
தென் இந்தியாவில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு அதிக மணமும் சுவையும் கூட்டப் பயன்படுத்தப்படும் கரம் மசாலாப் பொருட்களில் முதன்மையானது ஏலக்காய். ஏலக்காயில் மாலை (Cardamom Garland) கட்டி கோயிலில் கடவுள்களுக்கு சாத்துவது, கல்யாணங்களில் மணமக்களுக்கு அணிவிப்பது, விழா மேடைகளில் முக்கியஸ்தர்களுக்கு அணிவிப்பது போன்ற சடங்குகள் நம் நாட்டில் மரியாதைக்குரிய வழக்கமாக உள்ளது.
எலாச்சி (ஏலக்காய்) மாலையை வியாழக்கிழமை தோறும் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவருக்கு அணிவித்து வணங்கி வருபவர்க்கு படிப்புத் திறமையும் ஞாபக சக்தியும் பெருகும் என்பது பெரும்பாலோரின் நம்பிக்கை. மேலும், எலாச்சி மாலை நேர்மறை எண்ணங்கள், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, ஆன்மிக சிந்தனையுடன் கூடிய ஆரோக்கியம், வளம் போன்ற அனைத்தும் தருவதுடன் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் நிலைத்திருக்கவும் கூடியது.
கர்நாடக மாநிலத்தில் ஹவேரி என்ற ஊரில் நீண்ட நெடுங்காலமாக, பாரம்பரிய படவேகர் குடும்பத்தார் உள்ளிட்ட வல்லுநர்கள் எலாச்சி மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலத்தில் ஏலக்காய் விலை சென்ற ஆண்டு இருந்ததை விட நூறு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக மாலை விலையும் கூடியுள்ளது. இதனால் விற்பனை மந்தமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
படவேகர் இனத் தொழிலாளி ஒருவர் கூறுகையில், "மூன்று மாதங்களுக்கு முன் ஏலக்காய் கிலோ 2,200 ரூபாய்க்குக் கிடைத்தது. தற்போது அது 4,600 முதல் 4,800 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு பணம் கொடுத்து வாங்க உற்பத்தியாளர்கள் தயாராயிருந்தாலும் காய் கிடைப்பது அரிதாக உள்ளது. 100 கிலோ தேவைப்பட்டால் 20 கிலோ மட்டுமே தற்போது கிடைக்கிறது. 20 தொழிலாளர்கள் வேலை செய்த இடத்தில் 8 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்" என்கிறார்.
மாலை கட்டப் பயன்படும் ஏலக்காய்களுக்கு குறிப்பிட்ட சில கோட்பாடுகள் உள்ளன. தரத்தில் உயர்ந்து, ஸ்பெரிக்கல் (Spherical) வடிவில், 8 mm சைஸ் உடைய காய்களே உபயோகிக்கத் தக்கவை. அவை உள்ளூரில் கிடைக்க வாய்ப்பில்லாததால், மடிக்கேரி, சக்லேஷ்புரா மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ் நாட்டிலிருந்தும் பெறப்படுகின்றன.
மற்றொரு படவேகர் இன உற்பத்தியாளர்கூறுகையில், "மாலை கட்ட ஆரம்பிக்கும் முன் தரமான காய்களை சேகரித்து பின் அதை பிளீச்சிங் பவுடர் சேர்த்த சலைன் வாட்டரில் ஒரு வார காலம் ஊற வைத்து, பிறகு ஒரு நாள் முழுக்க ஆவியில் வைத்து கழுவி காயவைத்து எடுத்த பின்பே வெண்மை நிற, பளபளப்பான, கிருமிகளற்ற, உடையும் தன்மையற்ற தோலுடன், நீண்ட நாட்கள் நிலைத்திருக்கக்கூடிய ஏலக்காய்களைப் பெற முடியும்” என்கிறார். மேலும், "விலை ஏற்றம் காரணமாக மார்க்கெட்டில் உள்ள எங்கள் ஸ்டோர்களை மூடிவிட்டு, வீட்டிலிருந்தபடியே நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களின் தேவையை மட்டும் பூர்த்தி செய்து வருகிறோம்" என்றும் கூறுகிறார். அவரது தொனியில் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிதைந்து விட்டதால் உண்டான வருத்தமும் தெரிகிறது.
ஏலக்காயுடன் சேர்த்து பட்டு நூல் இழைகள், மணிகள், கம்பளி போன்ற அலங்காரப் பொருட்கள் சேர்த்து ரம்யமான வாசனை தரும் குணமுடன் தயாரிக்கப்படும் இந்த எலாச்சி மாலைகளுக்கு UK மற்றும் USA போன்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.