
இரசாயனம் கலக்காமல், சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்ற, சிட்ரஸ் பழத் தோல்களிலிருந்து வீட்டிலேயே தரை சுத்திகரிப்பான் (Cleaner)களைத் தயாரிப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சுத்தமான வீடும் சுகாதாரத்துடன் இணைந்த ஆரோக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. வீட்டை சுத்தம் செய்யவும், டாய்லெட் கிளீன் பண்ணவும் கடைகளிலிருந்து கெமிக்கல் கலந்த கிளீனர்களை வாங்குகிறோம். அவற்றை உபயோகித்த பின், அவை நீருடன் கலந்து வெளியேறி மண்ணையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விடுகின்றன. இதனால் நுண்ணுயிரிகள் பாதிப்புக்குள்ளாகி, ஈக்கோ சிஸ்டத்தை நிலைகுலையச் செய்துவிடுகின்றன.
இதற்கு தீர்வுதான் என்ன?
பயோ என்சைம்கள்: சிட்ரஸ் பழத்தோல்கள், வெல்லம் மற்றும் தண்ணீரை உபயோகித்து வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கக்கூடிய இயற்கை முறை சுத்திகரிப்பான்கள். இவை அதிக செலவில்லாத, இயற்கையை பாதிப்படையச் செய்யாது, வீட்டை சுத்தப்படுத்துவதில் எதிர்பார்த்த பலனைத் தரக்கூடிய க்ளீனர்கள்.
பயோ என்சைம் என்றால் என்ன?
சிட்ரஸ் பழங்களின் தோலை தண்ணீரில் போட்டு அதனுடன் வெல்லம் சேர்த்து நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் சுத்திகரிப்பான் இது. நொதிக்க வைக்கும் செயலில், இயற்கையாக உருவாகும் பாக்டீரியாக்கள், இதில் சேர்க்கப்பட்டுள்ள இயற்கையான பொருட்களை உடைத்து என்சைம்களை வெளிக்கொண்டு வருகின்றன. இந்த என்சைம்கள் தரை, குளியல் அறை, பாத்திரங்கள் மற்றும் கிச்சன் மேடைகளை சுத்தப்படுத்தவும், கறைகளை நீக்கவும் சிறந்த முறையில் உதவி புரிகின்றன. கடைகளில் வாங்கும் க்ளீனர்கள் போல் அல்ல இவை. ஏனெனில், பயோ என்சைம்கள் மக்கும் தன்மை கொண்டவை; செயற்கைத் தன்மை மற்றும் நச்சுத்தன்மையற்ற, நறுமணமும் தரக்கூடிய க்ளீனர் இவை.
பயோ என்சைம் க்ளீனர் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்: பொடி செய்த வெல்லம் 1 கப், ஆரஞ்சு, லெமன் அல்லது லைம் பழங்களின் தோல் 3 கப், தண்ணீர் 10 கப், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில் 1.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். அதில் வெல்லதைப் போட்டு, முற்றிலும் கரையும் வரை மிதமான தீயில் வைத்து கலக்கி விடவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். சுத்தமான பிளாஸ்டிக் பாட்டிலில் சிட்ரஸ் பழத் தோல்களைப் போட்டு அதன் மீது வெல்லக் கரைசலை ஊற்றவும். பாட்டிலின் மேல் பாகத்தில் சிறிது இடம் விட்டு, மூடியால் இறுக மூடிவிடவும். பிறகு அந்த பாட்டிலை நன்கு உலர்ந்த, குளிர்ந்த, இருட்டான இடத்தில் வைத்து விடவும்.
முதல் முப்பது நாட்கள் தினமும் இரண்டு முறை பாட்டிலின் மூடியை திறந்து மூடவும். இப்படிச் செய்வதால் நொதிக்கும் செயல்பாடுகளின்போது உற்பத்தியாகும் வாயுக்கள் வெளியேறிவிடும். தொடர்ந்து 90 நாட்கள் கரைசலை நொதிக்க விடவும். நொதித்தலுக்குப் பிறகு, திரவத்தை வடிகட்டி சுத்தமான பாட்டிலில் சேமிக்கவும்.
ஒரு கப் க்ளீனருடன் 10 கப் தண்ணீர் சேர்த்து தரையை மாப் பண்ணவும். கறையுள்ள குளியலறைக்கு சம விகிதத்தில் க்ளீனரும் தண்ணீரும் கலந்து உபயோகிக்கலாம். பாத்திரம் தேய்க்க வெது வெதுப்பான நீரில் சிறிது க்ளீனர் கலந்து தேய்க்கலாம்.
குழந்தைகள், செல்லப் பிராணிகள் உள்ளிட்ட பயனர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீங்கும் இழைக்காத இயற்கை முறையிலான க்ளீனர், சுலபமாக நீங்களும் தயாரிக்கலாமே!