

“ரத்தம் ஒன்றுதான் உறவை நிர்ணயிக்குமா?” என்ற கேள்வியை இன்று நாம் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் அருகருகே வாழ்ந்தாலும் மனதளவில் தொலைவில் நிற்கிறார்கள். அதே நேரத்தில், ரத்தத் தொடர்பே இல்லாத சிலர் நம் துயரத்தில் தோள் கொடுத்து, மகிழ்ச்சியில் மனமாரப் பங்கெடுக்கிறார்கள். இதுவே இன்றைய உறவுகளின் முரண்பாடான நிலை.
முந்தைய தலைமுறையினர் உறவுகளை மேம்படுத்தக் கூடிய சூழல் இருந்தது. பொதுவாகவே அவர்களின் வீட்டில் உறவுகளுடன் இணைந்த வாழ்க்கை முறையாக தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா என உறவுகளின் வட்டம் பெரிதாக இருந்தது. அதாவது கூட்டுக்குடும்பங்கள் தான் இருந்தன.வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி என்றாலும், துக்க நிகழ்ச்சி என்றாலும் அனைவரும் ஒன்று கூடுவார்கள்.
நோய்வாய்ப்பட்டவரைப் பார்த்துக்கொள்வதும், குழந்தைகளை வளர்ப்பதில் உதவுவதும் இயல்பான கடமையாக இருந்தது. “உன் பிரச்சனை” என்ற வார்த்தைக்கு இடமில்லாமல், “நம் பிரச்சனை” என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.
இன்று தொழில்நுட்பம் உலகத்தை நெருக்கமாக்கி விட்டது; ஆனால் மனிதர்களின் மனங்களைச் சில நேரங்களில் தூரமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், உண்மையான கவலையைப் பகிர்ந்துகொள்ள ஒருவரைத் தேடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திருமணம், சொத்து, பணம், பதவி போன்ற காரணிகள் சில உறவுகளின் மதிப்பை நிர்ணயிக்கத் தொடங்கியுள்ளன.
தேவையிருக்கும்போது மட்டும் அன்பு காட்டும் உறவுகளும் பெருகியுள்ளன. முகத்தில் புன்னகையும், மனதில் கணக்கும் வைத்திருக்கும் பந்தங்கள், ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளாக இருந்தாலும் உயிர் உறவுகளாக முடியாது.
ரத்த பந்தத்தை விட உயர்ந்த பாசம்
உறவின் உண்மையான அளவுகோல் ரத்தம் அல்ல; அன்பும் நம்பிக்கையும். நாம் விழும்போது கை கொடுப்பவர், தோல்வியின்போது தைரியம் சொல்பவர், வெற்றியின்போது பொறாமையின்றி மகிழ்பவர். அவர்தான் உண்மையான உறவினர்.
சில நண்பர்கள் காலப்போக்கில் குடும்பத்தைவிட நெருக்கமானவர்களாகி விடுகிறார்கள். அத்தகைய மனிதர்கள்தான் “உயிர் உறவுகள்”. அவர்களுடன் பகிரப்படும் ஒரு தேநீர் நேரம்கூட, பல பெரிய விருந்துகளைவிட மனதுக்கு நிறைவாக இருக்கும்.
மீண்டும் மலர வேண்டிய மனிதநேயம்
அன்றைய உறவுகளை அப்படியே திரும்பக் கொண்டுவர முடியாது. காலமும் வாழ்க்கை முறையும் மாறிவிட்டன. ஆனால் அந்த உறவுகளின் அடிப்படையாக இருந்த அன்பு, விட்டுக்கொடுத்தல், பரிவு, பகிர்வு ஆகியவற்றை மீண்டும் நம் வாழ்வில் கொண்டுவர முடியும்.
நேரம் கிடைக்கும்போது என்று இல்லாமல் நம் நேரத்தை ஒதுக்கி ஒரு தொலைபேசி அழைப்பு, அல்லது எதிர்பாராத சந்திப்பு, போன்ற செயல்கள் மூலம் உறவுகளுக்கு உயிர் கொடுக்கலாம்.
நாம் கேட்கும் “எப்படி இருக்கிறாய்?” என்ற ஒரு உண்மையான கேள்வி போன்றவை சிறிய செயல்களாகத் தோன்றினாலும் அவை மகிழ்ச்சியை அளிக்கும்.
உறவுகள் எங்கே தொலைந்தன?
ஒரு காலத்தில் வீட்டு வாசலில் காலடி சத்தம் கேட்டாலே, “யார் வந்திருக்கிறார்கள்?” என்று குழந்தைகள் ஓடிப் பார்ப்பார்கள். வந்தவர் உறவினராக இருந்தாலும், அண்டை வீட்டாராக இருந்தாலும், அவரை வரவேற்பதில் ஒரு தனி மகிழ்ச்சி இருந்தது.
இன்றோ தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல் தொலைந்து கதவுகள் பூட்டுக்களுடன் பாதுகாப்பாக இருக்கின்றன; ஆனால் பகிர மனமில்லாத மனதின் கதவுகளும் பல நேரங்களில் மூடியே கிடக்கின்றன.
கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடும்பங்கள் பெருகியதும் உறவுகளின் இயல்பும் மாறியது. வேலை, பொருளாதாரம், வெளிநாட்டு வாழ்க்கை எனப் பல காரணங்களால் குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு நகரங்களிலும் நாடுகளிலும் வாழத்தொடங்கினர். தொலைபேசியும் காணொலி அழைப்புகளும் தூரத்தை குறைத்தாலும், நேரில் அமர்ந்து பேசும் அன்பை முழுமையாகத் தர முடியவில்லை.
பணத்தைவிட பாசமும் பகிர்தலும் முக்கியம்
அன்றைய மனிதர்களிடம் வசதிகள் குறைவாக இருந்திருக்கலாம்; ஆனால் பகிர்ந்துகொள்ளும் மனம் அதிகமாக இருந்தது. ஒரு வீட்டில் சமைத்த உணவு நான்கு வீடுகளுக்குச் சென்றது. ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட துயரம், முழுத் தெருவின் துயரமாகக் கருதப்பட்டது.
இன்று வசதிகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு செயலிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது ஆதலால் “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற கேள்வியும் அதிகரித்துவிட்டது. சில உறவுகள் பணம், சொத்து, பதவி போன்றவற்றைச் சுற்றியே சுழல்கின்றன. அன்பு இருக்கும் இடத்தில் கணக்கு இருக்காது; கணக்கு இருக்கும் இடத்தில் அன்பு நீண்ட காலம் நிலைக்காது.
குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தர வேண்டியது
உறவுகளின் மதிப்பை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பது பெற்றோரின் முக்கியப் பொறுப்பு. தாத்தா, பாட்டியுடன் பேசச் செய்வது, உறவினர்களைச் சந்திக்க அழைத்துச் செல்வது, குடும்ப நிகழ்ச்சிகளில் குழந்தைகளையும் பங்கேற்கச் செய்வது போன்ற சிறிய செயல்கள் அவர்களுக்குள் பாசத்தை வளர்க்கும்.
“உறவு என்பது அவசர நேரத்தில் உதவுபவர்” என்பதை அவர்கள் உணர வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதைவிட, நேரில் சென்று ஒரு நிமிடம் பேசுவது சில நேரங்களில் அதிக அர்த்தமுடையதாக இருக்கும்.
உயிரோடு இருக்கும் உறவுகளைப் பாதுகாப்போம்
நம்மைத் தேடி வருபவர்களை அலட்சியப்படுத்திவிட்டு, நம்மைத் தேவைப்படும்போது மட்டும் நினைவுகூரும் உறவுகளைப் பிடித்துக்கொண்டு நிற்பதில் பயனில்லை. உண்மையாக அன்பு செலுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
உறவுகள் தானாக நிலைத்திருப்பதில்லை. அவற்றுக்கு நேரமும் அக்கறையும் தேவை. ஒரு சிறிய அழைப்பு, ஒரு அன்பான வார்த்தை, ஒரு நேர்மையான மன்னிப்பு. இவையே பல ஆண்டுகள் நீடிக்கும் பந்தங்களை உருவாக்குகின்றன.
இன்றைய உலகில் நமக்கு அதிகமான தொடர்புகள் இருக்கலாம்; ஆனால் குறைவான உறவுகளே இருக்கின்றன. அந்தக் குறையைப் போக்க வேண்டியது தொழில்நுட்பம் அல்ல, மனிதநேயம். ரத்தத்தில் பிறந்த உறவுகளை அன்பால் உயிர்ப்பிப்போம்; ரத்தத் தொடர்பில்லாத நல்ல உள்ளங்களை மனதால் உறவாக்கிக் கொள்வோம். அப்போதுதான் நம் வாழ்க்கை உண்மையான உறவுகளால் நிறையும்.
ரத்த உறவு பிறப்பால் கிடைக்கிறது; உயிர் உறவு செயலால் உருவாகிறது. போலியான பந்தங்கள் எண்ணிக்கையில் பெரிதாக இருக்கலாம்; ஆனால் உண்மையான உறவு சிலரிடமே இருந்தாலும் அது வாழ்க்கையை வளமாக்கும்.
காலம் எவ்வளவு மாறினாலும், மனிதனுக்கு மனிதன் தேவை என்பது மட்டும் மாறாது. எனவே ரத்த உறவுகளை மதிப்போம்; அதைவிட முக்கியமாக, நம் வாழ்வில் உண்மையாக இருப்பவர்களைப் போற்றுவோம். அப்போதுதான் உறவுகள் பெயர்களில் மட்டுமல்ல, உயிரிலும் வாழும்.
கூட்டுக் குடும்பங்கள் குறைந்த இன்றைய நவீன சூழலில், போலி பந்தங்களை விலக்கி நம் மீது உண்மையான அக்கறை செலுத்தும் மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் முக்கியத்துவத்தை வாசகர்கள் உணர்வார்கள்.