
ரத்ததானம், கண்தானம், உடல் தானம், அன்னதானம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. தன்னுடைய குழந்தைக்கு கொடுக்காமல் யாரும் தாய்ப்பால் தானம் செய்யப் போவதில்லை. ஆனாலும் தாய்ப்பால் தானம் செய்ய தன்னலமற்ற மனமும், முற்போக்கான சிந்தனையும், பிஞ்சு குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனமும் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க விருப்பமுள்ளவர்கள் அதிகமாக இருந்தாலும் குடும்ப சூழல் இந்த உதவியை செய்ய விடாமல் தடுக்கிறது. தாய்ப்பால் தானம் பெறும் குழந்தைகளுக்கு ஏதாவது நோய்த்தொற்றோ, வேறு பிரச்சினைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் சிலரிடத்தில் இருக்கிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. ஏனெனில் தாய்ப்பால் என்பது ஊட்டச்சத்து மிக்க உணவாகும். இதனை அருந்துவதால் எந்த குழந்தைகளுக்கும், எந்த விதமான பிரச்சினைகளும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
தாய்ப்பால் சுரந்து கொண்டேதான் இருக்கும். பிற குழந்தைகளுக்கு கொடுப்பதால் தன் குழந்தைக்கு குறைந்து விடுமோ என்ற அச்சமும் சிலரிடம் இருக்கிறது. சொல்லப்போனால் தாய்ப்பாலை கொடுக்க கொடுக்க தான் அதிகமாக சுரக்கும். ஆதலால் தாய்ப்பால் தானம் கொடுக்க விரும்பும் தாய்மார்கள் தாராளமாக முன்வந்து கொடுக்கலாம். இது நிச்சயமாக அவர்களுக்கு மனதளவில் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
நீங்கள் சேகரிக்கும் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைகளில் உள்ள தாய்ப்பால் வங்கிகளில் வழங்கலாம். அங்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், உடல் எடை குறைவாக, பலவீனமாக உள்ள குழந்தைகள், சில வகை நோய்த்தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு அந்த தாய்ப்பால் வழங்கப்படுகிறது. அதனை பருகும் குழந்தைகள் உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பதை பார்க்கும்போது மன நிறைவாக இருக்கும்.
எல்லா குழந்தையும் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவிக்க தானே பிறந்திருக்கிறது. முதல் உணவே அதற்கு தட்டுப்பாடாக இருக்கக் கூடாது என்பது தான் நம் அனைவருடைய எண்ணமும். தாய்ப்பால் தானத்திற்கு முறையாக முழு நேரமும் பணி செய்யக்கூடிய தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் எந்த மூலை முடுக்கில் தாய்ப்பால் தேவைப்பட்டாலும் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தொடர்பு கொண்டாலே அவர்களுடைய முகவரிக்கே சென்று தாய்ப்பால் கொடுக்கும் வசதி தற்போது வந்துவிட்டது.
தமிழகத்தில் எந்த ஒரு குழந்தைக்கும் தாய்ப்பால் தட்டுப்பாடு என்ற ஒரு நிலைமை வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தோடு தாய்ப்பால் வங்கிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன.
தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு புரியவைப்பது ஒரு சவால் என்றால் தாய்ப்பால் பெறுபவர்களுக்கு புரிய வைப்பதும் பெரிய சவாலாக உள்ளது. சத்துக் குறைபாடுடன் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக முக்கியமாக தேவைப்படும். அந்த நேரங்களில் மிகுந்த சிரமப்பட்டு தாய்ப்பாலை ஏற்பாடு செய்து கொடுக்கும் போது, அவர்களுடைய உறவினர்களில் சிலர், இந்த தாய்ப்பால் எந்த ஜாதியை சேர்ந்தவர்களுடையது? எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? என்று கேட்பதுதான் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. குழந்தையின் உயிர் சார்ந்த விஷயமாக இருந்தும் கூட தாய்ப்பாலிலும் ஜாதியும் மதமும் பார்க்கும் மன நிலை மாற வேண்டும்.
முன் பின் தெரியாதவர்களிடம் தாய்ப்பால் வாங்குவதை விட பாக்கெட் பாலோ அல்லது பவுடரோ வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம் என சொல்லும் பெரியவர்களும் இருக்கிறார்கள். இந்த மனநிலை நிச்சயமாக மாற வேண்டும்.
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரத்தம் எப்படி முக்கியமோ அதேபோல் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் மிக மிக முக்கியம். இன்னும் சொல்லப்போனால் ரத்தம் என்பது அனைத்து வயதினருக்கும் தேவைப்படக்கூடிய விஷயம். ஆனால் தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைக்கு மட்டுமே தேவைப்படக்கூடிய முக்கியமான விஷயம். ஆகையால் தாய்ப்பால் தானம் என்பது மிக மிக முக்கியமானது.