இடுப்பு வலி என்பது பொதுவாக அடிவயிற்றின் கீழ்பகுதியில், தொப்புளுக்குக் கீழே மற்றும் இடுப்புக்கு இடையில் உணரப்படுகிறது. சில சமயங்களில் எந்தவித சிகிச்சையும் இன்றி இடுப்பு வலி தானாகவே சரியாகிவிடும். இடுப்பு வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இடுப்பு வலிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நாள்பட்ட இடுப்பு வலி மற்றும் கடுமையான இடுப்பு வலி. நாள்பட்ட இடுப்பு வலியானது இரண்டு மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து இருக்கும். ஆனால், கடுமையான இடுப்பு வலி என்பது அதிக தீவிரத்துடன் வந்து சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும்.
இடுப்பு வலியின் அறிகுறிகள்: அடிவயிற்றில் அசௌகரியமாக உணர்வது, காலையில் எழுந்ததும் இடுப்பு பகுதியில் விறைப்பு தன்மையும், வலியையும் உணர்வது, முழங்காலை நம் மார்பு பகுதியை நோக்கி உயர்த்த முயற்சிக்கும் பொழுது வலியை உணர்வது, இடுப்பு அல்லது தொடை பகுதியில் வீக்கம், நடக்க முடியாமல் நொண்டிக்கொண்டு நடப்பது, தூங்க முடியாமல் இடுப்புப் பகுதியில் படுத்ததும் வலியை உணர்வது.
இடுப்பு வலி வரக் காரணம்: இடுப்பில் வலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் காயம், கீல்வாதம், சிறுநீர் பாதையில் தொற்று, குடலிறக்கம், இடுப்பு நெகிழ்வு பிரச்னைகள், சிறுநீரகக் கற்கள் மற்றும் எலும்பு முறிவு போன்றவை காரணமாக இருக்கலாம்.
பெண்களுக்கு இடுப்பு வலி வரக் காரணங்கள்:
எக்டோபிக் கர்ப்பம்: கருவானது கர்ப்பப்பைக்கு வெளியே உருவாகுதல்.
கருப்பை நீர்க்கட்டிகள்: கருப்பை திரவத்தால் நிரப்பப்பட்டு நீர் கட்டிகள் உருவாகுதல்.
இடுப்பு அழற்சி நோய்: இது இனப்பெருக்க உறுப்பில் தொற்று ஏற்படுவதன் காரணமாக உண்டாகலாம்.
தீர்வுகள்: இடுப்பு வலிக்கு வீட்டு வைத்தியம் என்பது நல்ல ஓய்வு எடுப்பது, அதிக எடை உள்ள பொருட்களை தூக்காமல் இருப்பது, வலி நிவாரணிகளான ஆயின்மெண்ட், களிம்பு, ஜெல்களை உபயோகிப்பது போன்றவை நல்ல பலன் அளிக்கும். ஹீட்டிங் பேடை பயன்படுத்துதல், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, இடுப்பு தசைகளை தளர்த்துவது வலியை குறைக்க உதவும்.
உடற்பயிற்சி செய்வது, இடுப்பில் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க மென்மையான நீட்சிப் பயிற்சிகள் செய்வது இடுப்பு பகுதியின் தசைகளை வலுப்படுத்த உதவும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். வலி கடுமையாக இருந்து நீண்ட நேரம் நீடித்தால் மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். மருத்துவப் பரிசோதனைகள் மூலம் வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சைகளையும் பரிந்துரைப்பார்.
இடுப்பு வலிக்கு அதன் அடிப்படை காரணத்தைப் பொறுத்து பல சிகிச்சை முறைகள் உள்ளன. வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஹார்மோன் தெரபி, கடுமையான வலி மற்றும் பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண்பது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இடுப்பு வலி ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தாலோ, அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கடினமாக இருந்தாலோ மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.