கிருத்திகை நட்சத்திரம் என்று சொல்லப்படுவது கார்த்திகை. இந்த நட்சத்திரத்திற்குரிய விசேஷமான மாதம் கார்த்திகை மாதம் ஆகும். சந்திரன் சஞ்சரிக்கும் பாதையில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தை சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். ஏற்றிய விளக்கு போல் செண்டு போல் இருக்கும் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பே கார்த்திகை நட்சத்திரம் ஆகும். ‘கிருத்திகா ப்ரதமம்’ என்கிறது வேதம். கார்த்திகை நாளில் விளக்கு ஏற்றுவது விசேஷம்.
சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து ஆறு தீப்பிழம்புகள் தோன்றின. வாயு பகவான் அந்தத் தீப்பிழம்புகளை சரவணப் பொய்கையில் சேர்த்தார். ஆறு தீப்பிழம்புகளும் ஆறு குழந்தைகள் ஆயின. அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் ஆறு பேர் வளர்த்தனர். அந்தப் பெண்கள் சரவண பொய்கைக்கு வருகை தந்த சிவபெருமானையும் உமா தேவியையும் வணங்கினர்.
அப்போது சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் கொடுத்தார். “கார்த்திகை நட்சத்திரங்களாகிய நீங்கள் முருகப்பெருமானை வளர்த்தமையால் அவன் கார்த்திகேயன், கார்த்திகை செல்வன் எனப்படுவான். அவனை வளர்த்த உங்களுக்குரிய கார்த்திகை நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்” என்பது சிவன் தந்த வரம்.
கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு கிருத்திகையிலும் விரதம் இருக்க வேண்டும். இப்படி பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் பெறலாம்.
காவிரி பூம்பட்டினத்தின் ஒரு பகுதி திருச்சாய்க்காடு. இங்குள்ள சாயாவனேஸ்வரர் கோயிலில் வில்லேந்திய வேலவனின் பஞ்சலோகச் சிலை உள்ளது. நான்கு கரங்களையுடைய திருமேனி இது.
வயலூர் முருகனுக்கு கார்த்திகை தீபத்திருநாளில் இரும்பால் செய்யப்பட்ட வேல் காணிக்கை வழங்கும் வழக்கம் உள்ளது. இதனால் துர்தேவதைகளின் மூலம் ஏற்பட்ட நோய் நீங்கி, பக்தர்கள் நல்வாழ்வு பெறுகின்றனர்.
ஒரு சமயம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மொடச்சூர் சிவன் கோயில் தண்ணீர் இல்லாத நிலைமையில் இருந்தது. அப்போது இக்கோயிலுக்கு வந்த அகத்தியர், இங்கு தண்ணீர் இல்லாததைக் கண்டு வருண பகவானை வேண்டி இடி விழும்படி செய்தார். இடி விழுந்த இடத்திலிருந்து தண்ணீர் பொங்கிப் பிரவாகித்தது. இந்தக் கோயிலில் அருள்புரியும் முருகன் பக்தர்களின் கோரிக்கைகளை செவி சாய்த்துக் கேட்பதால் இவரை செவி சாய்த்த முருகன் என்று அழைக்கின்றனர்.
மானாமதுரை தலத்தில் உள்ள சிவன் கோயிலில் குடைவிரிக்கும் ஐந்து தலை நாகத்துடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். அதேபோல், வஜ்ராயுதம் ஏந்திய முருகப்பெருமானை சுவாமி மலையிலும், திருவிடைசுழி தலங்களிலும் தரிசிக்கலாம்.
அழகாபுத்தூர் அழகம்மை கோயிலின் முருகன் பெயர் சுந்தர சுப்பிரமணியர் என்பதாகும். வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகங்கள் பன்னிரண்டு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் சங்கு ஏந்தி காட்சி தருகிறார்.
திருச்செங்கோட்டில் உள்ள செங்கோட்டு வேலவன் கோயிலில் முருகப்பெருமான் உருவம் பழைமையானது. இங்கு முருகன் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடி காட்சி தருகிறார்.
படைப்புத் தொழிலை செய்தபோது இருந்த அமைப்பில் முருகப்பெருமான் ஐந்து முகம் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் மிகவும் அபூர்வமாகக் காட்சி தரும் திருததலம் கோவை மாவட்டம், இரும்பறை தலமாகும்.
கோபிசெட்டிபாளையம் ஆண்டவர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இவ்வூரில் உள்ள மூன்று மலைகளில் முருகப்பெருமான் வெவ்வேறு வடிவில் காட்சி தருகிறார். பச்சைமலையில் பாலமுருகன், பவளமலையில் முத்துக்குமாரசாமி, ஆண்டவர்மலையில் பாலதண்டாயுதபாணியாகக் காட்சி தருகிறார்.
திருக்கார்த்திகை நாளில் தீபமேற்றி கந்தனை வணங்கி அருள் பெறுவோம்.