
காடுகளில் குறைந்து வரும் வாழ்வாதாரம் போன்ற காரணங்களால் சில வகை பறவை மற்றும் விலங்கினங்கள் முற்றிலும் இல்லாமல் போய்விடுவது போல், உணவு வகைகளிலும் சில ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகள், வீடுகளில் தயாரிப்பதும் உட்கொள்வதும் குறைந்தும் மறைந்தும் வருகின்றன. அவ்வாறான 5 உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சிவல் பாஜி (Chival Bhaji): மகாராஷ்டிராவின் கிராமப்புறப் பகுதிகளில் வயல்வெளி ஓரங்களில் அதிகமாக வளர்ந்து வரும் தாவரம் இது. பெண்கள் இதை சேகரித்துக் கொண்டு வந்து, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, புளி சேர்த்து சரியான பதத்தில் சமைத்துக் கொடுக்கும்போது, அதன் அளப்பரிய சுவையும், அதைத் தயாரித்தவரின் பொறுமையும், துல்லியமான கணக்கீடுகளும் புலப்படும். தற்போதுள்ள நகரத்து சமையலறைகளில் இது முற்றிலும் விலகிவிட்ட உணவு.
2. சான் (Zan) எனப்படும் மலைவாழ் மக்களின் காலை உணவு: வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காலை உணவாகத் தயாரிக்கப்படும் உணவு இது. கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் போட்டு தயாரிக்கப்படும் இந்த உணவு, குளிர் பிரதேச மக்களின் உடல் குளிர்ச்சியைக் குறைத்து உஷ்ணத்துடன் வைக்க உதவும். காலையில் சிறுவர்கள் சான் உணவை உட்கொண்டுவிட்டு பள்ளி சென்று வந்தனர். தற்போது, நூடுல்ஸ் மற்றும் அரிசி உணவுகளின் வரவால் சான் தனது அடையாளத்தை இழந்து வருகிறது.
3. ஏழைகளின் புரத சத்து நிறைந்த உணவு - உலவ சாறு (Ulava Charu): ஆந்திராவின் காய்ந்து விரிந்து கிடக்கும் சம தளப் பரப்புகளில் வசித்து வரும் மக்களின் முக்கியமான உணவு இந்த உலவ சாறு. தமிழில் கொள்ளு எனப்படும் இந்தப் பயறை தண்ணீரில் குழைய வேக வைத்து அதனுடன் பூண்டு, புளி போன்ற பொருட்களை சேர்த்து தயாரிப்பதே இந்த உலவ சாறு. இது குளிர் காலத்தில் உடலுக்கு உஷ்ணத்தையும் வலிமையையும் தருவதாக அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது வீட்டுத் தயாரிப்புகளில் உலவ சாறு இல்லாமலே போய்விட்டது எனலாம்.
4. கிராம மக்கள் அனைவருக்கும் உணவாயிருந்த மஹுவா பூக்கள் (Mahua flower): உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் என்ற கிராமத்துப் பழங்குடி மக்கள் அதிகாலையில் காட்டிற்குள் சென்று, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மஹுவா பூக்களை சேகரித்து வந்து, அவற்றை காய வைத்து ஜாம், லட்டு, புளிக்க செய்த பானங்கள் போன்ற பல வகையான உணவுகளில் சேர்த்து வருடம் முழுவதும் உட்கொண்டு வந்தனர். பாரம்பரியமாக இப்பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் போதை தரும் ஒரு வகை பானமானது விழாக்களின்போது அருந்தப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே தற்போது வீடுகளில் இதன் பயன்பாடு முற்றிலுமாக குறைக்கப்பட்டு விட்டது. ஆனால், தற்போது நகரங்களில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட 'மஹுவா ஒயின்' தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. களரி (Kalari) எனப்படும் நாடோடிகளின் சீஸ்: ஜம்மு மாநிலத்தின் உயர்ந்த மலைகள் மீது குஜ்ஜார் இனத்தை சேர்ந்த நாடோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாலைத் திரித்து (curdle) அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பொருளைத் திரட்டி வட்ட வடிவங்களாக்கி வெயிலில் காய வைத்து எடுப்பர். பின் அதை நெய்யில் பொரித்தெடுத்து சேமித்து வைத்துக்கொண்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நடைப்பயணம் மேற்கொள்ளும்போது அதை சாப்பிட்டுக்கொண்டே செல்வதுண்டு.
களரி வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் உள்பக்கம் நெகிழ் தன்மை கொண்டு மொஸ்ஸெரெல்லா சீஸ் போல் இருக்கும். கால்நடைகளை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாகத் திரிந்த மக்களின் அடுத்த தலைமுறையினர் ஒரே இடத்தில் செட்டிலாகி விட்ட காரணத்தினால் களரி தயாரிக்கும் தேவை குறைந்து இந்த வகை உணவு மக்களிடையே மறந்து போய்விட்ட பொருளாக ஆகிவிட்டது.