

ருசியான கோபி மஞ்சூரியனோ அல்லது காலிஃபிளவர் குருமாவோ செய்யலாம் என்று ஆசை ஆசையாகக் கடைக்குப் போய் காலிஃபிளவர் வாங்கி வருவோம். ஆனால், வீட்டில் வந்து அதை நறுக்கும்போது உள்ளே இருந்து எட்டிப் பார்க்கும் அந்தப் பச்சை நிறப் புழுக்களைப் பார்த்தால், சாப்பிடும் ஆசையே மொத்தமாகப் போய்விடும்.
இனி அந்தக் கவலையே வேண்டாம். மார்க்கெட்டில் குவித்து வைத்திருக்கும் காலிஃபிளவர் பூக்களில், புழு இல்லாத, தரமான பூவை எப்படிக் கண்டறிவது என்பதற்குச் சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதைத் தெரிந்துகொண்டால், நீங்களும் காய் வாங்குவதில் எக்ஸ்பெர்ட் ஆகிடலாம்.
பெரிய பூவா? வேண்டாம்!
பொதுவாக நாம் என்ன செய்வோம்? கொடுக்கும் காசுக்கு லாபமாக இருக்கட்டுமே என்று, இருப்பதிலேயே பெரிய பூவாகத் தேர்ந்தெடுப்போம். அதுதான் முதல் தவறு. காலிஃபிளவரைப் பொறுத்தவரை, அதன் அளவு முக்கியமல்ல; அதன் அடர்த்திதான் முக்கியம்.
பூவின் இதழ்கள் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத அளவுக்குக் கெட்டியாக, நெருக்கமாக இருக்க வேண்டும். பூக்கள் தளர்வாகவோ அல்லது இடைவெளி விட்டோ இருந்தால், அது தரமற்றது என்று அர்த்தம். அந்த இடைவெளிகள் வழியாகத்தான் புழுக்கள் சுலபமாக உள்ளே சென்று தங்கும். எனவே, கல் மாதிரி இருக்கும் பூவையே தேர்ந்தெடுங்கள்.
நிறமும், தன்மையும்!
அடுத்ததாக, நிறத்தைக் கவனிக்க வேண்டும். நல்ல தரமான காலிஃபிளவர் பளீச்சென்ற 'க்ரீம்' நிறத்திலோ அல்லது லேசான வெளிர் மஞ்சள் நிறத்திலோ இருக்க வேண்டும். ஆங்காங்கே கரும்புள்ளிகள் இருந்தாலோ அல்லது நிறம் மங்கியிருந்தாலோ அதை வாங்காதீர்கள்.
அதேபோல, பூக்கள் மலர்ந்தது போல விரிந்து, தனித்தனியாகத் தெரிந்தால் அது முற்றிய காய். இப்படிப்பட்ட காயை வாங்கினால், சமைக்கும்போது ருசியே இருக்காது, நார் நாராக இருக்கும். மேலும், ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இரண்டு நாளில் அழுகி, ஒருவித துர்நாற்றத்தை உண்டாக்கிவிடும்.
எந்த சைஸ் சிறந்தது?
மிகப்பெரிய பூக்களில் ருசி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அதேசமயம் மிகச்சிறிய பூக்களும் வேண்டாம். நடுத்தரமான அளவில் இருக்கும் பூக்கள்தான் சமைப்பதற்குத் தித்திப்பாகவும், பக்குவமாகவும் இருக்கும்.
கழுவுவதில் கவனம்!
காலிஃபிளவர் பயிரிடும்போது, பூச்சிகள் தாக்காமல் இருக்க அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பார்கள். எனவே, மற்ற காய்கறிகளைப் போல இதைச் சும்மா தண்ணீரில் கழுவினால் போதாது. பூக்களைத் தேவையான அளவில் நறுக்கிய பிறகு, நன்கு கொதிக்கிற வெந்நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பைப் போடுங்கள். அதில் நறுக்கிய துண்டுகளைப் போட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் தட்டு போட்டு மூடி வையுங்கள்.
இப்படிச் செய்வதால், இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் செத்து மிதந்துவிடும். அதேசமயம், மேலே படிந்திருக்கும் ரசாயன மருந்துகளும் நீங்கிவிடும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் அலசிவிட்டுச் சமைக்கலாம்.
உணவு ருசியாக இருந்தால் மட்டும் போதாது, அது ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். இனிமேல் கடைக்குச் செல்லும்போது, அவசரப்படாமல் மேலே சொன்ன விஷயங்களைக் கவனித்து காலிஃபிளவர் வாங்குங்கள்.