

சென்னையின் ஆன்மீகத் திருவிழாவான நவராத்திரி நெருங்கிவிட்ட நிலையில், மயிலாப்பூர் மாட வீதிகள் கொலு பொம்மைகளால் வண்ணமயமாக ஜொலிக்கத் தொடங்கியுள்ளன! மயிலாப்பூரின் இந்த பொம்மைக் கடைகள் நமக்கு என்னென்ன வியப்புகளைத் தருகின்றன என்பதை முழுமையாக அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
ஒட்டுமொத்த சென்னை நகரமும் திரும்பி பார்க்கின்றன மயிலாப்பூர் மாட வீதிகளின் கொலு பொம்மைகளை. நவராத்திரி என்றாலே கொலு தானே. மயிலாப்பூர் மாடவீதிகள் முழுவதும் வண்ணமயமான கொலு பொம்மைக் கடைகளால் நிரம்பி வழிகின்றன. தெருவை அடைத்துக் கொண்டு ஒரே கடைகள் மயம்தான். நடப்பதற்கே இடமில்லை; இதில் டூ வலர் வண்டியை ஓட்ட வழியேது? ஆட்டோக்காரர்கள் வண்டியை நிறுத்தக்கூட இடமில்லாமல் திணறுகின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலை செய்து வரும் கைவினைஞர்கள் தற்காலிகமாக கடைகளை அமைத்து விதவிதமான புராண காலத்து பொம்மைகளையும், சமகாலக் கதைகளை விளக்கும் பொம்மைகளையும் நிறைய காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
1) கொலு ஷாப்பிங் ஸ்பாட்டாக மாறிப்போன மயிலாப்பூர் மாடவீதிகள்:
மயிலாப்பூர் நான்கு மாட வீதிகளிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாட வீதிகள் ஆண்டுதோறும் நவராத்திரி காலத்தில் சென்னையின் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான கொலு ஷாப்பிங் ஸ்பாடாக மாறிவிடுகின்றன. கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள இந்த வீதிகள் முழுவதும் தற்காலிக கடைகளும் கைவினைஞர்களின் தள்ளுவண்டிகளும் அணிவகுத்து நின்று ஒட்டுமொத்தப் பகுதியையும் வண்ணமயமாக மாற்றுகின்றன.
தீபாவளிக்கு தி.நகர் எப்படி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியுமோ அதைப்போல நவராத்திரிக்கு முன்னதாகவே இங்கு மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கி விடுகிறது. கடலூர், பண்ருட்டி, காஞ்சிபுரம், மதுரை போன்ற தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், கொல்கத்தா, மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் கைவினைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பொம்மைகளைக் கொண்டு வந்து இங்கு நேரடியாக விற்பனை செய்கின்றனர். நடைபாதை வியாபாரிகள் மட்டுமின்றி, அங்குள்ள சில நிரந்தர கடைகளும் கொலு ஷாப்பிங்கிற்கு பெயர் பெற்றவை.
2) இந்த ஆண்டின் புதிய வரவு பொம்மைகள்:
பாரம்பரியக் கலைக்கூடமாக மாறிய தெருக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இரவு நேரத்தில் விளக்குகளின் வெளிச்சத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் வண்ணமயமான பொம்மைகளைக் காண்பதே ஒரு சுகானுபவம் தான். தற்காலத்து குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் பொம்மைகள் முதல் மினியேச்சர் பொம்மைகள் வரைக் குவிந்து கிடக்கின்றன. அரை இன்ச் சிறிய பொம்மைகள் முதல் 6 அடி உயரம் உள்ள பிரம்மாண்ட சிலைகள் வரை அனைத்து அளவுகளிலும் இங்கு பொம்மைகள் கிடைக்கின்றன.
நேற்று வந்திறங்கிய மயிலுடன் கூடிய புதிய முருகன் சிலை அப்பப்பா எவ்வளவு பெரியது தெரியுமா? விலையும் ரொம்ப அதிகம் தான். எல்லோருமே பார்த்துவிட்டு வியந்து போய் அதன் விலையைக் கேட்டதும் வாயடைத்து போய் நகர்ந்து விட்டார்கள். நாங்களும் தான்!
