
உணவுப்பொருட்களில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கலப்பட பொருட்களை நாம் உட்கொள்ளும் போது அது நம் உடலில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. மிளகு, மிளகாய் தூள், அரிசி, தேன் இப்படி அனைத்து சமையல் பொருட்களிலும் கலப்படம். இதனாலேயே தற்போது உண்மையான பொருளின் தரம், ருசி, மணம் மக்களுக்கு மறந்து போய்விட்டது. உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் புதிய யூத்திகளை கையாண்டு கலப்பட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
கலப்பட பொருட்களை உணவில் சேர்ப்பதன் மூலம் எதிர்வினைகள், செரிமான பிரச்சனைகள் மற்றும் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மக்கள் தான் விழிப்புணர்வுடன் சிந்தித்து கலப்பட பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்தால் தான் நாம் நலமுடன் வாழ முடியும். அன்றாடம் நாம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களில் இருக்கும் கலப்படங்களை நாமே பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம்.
உணவுப்பொருட்களின் கலப்படம் அதிகரித்து வரும் அதேவேளையில், தற்போது போலி பூண்டு சமையலறைக்குள் நுழைந்திருக்கிறது. வித்தியாசத்தை அறிந்து அதை தவிர்த்தால் மட்டுமே சுகாதார கேடுகள் வராமல் தடுக்க முடியும். போலி பூண்டை கண்டறிய சில வழிகள் உள்ளன. கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி போலி பூண்டை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.
நிறம், அமைப்பு, வாசனை மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றைச் சரிபார்த்து நீங்கள் போலி பூண்டை அடையாளம் காணலாம்.
* உண்மையான பூண்டு பொதுவாக வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் போலியான பூண்டு மிகவும் வெண்மையாக இருக்கலாம் அல்லது நீல நிறத்தில் இருக்கலாம்.
* உண்மையான பூண்டு ஒரு உறுதியான, சற்று கடினமான அமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் போலி பூண்டை அழுத்தி பார்த்தால் ரப்பர் போன்று அல்லது மிகவும் மென்மையானதாக உணரலாம்.
* உண்மையான பூண்டை குறிப்பாக நசுக்கும் போது அல்லது வெட்டும்போது, கூர்மையாகவும், காரமாகவும், பச்சையாக இருக்கும்போது சிறிது கசப்பாகவும் இருக்கும். போலி பூண்டு ரசாயனங்களின் சுவையைக் கொண்டிருக்கலாம்.
* உண்மையான பூண்டு குமிழ்கள் பொதுவாக ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும், மேலும் சில சிராய்ப்புகள் அல்லது கறைகள் இருக்கலாம். போலி பூண்டு குமிழ்கள் பெரும்பாலும் மிகவும் சரியானதாகவும் சீரானதாகவும் தோன்றும்.
போலி பூண்டை அடையாளம் காண மற்ற வழிகள் :
* பூண்டில் வேர்கள் உள்ளதா என்று பாருங்கள். அதாவது உண்மையான பூண்டு பல்களில் பெரும்பாலும் சிறிய வேர்கள் கீழே இருக்கும்.
* விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக அதிகளவு பூண்டை வாங்காதீங்க. ஏனெனில் மிகக் குறைந்த விலை கொண்ட பூண்டு மிகவும் தரம் குறைந்ததாக இருக்கும்.
* உண்மையான பூண்டை கண்டறிய அதை தண்ணீர் போடுங்கள். அப்படி போடும் போது உண்மையான பூண்டு தண்ணீரில் மூழ்கும், அதே நேரத்தில் போலி பூண்டு மிதக்கும். இதை வைத்தும் உண்மையான பூண்டு எது, போலியானது எது என்று கண்டறிந்து விடலாம்.