

ஒற்றை தலைவலியை (migraine) பற்றி நம் எல்லோருக்குமே நன்றாகவே தெரியும். அது வந்து விட்டால் தலையே வெடித்து விடும் போல இருக்கும். அந்த வலியை அனுபவிப்பவர்களுக்கு தான் அந்த வலியின் வேதனை தெரியும். இதே மாதிரி வயிறும் வெடிக்கிற மாதிரி வலி வருமாம். கேள்வி பட்டிருக்கிறீர்களா?? அதற்கு வயிற்று ஒற்றை தலைவலி (abdominal migraine) என்று பெயர். அதை பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்..
வயிற்று ஒற்றைத் தலைவலி என்பது மிதமானது முதல் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும். ஒரு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை இந்த வலியானது நீடிக்கலாம். இது ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் தலை வலியை ஏற்படுத்தாது. பொதுவாக குழந்தைகளுக்கு தான் இந்த வயிற்று ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வயிற்று ஒற்றைத் தலைவலி பொதுவாக 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது (abdominal migraine in children), குடும்பத்தில் யாருக்காவது ஒற்றைத் தலைவலி இருந்தால் அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு இந்த வயிற்றுத் தலைவலி ஏற்படும் அபாயம் அதிகமாகலாம்.
வயிற்றுத் தலைவலியை அனுபவிக்கும் 65%க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காரணம் ஒற்றைத் தலைவலியுடன் கூடிய பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் தான் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் காரணிகளும் குழந்தைகளுக்கு வயிற்று ஒற்றைத் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி இரண்டையும் உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
வயிற்று ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்ன?
வயிற்று ஒற்றைத் தலைவலியின் முக்கிய அறிகுறி கடுமையான வயிற்று வலி தான். இந்த வலி பொதுவாக தொப்புளைச் சுற்றி வயிற்றின் நடுவில் இருக்கும். இது மந்தமான வலியாக உணரப்படலாம், மேலும் மிதமானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கலாம்.
குழந்தைகள் அனுபவிக்கக்கூடிய வேறு சில அறிகுறிகள்:
வெளிர் நிறத் தோற்றம், பசியின்மை, குமட்டல், வாந்தி, தலைவலி, சிலருக்கு ஒளி உணர்திறன் (ஃபோட்டோபோபியா), மற்றும் சத்த உணர்திறன் (ஃபோனோபோபியா) போன்ற பிற ஒற்றைத் தலைவலி அறிகுறிகளும் ஏற்படலாம்.
வயிற்றுத் தலைவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக உணர்திறன் கொண்ட நரம்பு மண்டலங்கள் இருக்கலாம். மேலும் அவர்களுடைய நரம்பு அமைப்பில் உள்ள முதன்மை உணர்வு மற்றும் மத்திய முதுகெலும்பு நியூரான்கள் தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சில மரபணு, உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாகவும் சில குழந்தைகள் இந்த ஹைபர் சென்சிட்டிவிட்டிக்கு ஆளாகக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வயிற்று ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவது எது?
பள்ளி மற்றும் குடும்ப சூழ்நிலையால் ஏற்படும் மன அழுத்தம். மோசமான தூக்கம் மற்றும் ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம். சரியான உணவை சாப்பிடாமலிருத்தல், நீரிழப்பு, சிட்ரஸ் பழங்கள், சாக்லேட், சீஸ் போன்ற உணவுகள், சுவையூட்டும், வண்ணம் சேர்க்கும் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) சேர்க்கப்பட்ட உணவுகள், ஒளிரும் விளக்குகள், 200 மில்லிகிராமுக்கு மேல் காஃபினை உட்கொள்தல்.
இந்த நோயை பொறுத்தவரையில் மருத்துவர்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. முதலில் நீண்ட நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தியும் இருக்கிறது என்று சொன்னவுடன் மருத்துவர்கள் இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு, ஸிடி ஸ்கேன் ஆகியவற்றை எடுத்து பரிசோதிப்பார்கள். எல்லா டெஸ்டிலும் ஒரு குறையும் இல்லை என்ற பட்சத்தில் தான் அவர்கள் பெற்றோர்களின் குடும்ப history-ஐ பற்றி கேட்பார்கள். குடும்பத்தில் யாருக்காவது ஒற்றை தலைவலி இருந்தால் இது அதனுடன் தொடர்புடையது என ஊகிப்பார்கள். அப்படி குடும்பத்தில் யாருக்கும் இல்லை என்ற பட்சத்தில் குழந்தை மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற முடிவுக்கு வருவார்கள். அதற்கான சரியான மருந்துகளை கொடுப்பார்கள். குழந்தைகள் சிகிச்சை ஆரம்பித்த உடனேயே நன்றாக உறங்க ஆரம்பிப்பார்கள். பசி எடுக்கும். மெது மெதுவாக முழுவதும் குணமாகி விடும்.
ஆகவே, பெற்றோர்களே குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள். குழந்தைகளின் அன்றாட நடவடிக்கையில் எதாவது மாற்றமிருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)