நவீன தொழில்நுட்ப மெருகூட்டலுடன் மிக நேர்த்தியான வடிவமைப்பில் இந்த ஆண்டு 3D முருகன் சிலைகள் அறிமுகம் ஆகியுள்ளன. பூரி ஜெகந்நாதர் செட், தச பாலாம்பிகா கொலு செட்டும் இந்த ஆண்டின் முக்கிய வரவாகும். இவை ஆன்மீக பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புராணக்கதைகள் முதல் தற்காலத் தீம்களை அடிப்படையாகக் கொண்ட பல பொம்மை செட்டுகள் இங்கு கிடைக்கின்றன. பொம்மைகள் மட்டுமின்றி கொலு வைப்பதற்கு எளிதாக மடித்து வைக்கக் கூடிய ஃபோல்டபிள் கொலு படிகள் (Foldable Steps), விதவிதமான அலங்கார விளக்குகள், மஞ்சள்-குங்கும பாக்கெட்கள், நவராத்திரி பரிசுப் பொருட்கள் (return gifts) ஆகியவையும் தெருவோரக்கடைகளில் கிடைக்கின்றன.
3) அனைத்து பட்ஜெட்டுகளுக்கும் ஏற்றது:
வெறும் 10 ரூபாய் சிறிய பொம்மைகள் முதல் பிரம்மாண்டமான 10,000 ரூபாய் வரையிலான கலைநயம் மிக்க பெரிய செட்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற விலையில் பொம்மைகள் கிடைக்கின்றன.
மயிலாப்பூர் மாட வீதிகளில் உலா வந்து கொலு பொம்மைகளை ரசிப்பதும், சுவையான சுண்டல் பிரசாதங்களை சாப்பிடுவதும் இந்த சீசனின் தனித்தனி சுகம் தான்.
வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், வார நாட்களில் செல்வது நல்லது. அப்போது தான் நிதானமாகப் பார்த்து பேரம் பேசி வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.
4) தீம் கொலுக்களுக்கான பொம்மைகள்:
தனித்துவமான கதைகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த தீம் கொலுமுறை தற்காலத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆன்மீகம், பாரம்பரியம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் என பல்வேறு தலைப்புகளில் பொம்மைகளை அடுக்குவதற்கு பல பிரத்தியேகமான பொம்மை செட்டுகள் இங்கு கிடைக்கின்றன.
வயல்வெளிகள் கிணறு மாட்டு வண்டிகள் விவசாயிகள் மற்றும் மரங்கள் அடங்கிய "கிராமத்து செட்" பொம்மைகள் அதிகம் விற்பனை ஆகின்றன.
இட்லி தோசைக் கடை செட், செட்டியார் மளிகைக் கடை மற்றும் உணவகம் போன்ற தத்ரூபமான பொம்மைகள் கிடைக்கின்றன.
சீமந்தம் (baby shower), காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாக்களைக் குறிக்கும் பொம்மை தொகுப்புகள் நிறைய கண்ணில் படுகின்றது.
நெல் அல்லது வெந்தயம் முளைக்க வைக்கப்பட்டு, இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் பசுமையான தீம்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
வழக்கம் போல குழந்தைகளுக்குப் பிடித்த கார்டடூன் செட்டுகள், தசாவதாரம் செட், மாயாபஜார் செட், அஷ்டலட்சுமி செட், மீனாட்சி திருக்கல்யாணம், சீதா கல்யாணம் போன்றவையும் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் காகிதக்கூழ் அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளாக கிடைக்கின்றன. களிமண் பொம்மைகளை விட இந்த காகிதக்கூழ் பொம்மைகள் விலை சற்று அதிகமாக உள்ளன.
மக்களே நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் வாங்க மறக்காமல் மயிலாப்பூருக்கு வாங்க. பொம்மைகள் வாங்கவில்லை என்றாலும் கூட விண்டோ ஷாப்பிங் செய்வதற்காகவாவது வந்து பாருங்கள் அசந்து போவீர்கள்!
மயிலாப்பூர் மாடவீதிகளின் இந்த நேரடி ஷாப்பிங் வழிகாட்டி மூலம், இந்த ஆண்டின் நவராத்திரிக்குத் தேவையான சிறந்த மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற பொம்மைகளை எளிதாகத் தேர்ந்தெடுத்து உங்கள் வீட்டைக் கலைக்கூடமாக மாற்றலாம்.