குழந்தைகளுக்கு டிஸ்போசபிள் டயப்பர்கள் அணிவிப்பதன் மூலம் அவர்களுக்கு பலவிதமான அசௌகரிங்கள் உண்டாகின்றன. ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதால், அவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஏற்றதாக இல்லை. ஆனால், மீண்டும் பயன்படுத்தக்கூடிய (Reusable) டயப்பர்கள் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலம் அடைந்துள்ளன.
இவை துணி டயப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன. பருத்தி, மூங்கில் அல்லது மைக்ரோஃபைபர் போன்ற பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்படுபவை. இவற்றை பலமுறை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம். பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆல் இன் ஒன், ஆல் இன் டு, பாக்கெட் டயப்பர்கள் மற்றும் ஹைபிரிட் டயப்பர்கள் போன்ற வெவ்வேறு பாணிகளில் அவை கிடைக்கின்றன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்களின் வகைகள்:
ஆல் இன் ஒன் (AI -1) டயப்பர்கள்: இந்த டயப்பர்கள் நீர் புகாவண்ணம் வெளிப்புற அடுக்கு மற்றும் உறிஞ்சக்கூடிய உள் அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்துவது எளிதானது மற்றும் வசதியானது.
ஆல் இன் டு டயப்பர்கள்(AI 2): இந்த டயப்பர்கள் நீர் புகா வெளிப்புற அடுக்கு மற்றும் நீக்கக்கூடிய, உறிஞ்சக்கூடிய உள் அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இது முழு டயப்பரை மாற்றாமல் உட்புற அடுக்கை மட்டும் மாற்றிக்கொள்ளும்படியான பாணியில் அமைந்துள்ளது.
பாக்கெட் டயப்பர்கள்: இந்த டயப்பர்கள் நீர் புகா வெளிப்புற அடுக்கு மற்றும் செருகக்கூடிய வகையில் பின்புறத்தில் ஒரு திறப்பையும் கொண்டுள்ளன.
ஹைபிரிட் டயப்பர்கள்: இவை பல்வேறு வகையான மறு பயன்பாட்டு டயப்பர்களின் வசதிகளை ஒருங்கிணைத்து வழங்குகின்றன.
மறு பயன்பாட்டிற்கு உதவும் டயப்பர்களின் நன்மைகள்:
சுற்றுச்சூழல் நன்மைகள்: டிஸ்போசபல் டயப்பர்களைப் போல சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இவை இருக்கின்றன. மீண்டும் மீண்டும் இவை பயன்படுத்தப்படுவதால் குப்பைத் தொட்டிகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் குறைக்கிறது.
இயற்கை வளங்களை பாதுகாத்தல்: மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்கள் இயற்கை வளங்களான மூங்கில், பருத்தி, சணல், கம்பளி போன்றவற்றிலிருந்து செய்யப்படுகின்றன.
குறைந்த கார்பன் தடம்: டிஸ்போசபிள் டயப்பர்களை விட மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்களுக்கு குறைந்த ஆற்றலும் தண்ணீரும் தேவைப்படுகின்றன.
குறைந்த செலவு: மறுபடியும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்களின் ஆரம்ப விலை டிஸ்போசபிள் டயப்பர்களை விட அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை பலமுறை, நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதால் செலவு குறைவாகவே இருக்கும். டிஸ்போசபிள் டயப்பர்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் நாம் அதிக அளவு பணத்தை சேமிக்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்: டிஸ்போசபிள் டயப்பர்களில் இருப்பதைப் போன்ற ரசாயனங்கள், சாயங்கள், திரவங்கள் போன்றவை இவற்றில் இல்லை. இதனால் குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு இவை மிகவும் ஏற்றவை. எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற எதிர் விளைவுகளின் அபாயத்தைக் குறைக்கின்றன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்கள் ஈரப்பதத்தை உறிஞ்சும் வண்ணமும் நல்ல காற்றோட்டத்தை அனுமதிக்கும் வகையிலும் இருப்பதால் குழந்தைகளின் சருமத்தை வறண்டதாக வைக்கிறது. இவை வசதியாகவும் இருக்கின்றன. வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளுக்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ளலாம்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்களை வீட்டிலேயே கழுவி உலர வைக்கலாம். இது பயணத்தின்போது பெற்றோருக்கு வசதியாக இருக்கும். இவை தீர்ந்து போனாலும் அல்லது கடைசி நிமிஷத்தில் கடைக்கு சென்று அவசரமாக வாங்குவது போன்ற சிக்கல்களை பெற்றோருக்குத் தருவதில்லை.
காட்டன் டயப்பர்களை தயாரிப்பதற்கும் மீண்டும் மீண்டும் துவைப்பதற்கும் ஆகும் செலவு குறைவது மட்டுமல்லாமல், டிஸ்போசபிள் டயப்பர்களை தயாரிக்க பயன்படுத்தும் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பு ஏற்படுவது போல இதில் தீங்குகள் ஏதும் இல்லை.