
வசதியான வாழ்க்கையை வாழ ஒரு துறவியைப் போல வாழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சற்று விழிப்புடன் வாழ்ந்தால் வசதியாக வாழலாம். அதற்குக் கடன் அட்டையை ஸ்வைப் செய்வதற்கு முன்பு சிலவற்றை யோசிக்க வேண்டும். ‘இந்தப் பொருள் இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? இது நமக்கு அவசியமா? இதனால் கடன் அழுத்தத்திற்கு ஆளாகுவோமா’ என்று சிந்தித்தாலே போதும். தேவையற்ற செலவுகளைச் செய்ய மாட்டோம்.
குறிக்கோள் அவசியம்: வாழ்க்கையில் எதிலுமே ஒரு குறிக்கோளைக் கொண்டு வாழ்வது முக்கியம். அப்பொழுதுதான் அதை அடைவதற்காக நன்கு உழைக்க ஆரம்பித்து விடுவோம். கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது. ஒன்றை அடைய வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டால் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற தேவையற்ற சிந்தனை கூடாது. குறுகிய மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
அவசரம் கூடாது: சினிமாவில் வேண்டுமானால் ஒரே பாட்டில் கார், பங்களா வசதியுடன் பணக்காரராவது போல் காட்ட முடியும். அது திரைப்படத்தில்தான் சாத்தியம். நிஜத்தில் அவசரம் கூடாது; பொறுமை மிகவும் அவசியம். அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம். நாம் எந்த அளவுக்கு கடின உழைப்பையும், சமயோசித புத்தியையும் பயன்படுத்துகிறோமோ அதுவே நமக்குண்டான பலனைத் தரும்.
ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாது: இருப்பது போதும் என்ற மனப்பான்மை வந்தால் நம்மால் புதிதாக எதையும் முயற்சி செய்ய முடியாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வசதி வாய்ப்புகள் கூட வேண்டும் என்றால் ரிஸ்க் எடுக்கத் தயங்கக் கூடாது. புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு, கடினமாக உழைத்து இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். எல்லாவற்றையும் இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருக்க வேண்டும். அடிமட்டத்திலிருந்து திரும்ப ஆரம்பிக்க வேண்டிய நிலை வந்தாலும் கலங்காமல் முயற்சிக்க வேண்டும்.
கடனைத் தவிர்க்கவும்: கடன் அன்பை மட்டும் முறிக்காது. நம் வாழ்க்கையையும் முறித்து விடும். கடன் இல்லாமல் இருப்பதே ஒரு வகை செல்வம்தான். வாழ்வில் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். செலவுகளைக் குறைத்து, வருமானத்தைப் பெருக்கும் வழிகளைத் தேட வேண்டும். நிதி அறிவு மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, வாழ்க்கையில் முன்னேறி செல்வந்தராக மாற உதவும். புதிய தொழில் வாய்ப்புகளைத் தேடுவதும், ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களை உருவாக்குவதும் வசதியாக வாழ்வதற்கான வழியாகும்.
நேரத்தை நிர்வகிக்கவும்: ‘காலம் பொன் போன்றது’ என்பார்கள். நேரம் பணத்தை விட மிகவும் முக்கியம். பணக்காரர்கள் தங்களது ஒவ்வொரு நிமிடத்தையும் அருமையாகப் பயன்படுத்துவார்கள். வசதியாக வாழ்வதற்கு நேரத்தை நிர்வகிப்பது என்பது இலக்குகளை நிர்ணயித்து, பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, நம்முடைய நேரத்தை புத்திசாலித்தனமாகவும், திறமையாகவும் பயன்படுத்துவதாகும். இது நேரத்தை நிர்வகிப்பது மட்டுமல்ல, நம்மை நாமே நிர்வகிப்பதாகும்.