அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சு கொண்டதாக இருக்கும். பொங்கல் வந்து விட்டாலே சுண்ணாம்பை ஊற வைத்து, வீட்டிற்கு வெள்ளையடிக்கத் துவங்கி விடுவர். ஊரே பளிச்சென்று இருக்கும். இப்போதெல்லாம் அடர் வண்ணங்களில் வர்ணம் அடிப்பதை ஃபேஷன், வாஸ்து என்கின்றனர்.
மேலை நாடுகளில் குளிர் எப்போதும் இருப்பதால் அடர் வண்ணங்களில் வர்ணம் பூசுவார்கள். அடர் வண்ணம் வெப்பத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் அங்கு கதகதப்புக்கு அடர் வண்ணங்களைப் பூசுகின்றனர். ஆனால் இங்கு அடர் வண்ணங்கள் வெயிலின்போது வெப்பத்தை உறிஞ்சிக் கொள்வதால் அறைகளில் வெப்பத்தை உயர்த்தி விடும்.
இதன் மூலம் கோடைக் காலத்தில் மின்விசிறியை போட்டதுமே உஷ்ணக் காற்று உருவாவதை உணர முடியும். இதைத் தவிர்க்க வெள்ளை பூச்சை அடிக்கலாம். இது வெப்பத்தை கிரகிக்காது. இதன் மூலம் நாம் புவி வெப்பமடையாமல் இருக்க மறைமுகமாக உதவுகிறோம். வீட்டிற்கு நல்ல வெளிச்சத்தை தருவதால் மின்சார பல்ப்களின் பயன்பாட்டை சற்று குறைக்கலாம்.
வீட்டின் மேற்கூரை, சுற்று சுவர்களில் வெள்ளை பூச்சை அடிக்க வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலையைக் கொடுக்கும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தை ஏற்காது. இதனால் வீடு உஷ்ணமாவது கணிசமாக குறைவதால் வண்ணம் மாறும் என்ற பயம் இல்லை. நல்ல வெளிச்சம், காற்றோட்ட த்தை தந்து மனதுக்கு இதமளிக்கும்.
வெப்பம் அதிகம் வீட்டினுள் வராததால் மின்விசிறி, ஏ.சி. பயன்பாடு குறையும். ஏ.சி. பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் மாசாவது தடுக்கப்படும். அடர் வண்ணங்கள் வெளிச்சத்தை மட்டுப்படுத்தும். ஆனால், வெள்ளையடிப்பதால் சுவரின் பொலிவு கூடுவதோடு பூச்சி, கரையான் அரிப்பைத் தடுக்கும்.
மழைக்காலங்களில் பாசி மற்றும் தூசி படிந்து வண்ணம் மாறும் என்ற பயம் இல்லை. வெள்ளை வண்ணத்தை தேர்ந்தெடுப்போம். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இடமாக இல்லத்தை மாற்றுவோம்.