‘தனிமையில் இனிமை காண முடியுமா?’ என்றால், அதை நாமே தேர்வு செய்யும்போது இனிக்கும். ஆனால், வாழ்க்கை நமக்கு அதை கற்றுக்கொடுக்கும் பொழுது உண்மையிலேயே கசக்கும். தனிமையில் இனிமையாக வாழ்பவர்களும் உண்டு. ஆனால், தனிமை பல நோய்களுக்கும் வித்திடுகிறது. பேச ஆள் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தனிமை நம்மை படுத்தத்தான் செய்யும். இதிலிருந்து விடுபட பல வழிகள் உள்ளன. அவை என்னவென்பதை இந்தப் பதிவில் காணலாம்.
1. பேசிப் பழகுவது: அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசுவது நம் தனிமையை போக்கும். இதுவரை அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து இருந்தாலும், இனி அப்படி இல்லாமல் நாமே வலியச் சென்று நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசிப் பழகலாம். காலை, மாலை என இரண்டு வேளையும் அருகில் உள்ள கோயில்களுக்கு அல்லது பூங்காக்களுக்கு சென்று அங்கு வரும் நம் வயதை ஒத்த நபர்களுடன் நம்மை அறிமுகம் செய்து கொண்டு பேசலாம். இது ஓரளவிற்கு நம் தனிமையை போக்கிவிடும்.
2. மனதை லேசாக்க: மனிதர்களுடன் மட்டும்தான் பழக வேண்டும் என்றில்லை. நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்க்கலாம். அவை நமக்கு நல்ல துணையாக இருப்பதுடன், நம் ஆரோக்கியத்தையும் காக்கும். மாலையில் நாயை அழைத்துக் கொண்டு ஒரு பிரிஸ்க் வாக் போகலாம். மீன் தொட்டிகள் வைத்து வண்ண வண்ண மீன்களை வளர்த்து அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவது தெரியாது. மனதிற்கும் சந்தோஷமாக இருக்கும்.
3. தோட்டம் அமைப்பது: தனி வீடோ, மாடி குடியிருப்போ எதில் இருந்தாலும் சின்ன சின்ன பூந்தொட்டிகள் வைத்து தோட்டத்தை பராமரிக்கலாம். சின்னச் சின்ன தொட்டிகளில் நம் தினசரி தேவைகளுக்கான கீரைகளை வளர்க்கலாம். தக்காளி, வெந்தயம், பச்சை மிளகாய் என எளிதாக வளர்க்கக்கூடிய செடிகளை வைத்து பராமரிக்கலாம். பால்கனியிலோ, மண் தரையிலோ எங்கு இடம் இருக்கிறதோ அங்கு மனதைக் கவரும் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் தொட்டிகளை வைத்து தண்ணீர் விட்டு செடிகளை வளர்க்க, மனம் லேசாவதுடன் தனிமை உணர்வும் தோன்றாது.
4. பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளுதல்: பொழுதை பயனுள்ள வகையில், விரும்பிய புத்தகங்கள், நாவல்கள் என படிக்கலாம். எழுதுவதில் ஆர்வம் இருந்தால் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பலாம். மனதிற்கு இதம் தரும் பாடல்களைக் கேட்கலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்தால் கோயில் குளம் என்று தினம் ஒரு இடத்திற்கு சென்று வரலாம். நமக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை முயற்சி செய்யலாம். நம்மை எப்போதுமே பிசியாக வைத்துக் கொண்டால் தனிமை என்பது ஒன்றும் செய்யாது.
5. உடல் நலம் பேணுதல்: உடற்பயிற்சி செய்வது, நம்மை அழகுப்படுத்திக் கொள்வது (இதற்கு வயது ஒரு தடையல்ல), சரும பராமரிப்பு, யோகா, தியானம் என பல வழிகளில் மனதை செலுத்தலாம். பண வசதி இருப்பின் யோகா, தியானம் போன்ற வகுப்புகளுக்கு சென்று கற்றுக்கொள்வதுடன் நிறைய மனிதர்களையும் சந்தித்து மனம் விட்டுப் பேசலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி வயதிற்கேற்ற சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்வதில் கவனம் செலுத்த, மனமும் உடலும் என்றும் இளமையாக இருக்கும். தனிமையாக இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றாது.
6. நண்பர்களைத் தேடுவதும், உறவுகளை பலப்படுத்துவதும்: சமூக வலைதளங்கள் மூலம் நம்முடைய பழைய நண்பர்களை எளிதில் தேடி கண்டுபிடித்து அவர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம். நம்முடைய இனிமையான பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம்.
உறவினர்களுடன் தொடர்பு கொண்டு உறவை பலப்படுத்தலாம். அவர்களுடன் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடலாம். நமக்கிருந்த பிஸியான வேலைகளில் சில உறவுகளை மறந்திருப்போம். பழக நேரமில்லாமல் போயிருக்கும். அவர்களை சந்தித்து உறவை புதுப்பித்துக் கொள்ளலாம்.