
இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு வீட்டில் கட்டில், மேசை, டிவி போன்ற பொருட்கள்கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் கண்டிப்பாக இருக்கும். அது அத்தியாவசியம். இருந்தாலும் குளிர்சாதனப் பெட்டியில் நாம் வைக்கும் பழங்கள், கீரைகளின் சத்துக்களின் நிலைமை என்னவென்று யோசிப்போமா!
இழக்கும் சத்துகளுக்கு என்ன செய்வது...?
அறை வெப்பநிலையிலேயே வைக்கப்படும் உணவு வகைகள்:
பல உணவுகளைக் குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் பராமரிக்கலாம். ரொட்டி, பூரி, பருப்புகள், பிரியாணி, பப்பாளி, ஊறுகாய், சட்னிகள் மற்றும் சமைத்த அரிசி ஆகியவற்றை அறை வெப்பநிலையில் ஒரு நாள் வரை பாதுகாப்பாக வைக்கலாம்.
எண்ணெய், உப்பு மசாலாப் பொருட்களுடன் பாதுகாக்கப்படும் ஊறுகாய், சட்னிகள் இயற்கையாகவே நம் சமையலறையிலே நிலையாக இருக்கும்.
பச்சை வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, ரொட்டி, தக்காளி, வாழைப்பழங்கள், சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், முலாம்பழம் ஆகியவற்றை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே வைக்கவேண்டும்; அப்போதுதான் அதன் சுவை, தோற்றம் மாறாமல் இருக்கும்.
கண்டிப்பாக வைக்கக் கூடாதது:
சில சமைத்தப் பொருட்கள், இறைச்சிகளை பாதுகாப்புக் காரணங்களுக்காக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது.
எண்ணெய், உப்பு மசாலாப் பொருட்களுடன் பாதுக்காக்கப்படும் ஊறுகாயை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது அதன் சுவை பறிபோகலாம்.
வடைகள் அல்லது பக்கோடாக்கள் போன்ற வறுத்தப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும்போது அவற்றை ஈரமாக்குகிறது.
இழக்கும் சத்துகள்...
கருவியாக இருந்தாலும், அது பல உணவுகளின் தன்மையை நுட்பமாக மாற்றுகிறது. பழங்கள், காய்கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கும்போது நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின் சி, பி1 (thiamine), ஃபோலேட்(folate) ஆகியவை அழிந்துபோகின்றன. கீரைகள் சில நாட்களுக்குள் அவற்றின் வைட்டமின் சி 50% வரை இழக்கக்கூடும்.
இழந்த சத்துகளை எப்படி பெறலாம்?
குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கப்படும் காய்கறிகளில் மிச்சம் இருக்கும் வைட்டமின்களை வேகவைத்தல் (steaming) அல்லது வதக்குதல் (sauteing) போன்ற சிறிய சமையல் முறைகளைப் பின்பற்றி பெற்றுக்கொள்ளலாம்.
உணவுகளுடன் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது நெல்லிக்காய் போன்றவற்றை சேர்ப்பது நமக்கு இரும்பு சத்துகளை அதிகரிக்கும்.
அதோடு அந்தந்தப் பருவகால விளைபொருட்களைத் தவிர்க்காமல் அவ்வப்போது உட்கொள்வது காலப்போக்கில் சீரான ஊட்டச்சத்தை உங்களுக்குத் தரும்.