இருசக்கர வாகனம் வாங்கும் முன்...

Two wheeler
Two wheeler
Published on

மாதாந்திர சுலபத் தவணைகளில் வாங்குபவர்கள் அதனை முறையாகக் கட்டத் தவறுவதால் கடனைக் கொடுத்த நிறுவனங்கள் அவற்றை திரும்ப எடுத்துச் சென்று விடுகின்றனர். அவ்வாறான வாகனங்கள் பெரும்பாலும் புதியதாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன. எனவே, அவற்றை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு விதத்தில் இவ்வாறான வாகனங்களை வாங்குவது நல்லது. என்றாலும் இவற்றை வாங்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் வண்டியின் உண்மையான உரிமையாளர் யார்? அதன்மேல் ஏதேனும் கடன் உள்ளதா? அந்தக் கடனை நம் பெயருக்கு மாற்ற வழி உள்ளதா? என்பதையெல்லாம் பார்த்து தான் அந்த வாகனத்தை வாங்க வேண்டும்.

வாகனத்தை ஓட்டுவதற்கு இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். வாகன ஓட்டுனர் உரிமங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகர்களால் வழங்கப்படுகின்றன. தமது பகுதிக்கான வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெறப்பட்ட உரிய வாகன ஓட்டுனர் உரிமமோ, பழகுனர் ஓட்டுநர் உரிமமோ இல்லாமல் இருசக்கர வாகனத்தை புதிதாகவோ அல்லது பழையதாகவோ வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து ஒரு நம்பிக்கையான வாகன பழுது பார்ப்பவரிடம் அந்த வண்டியினை சிறு தூரம் ஓட்டிப் பார்க்கச் சொல்லி அதனுடைய வாங்கும் விலையை நிர்ணயம் செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் சரியான வண்டியை சரியான விலையில் நம்மால் வாங்க முடியும். வண்டியை வாங்கிய உடனே சாலையில் ஓட்ட முடியுமா? வண்டியில் பழுதுகள் இருந்தால் அவற்றை நீக்க என்ன செலவு ஆகும்? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு வண்டியை வாங்கும் விலையை நாம் தீர்மானிக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் வண்டி நிறுத்துமிடத் தொல்லையால் வண்டியை நிறுத்தும் இடத்தை முதலில் தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ற முறையில் நாம் இருசக்கர வாகனத்தை வாங்கலாம்.

வீட்டில் உள்ள பெண்களும் வண்டியை ஓட்டும் வகையில் கியர் இல்லாத வண்டிகளை வாங்குவது நல்லது.

வண்டியை வாங்கிய பிறகு அதன் உரிமையாளராக காப்பீடு உட்பட அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்துக் கொள்வதில் சுணக்கம் காட்டக் கூடாது.

குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறை வண்டி இன்ஜினில் ஆயில் மாற்றுவது, பிரேக்கை சரி பார்ப்பது, டயர்களின் தரத்தின் நிலைமையை பார்ப்பது போன்றவை மிகவும் முக்கியம். இவை பற்றிய ஒரு குறிப்பை ஒரு கையேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓட்டுநர் உரிமம், உரிமையாளர் ஆவணம், வண்டியின் காப்பீட்டு ஆவணம் போன்றவற்றின் நகல் எப்பொழுதும் வண்டியின் டிக்கியில் இருக்க வேண்டும். பயணிக்கும் பொழுது இவை போக்குவரத்து காவல் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்பட்டவை.

வண்டியின் கூடவே எப்பொழுதும் தலை பாதுகாப்பு கவசம் ஒன்று இருக்க வேண்டும். குறைந்த தூரம் பயணத்துக்கும் தலை பாதுகாப்பு கவசம் அவசியம். வண்டியின் அசல் ஆவணங்கள் அனைவரும் அறிந்த ஓர் இடத்தில் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

'வாகன் பரிவஹன்' செயலியை வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி வாகனத்தை பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் கைப்பேசியில் வைத்திருக்கலாம்.

கூடுமானவரை உறவினர்களிடமிருந்தோ நண்பர்களிடமிருந்தோ இருசக்கர வாகனங்களை வாங்குவதன் மூலம் வண்டியின் வரலாறு நமக்கு நன்கு தெரிய வரும்.

இதையும் படியுங்கள்:
டோஸ்ட் பிரெட் vs. ப்ளெய்ன் பிரெட்: எது நம்ம உடம்புக்கு நல்லது?
Two wheeler

நகர்ப்புறமோ, கிராமப்புறமோ சராசரியாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்வது பாதுகாப்பானது.

இருசக்கர வாகனங்கள் இருவர் பயணிக்க மட்டுமே என்பதை மனதில் கொள்ள வேண்டும். இருவருக்கு மேல் அதில் பயணிக்கும் பொழுது ஓட்டுனருக்கு வண்டியை ஓட்டுவது ஒரு சவாலாக அமைந்து விடும். தேவையற்ற விபத்துகளை ஏற்படுத்தி விடும்.

இருசக்கர வாகனத்தில் ஒரு முதலுதவி பெட்டியும் இருக்க வேண்டும். விபத்து கால அவசர சிகிச்சைகளுக்கு அவை உதவியாக இருக்கும்.

கூடுமானவரை மாதாந்திர சுலபத் தவணை இல்லாமல் சிறிது சிறிதாக பணம் சேர்த்து கடன் இல்லாமல் இருசக்கர வாகனத்தை வாங்குவது நல்லது.

தற்காலங்களில் மின்சார இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிகமாக கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும், சத்தம் இன்றி பயணிப்பதிலும் நாம் கவனம் செலுத்த முடியும்.

எனவே, இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு முன்னால் தீர யோசித்து செயல்படுவதே ஓர் அறிவுபூர்வமான செயலாக இருக்க முடியும் என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுவோம்.

இதையும் படியுங்கள்:
எல்லோரும் நடிகர்கள்; எல்லாமே நாடகம்! கவன ஈர்ப்புக்கு ஏங்கும் சமூகம்!
Two wheeler

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com