

தமிழ் நாட்டு கலாச்சாரப்படி, இங்குள்ள குடும்பங்களில் புதிதாக ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டால், அப்போதிருந்தே அந்தக் குழந்தைக்கு அதன் பெற்றோர் தங்க நகைகளை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிடுவர். அப்படி சேர்த்தால்தான் அந்தக் குழந்தை வளர்ந்து திருமண வயதை எட்டும்போது, மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் நகையை சுலபமாக கொடுத்து பெண்ணை புகுந்த வீட்டுற்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அளவுக்கு ஒரு பெண்ணின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு மதிப்பு மிக்க உலோகத்திலான பொருளை (நகையை) வாங்கும்போதும், அதை வீட்டில் வைத்துப் பத்திரப்படுத்திப் பராமரிக்கும்போதும் என்னென்ன பாதுகாப்பு வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்க நகைகளை தயார் பண்ணி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், தங்கம் என்ற உலோகத்தை உருக்கி அதனுடன் சிறிதளவு, சிவப்பு மற்றும் பிரவுன் ஆகிய இரண்டு நிறங்களும் கலந்த செம்பு (copper) என்னும் தாது உலோகத்தை கலந்து நகைகளை தயாரிப்பது வழக்கம். செம்பு சேர்க்காமல் தங்க நகைகள் செய்ய முடியாது. அப்படி செய்தால் அவை உடைந்துவிடும்.
தங்க நகை வாங்கும்போது அதில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) வழங்கும் BIS Hallmark பொறிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதித்துப் பார்ப்பது அவசியம். நகை மீது எங்காவது ஓரிடத்தில் 22K 916 என்று குறிப்பிட்டிருந்தால் அதில் 91.6% தூய தங்கம் என்றும், 18K 750 என்றிருந்தால் அதில் 75% தூய தங்கம் என்றும், 14K 585 என்ற குறியீடிருந்தால் அதில் 58.5% தூய தங்கம் உள்ளதென்றும் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து, நாம் வாங்க நினைத்திருக்கும் நகையில் எந்த விகிதத்தில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் கலந்துள்ளன என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
காந்தப் பரிசோதனை (Magnetic Test):
காந்தம் ஒரு தங்க நகையை பொதுவாக ஈர்க்காது. அப்படி இல்லாமல் அந்த நகை காந்தத்தோடு ஒட்டிக்கொண்டு வந்தால் நகையில் பிற உலோகங்களின் கலப்பு அதிகம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனை நூறு விகிதம் நம்பகமானது என கூற முடியாது.
தங்கத்தின் மீது ஆசிட் விட்டுப் பார்த்தும் அதன் தூய்மையை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நிபுணர்களால் மட்டுமே இதை செய்ய முடியும்.
தனிஷ்க் (Tanishq) போன்ற சில உயர்தரமான தங்க நகைக் கடைகளில் காரட்மீட்டர் (Karatmeter) என்றொரு மெஷின் உள்ளது. நாம் நம் பழைய நகைகளை மாற்றுவதற்கு கொண்டு செல்லும்போதும், புதிய நகையை வாங்கும்போதும், இந்த மெஷின் மூலம் நகைகளின் தூய்மையை (purity) நிமிடத்தில், நகைக்கு எந்த சேதமுமின்றி துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
நம் கண் முன்னாடியே, நகையில் என்னென்ன உலோகங்கள், எத்தனை சதவிகிதம் கலந்துள்ளன என்பதை பட்டியலிட்டுக் காண்பித்துவிடும் இந்த மெஷின்.
இவ்வாரெல்லாம் கவனமாக நாம் வாங்கி அணியும் தங்க நகைகள் சில நேரம் கருமை நிறமுற்ற தோற்றமளிக்க ஆரம்பிக்கும். அதற்கான காரணங்கள் இதோ:
1. தொடர்ந்து ஒரு நகையை அணிந்து கொண்டிருக்கும் போது, உடலிலிருந்து வெளியேறும் வியர்வை மற்றும் உடல் எண்ணெயில் உள்ள உப்பு மற்றும் அமிலங்கள் நகையின் மேற்பரப்பில் பட்டு உலோகங்களுடன் வினை புரிந்து கருமையை உண்டு பண்ணலாம்.
2. தங்க நகையில் கலந்திருக்கும், செம்பு, வெள்ளி போன்ற பிற உலோகங்கள் காற்று, வியர்வை, ஈரப் பதம் போன்றவற்றுடன் சேர்ந்து வினை புரிந்து கருமையை உண்டு பண்ணலாம்.
3. உடலில் பூசும் வாசனைத் திரவியங்கள், கிரீம், சோப்பு, லோஷன், ஷாம்பு போன்றவற்றில் உள்ள இரசாயனப் பொருட்களும் நகைகள் பளபளப்பு குன்றி மங்கிய தோற்றம் பெற செய்து விடும்.
4. நகையில் கலந்திருக்கும் பிற உலோகங்களின் எண்ணிக்கையும் அளவும் அதிகம் இருந்தாலும் தங்க நகை கருத்துக் காணப்பட வாய்ப்புண்டு.
வீட்டிலேயே, தங்க நகையை, சில துளி மென்மையான லிக்விட் சோப் கலந்த வெது வெதுப்பான நீரில் போட்டு 10-15 நிமிடம் ஊற வைத்துப் பின் மென்மையான பிரஷ் வைத்து எல்லா பக்கமும் மிருதுவாக சுத்தம் பண்ணினால் அதன் மீதுள்ள தூசு, அழுக்கு எல்லாம் நீங்கி மீண்டும் அது பளபளப்பு பெறும். அப்படியும் கருமை நிறம் மாறவில்லை என்றால், நகைக் கடைக்கு சென்று தொழில் முறையில்
சுத்தப்படுத்தி வாங்கலாம் அல்லது கடைக்காரரின் ஆலோசனை பெற்று, கருமைக்கான உண்மையான காரணத்தை கேட்டறிந்து மாற்று வழியை பின்பற்றலாம்.
உச்சிக்கு சென்று விட்ட தங்கத்தின் விலையை மனதில் கொண்டு, நகைகளை வாங்கும் போதும் அணிந்து கொள்ளும் போதும் மிக மிக கவனம் கொள்வோம்.
தங்கத்தின் தூய்மைக் குறியீடுகளான 22K, 18K மற்றும் 14K ஆகியவற்றின் வித்தியாசங்களைப் புரிந்து கொண்டு, உங்களுக்கான சரியான நகையை எவ்வித சந்தேகமுமின்றி தேர்வு செய்யும் தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள்.