
அன்று குடிநீர் குழாய் வழியே குறிப்பிட்ட நேரத்தில் நம் வீடு தேடி வந்து குடங்களில் அவற்றை சேமித்து மெலிதாக வரும் குளோரின் மணத்துடன் குடித்த சுகம் இன்று இல்லை. சில கிராமங்கள் ஊர்கள் தவிர்த்து பெரும்பாலும் நகரங்களில் தினமும் குடுவை போன்ற பிளாஸ்டிக் கேன் தண்ணீரை கொண்டு வந்து இளைஞர்கள் வீடுகளில் தரும் காட்சியைக் காணலாம். காலம் மாறி விட்டதால், தண்ணீரைக் கூட காசு தந்து வாங்கும் நிலை. இருந்தாலும் கேன் தண்ணீர் ஆரோக்கியமானதா? எனும் சந்தேகமும் நம் மனதில் உண்டு.
எங்கோ சிலர் செய்யும் அலட்சியத்தால், கேன் தண்ணீர் பல கேடுகளைத் தருகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து தரப்பினருக்கும் எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற புகார்கள் தந்த விழிப்புணர்வால் தற்போது பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் குடிநீரின் தரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை சில வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டுள்ளது.
என்னென்ன விதிமுறைகள்?
குடிநீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதியை வெளிப்படையாக அச்சிடுதல், குடிநீர் சுத்திகரிப்பு முறைகளை முழுமையாக பின்பற்றுதல் ஆகியவைகளுடன் சூரிய ஒளி படும்படி குடிநீர் குடிநீரை தேக்கி வைக்கக் கூடாது என்றும் மாதம் தோறும் குடிநீரின் தரத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி கண்காணித்து அறிக்கையை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குடிநீரில் உள்ள கால்சியம் மெக்னீசியம் அளவுகள் மற்றும் உப்பு, தாதுக்கள் உள்ளிட்ட திடப்பொருட்களின் அளவும் உட்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும் என்பதை கவனமாக பின்பற்ற வலியுறுத்துகிறது.
அத்துடன் குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும் எனவும் கேன்களின் நிறம் மாறும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இதுபோன்ற விதிகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேன் தண்ணீர் மட்டுமல்ல ஒருமுறை பயன்படுத்தி தூக்கிப் போடும் பாட்டில் குடிநீரின் பயன்பாடும் தற்போது பெருகியுள்ளது. ஏனெனில், பாட்டில் தண்ணீர் எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக் கூடியது. சிலர் இதன் சுவையை விரும்புகிறார்கள்.
ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் அகற்றல் மாசுபாடு மற்றும் கழிவுகளுக்கு பங்களிப்பதைப் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறோமா? பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் விலை உயர்ந்ததாக இருப்பதும், தரத்தில் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் ஒழுங்கற்ற தொழில் முறையும், தவிர்க்கப்பட்ட காலாவதி தேதி மற்றும் விபரங்களும் பாட்டில் தண்ணீருக்கு பாதுகாப்பற்ற தன்மையைத் தருகிறது.
தவிர்க்க முடியாத சூழலில் நீங்கள் பாட்டில் தண்ணீரை விரும்பினால், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங்கைப் பயன்படுத்தும் பிராண்டுகளைத் தேடுங்கள் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
இதையெல்லாம் தவிர்க்க மலிவானது மற்றும் எளிதாக அணுகக்கூடிய குழாய் நீர் வரும் பட்சத்தில் அதை பயன்படுத்துவதே சிறந்தது என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள். குழாய் நீர் சுற்றுச்சூழல் நிறுவனங்களால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான தரத்தை உறுதி செய்கிறது.
ஆகவே, கேன் தண்ணீர் மற்றும் குழாய் நீர் எதுவாயினும் குடிக்க பாதுகாப்பானதா? என்பதைத் தீர்மானித்து அதன் சுவை மற்றும் தரத்தை மேம்படுத்த வீட்டிலேயே ஒரு நீர் வடிகட்டியைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்வது நல்லது. தண்ணீரை நன்கு காய்ச்சி, கொதிக்கவைத்து, ஆறியதும் பருகுவது பெஸ்ட்.