

நம்மிடம் பாரம்பரிய கொலுப்படிகள் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். நம் வீட்டிலுள்ள பொருட்களை அதாவது அன்றாடம் பயன்படுத்தும் எளிய பொருட்களை வைத்தே அழகான மற்றும் பிரம்மாண்டமான கொலுப்படிகளை 5 வழிகளில் அமைக்கலாம்.
நவராத்திரி கொலுவை அசத்தலாக அமைக்க சில எளிய ஐடியாக்கள்:
1) அட்டைப் பெட்டிகள் மற்றும் அமேசான் பாக்ஸ்கள் (Cardboard Boxes):
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வந்த பெரிய மற்றும் நடுத்தர அளவிலான அட்டைப்பெட்டிகள் (Flipkart /Amazon box), காலணிப் பெட்டிகள் போன்ற வெவ்வேறு அளவுகளில் இருக்கும் அட்டைப்பெட்டிகளை எடுத்துக் கொள்ளவும். பெட்டிகளுக்குள் பழைய துணிகள் அல்லது கனமான பொருட்களை நிரப்பி பாக்ஸை நன்கு மூடி டேப் போட்டு ஒட்டவேண்டும்.
அப்போதுதான் அட்டைப்பெட்டிகள் பொம்மைகளின் எடையைத் தாங்கும். இவற்றைப் பெரியதில் இருந்து சிறியது வரை வரிசையாக அடுக்கிப் படிகள் போல மாற்றலாம். இதன் மேல் ஒரு நல்ல துணியை விரித்தால் கொலுப்படி நொடியில் தயார்.
2) தடிமனான புத்தகங்கள்:
வீட்டிலுள்ள பெரிய தடிமனான அகராதிகள் (Dictionaries), என்சைக்ளோபீடியா, தடிமனான கதைப் புத்தகங்கள் அல்லது பழைய பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சமமான உயரத்தில் புத்தகங்களை வரிசையாக அடுக்கி, அதன்மேல் ஒரு தட்டையான, நீளமான மரப் பலகை அல்லது தடிமனான அட்டையை வைத்துப் படிகளை உருவாக்கலாம். இப்படி ஒவ்வொரு படிக்கும் தேவையான உயரத்தில் புத்தகங்களை ஏறுவரிசையில் அடுக்கினால் வலுவான கொலுப்படிகள் தயார்.
3) பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் ஸ்டூல்கள்:
எல்லா வீடுகளிலுமே பிளாஸ்டிக் ஸ்டூல்கள், நாற்காலிகள் இருக்கும். இதைக் கொண்டு அழகாக கொலுப்படி அமைப்பது. வெவ்வேறு உயரமுடைய நாற்காலிகள், ஸ்டூல்கள் (உயரமான நாற்காலி, நடுத்தர ஸ்டூல், சிறிய குளியலறை ஸ்டூல்) இருந்தால் அவற்றை ஏறுவரிசையில் அணி வகுக்கலாம். எல்லாம் ஒரே உயரமாக இருந்தால், பின்வரிசை ஸ்டூல்களின் கீழ் தடிமனான அட்டை அல்லது மரக்கட்டைகளை வைத்து உயரத்தை சரி செய்யலாம்.
டைனிங் டேபிள் ஸ்டூல்கள் அல்லது சிறிய முக்காலிகள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளவும். உயரமான நாற்காலியை பின்புறமும், சிறிய ஸ்டூல்களை அதற்கு முன்னாலும் என வரிசையாகப் போட்டு, அதன் மேல் ஒரு பட்டு வேஷ்டி அல்லது பட்டுப் புடவையை விரித்துப் படிகளாக மாற்ற அசத்தலான லுக் கிடைக்கும்.
4) சூட்கேஸ் மற்றும் பயணப் பெட்டிகள்(Suitcases & Trunks):
வீட்டில் இருக்கும் பெரிய மற்றும் சிறிய அளவுள்ள சூட்கேஸ்கள், தாத்தா பாட்டி உபயோகப்படுத்தும் டிரங்க் பெட்டிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும். பெரிய சூட்கேஸை அடிப்பகுதியிலும், சிறிய சூட்கேஸ்களை அதற்கு மேலேயும் என அடுக்கி, ட்ரங்க் பெட்டிகளை சைஸ் வாரியாகப் பிரித்து அடுக்க மிக எளிதாக 5 முதல் 7 படிகள் வரை நம்மால் உருவாக்க முடியும்.
5) சமையலறைப் பாத்திரங்கள் மற்றும் பலகைகள்:
சமையல் அறையில் இருக்கும் பெரிய எவர்சில்வர் டப்பாக்கள், இட்லி பாத்திரங்கள் இதற்கு பொருத்தமாக இருக்கும். சமையலறை கவுண்டர் டாப் ரேக்குகள் இரும்பு அல்லது மரப் பலகைகள், செங்கற்கள் போன்றவை படிகள் அமைக்க உதவும்.
இரண்டு செங்கற்கள் அல்லது இரண்டு சம உயரம் உள்ள பாத்திரங்களை வரிசையாக குப்புறக் கவிழ்த்து வைத்து, அதன் மேல் ஒரு மரப்பலகையை வைத்து முதல் படி, அதற்கு மேல் மீண்டும் பாத்திரங்களை வைத்து அடுத்த படி என சமையலறைப் பொருட்களை வைத்தே படிகளை மிக அழகாக அமைக்க முடியும். பாத்திரங்கள் நழுவாமல் இருக்க அதன் மேல் ஒரு அழகான புது பருத்தி வேட்டி அல்லது ஜரிகைகள் உள்ள புடவையை விரித்து மூடி விட்டால் பாத்திரங்கள் வெளியே தெரியாது; அத்துடன் படிகளும் அழகாக இருக்கும்.
முக்கிய குறிப்பு:
இன்னும் கூட நம் கற்பனைத் திறனை உபயோகித்து வீட்டில் உள்ள சோபா குஷன்கள் மற்றும் சிறிய மெத்தைகளைக் கொண்டும் எளிய படிகளை உருவாக்க முடியும். இவற்றில் எடை குறைந்த மர பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகளை வைக்க அழகாக இருக்கும்.
நாம் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும், அதன் மேல் ஒரு அழகான பார்டர் கட்டிய புடவை, வேஷ்டி அல்லது வண்ணமயமான துணிகளை விரித்து பின் (Pin)செய்துவிட வேண்டும். அப்போதுதான் துணிகள் ஃபேன் காற்றில் பறக்காமல் படிந்து நிற்பதுடன், எதனால் படி அமைத்தோம் என்பதே யாருக்கும் தெரியாது. பார்ப்பதற்கும் அசல் கொலுப்படிகள் போலத்தான் இருக்கும். பார்க்கும் அனைவரும் நிச்சயம் பாராட்டாமல் போக மாட்டார்கள்.