எளிதாக பயன்படுத்த உதவும்.
தொழில்துறை கூண்டு விளக்கு
உலோகக் கூண்டு வடிவம்; நகர்ப்புற, லாஃப்ட் பாணிக்கு ஏற்றது. இவை பொதுவாக இரும்பு அல்லது எஃகு கம்பிகளால் உருவாக்கப்படுகின்றன. எளிய கோடுகள், திறந்த அமைப்பு, கருப்பு அல்லது மெட்டாலிக் நிறங்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இந்த வடிவம் இடத்திற்கு ஸ்டைலான மற்றும் தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது.
துணி டிரம் நிழல் விளக்கு
காலத்தால் அழியாத வடிவம்; சீரான ஒளி. பல பழைய திரைப்படங்களில் காணப்படும் இது கிளாசிக் தோற்றத்தை தரும்.
மார்பிள் பேஸ் டிசைனர் விளக்கு
பளிங்கு அடித்தளம்; மென்மையான, ஆடம்பரமான அழகான விளக்கு. அறையை பிரமாதமாக காட்டும் சுழலும் விளக்கு (Adjustable Table Lamp) தூங்குவதற்கு முன் படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவையான திசையில் ஒளியை திருப்ப முடிவதால் கண் சோர்வு குறையும்.
LED ஸ்மார்ட் விளக்கு
தேவைக்கேற்ப வண்ணம் மற்றும் வெளிச்சத்தை மாற்றக்கூடிய நவீன அம்சங்கள் கொண்ட இரவு விளக்கு.
விளக்கைத் தேர்ந்தெடுக்கும்போது உயரம், ஒளியின் வெப்பநிலை மற்றும் மேசை இடவசதி ஆகியவற்றை கவனிக்கவேண்டும். இதமான வெள்ளை ஒளி அல்லது வெளிர் நீல நிறம் படுக்கையறைக்கு ஏற்றது; அது மனதை அமைதிப்படுத்தும். ஒளி நேரடியாக கண்களில் விழாமல் இருக்கவேண்டும்.
இவ்வகைகளில், உங்கள் படுக்கையறை அளவு, இன்டீரியர், மேசை வடிவமைப்பு மற்றும் சுவர் சித்திரங்களை கருத்தில் கொண்டு தேர்வு செய்தால், அந்தச் சிறிய விளக்கு அறையின் முழு மனநிலையையும் மாற்றிவிடும்.