முதியோர் முன் உள்ள சவால்கள்

Elderly
Elderly
Published on

தற்போதைய சமூகச்சூழலில் முதியோர்கள் பெரும்பாலும் பிறரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அரசு தரப்பில் முதியோர் நலத்திட்டங்கள் பல உள்ளன. இருப்பினும், முதியோர்களிடையே இவைகளைப் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. குறிப்பாக அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.

முதுமையில் உடலும், மனமும் பலவீனமடைவதால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அதனால், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைவுகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. இவை மேலும் பல்வேறு நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமாய் அமைந்து விடுகின்றன. இச்சூழ்நிலையில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்.

முதியோர்களுக்கான மனநலப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களால் காட்டப்படும் அலட்சியமும், புறக்கணிப்புமே அவர்களின் மனரீதியான பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாகத் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, நமது குடும்பங்கள் முதியோர்கள் தொடர்பான விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த தவறியிருக்கின்றன. குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் முதியோர்களின் மாண்பு முற்றிலுமாகத் தெரியாமல் வளர்கின்றனர். இந்த சிறுவர்கள் குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்போது முதியோர்களை பெரும்பாலும் அவமானப்படுத்தப்படுகின்றனர். தற்போதைய கல்வி முறைகளும் முதியோர்களை கண்ணியமாக நடத்தவேண்டியதன் அவசியத்தை சொல்லித் தருவதில்லை.

சில நேரங்களில் மருத்துவமனைகளில் கூட கூட்டத்தோடு கூட்டமாகத்தான் இவர்களும் செல்ல வேண்டிய நிலை இப்போதும் இருக்கிறது. உதாரணமாக, ஒரு கட்டிடத்தில் இரண்டு லிஃப்ட் இருந்தால் ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்குமானதாக இருக்கலாம்.

வயது முதிர்வின் விளைவாக வரக்கூடிய உடல் ரீதியான நோய்கள், தனிமை, புறக்கணிப்பு, பிறரை சார்ந்திருக்க வேண்டிய நிலை, நெருங்கியவர்களின் மறைவு, தூக்கமின்மை என பல காரணங்களின் விளைவாக முதியோர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவைளுக்கு தீர்வு காண பெரும்பாலும் கவனம் கொடுக்கப்படுவதில்லை. சிகிச்சை பெறாத இப்பிரச்சினைகளின் விளைவாக அவர்களின் உடல் நலனும்,வாழ்க்கைத் தரமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும் முதுமையில் ஏற்படும் மறதி நோயின் காரணமாக குடும்பத்து பிற உறுப்பினர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

முதியவர்களின் தற்கொலைகளும் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. முதுமையில் தனிமை அதற்கு முக்கியமான காரணமாகச் கூறப்படுகிறது. முதியவர்களின் சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதன் விளைவாக அவர்களின் இந்த தனிமையுணர்ச்சியை நம்மால் குறைக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
முதியவர்கள் நலனுக்காக ஆய்வுகள் கூறும் அறிவுரைகள்!
Elderly

அவர்களுக்கென்று தனிப்பட்ட சமூக கூடங்களை உருவாக்கலாம். நகர்ப்புற, கிராமப்புறத் திட்டங்களில் அவர்களைப் பங்கேற்க வைக்கலாம். பல்வேறு சமூக நலத்திட்டங்களில் அவர்களை ஆக்கப்பூர்வமாக பங்களிக்கச் செய்து அவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே போல முதியோர்களுக்கான சமூக கூடல்களையும் அரசு சாரா நிறுவனங்கள் முறையாக திட்டமிட்டு நடத்தலாம்.

சமூக வலைதளங்களின் வழியாக முதியவர்களை நவீன டிஜிட்டல் உலகில் இணையச் செய்யலாம். முதியவர்களுக்கு ஏதுவான செயலிகளை உருவாக்கலாம். எளிமையான செலவுகள், வங்கி கணக்குகள் நிர்வாகம், சுகாதார சேவைகள், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுதல் போன்றவற்றிலெல்லாம் முதியவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான டிஜிட்டல் பங்களிப்பின் வழியாகப் பிறரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கலாம்.

அடுத்த சில வருடங்களில், குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கப்போகும் சூழலில், அவர்களுக்கான உலகை இப்போதிருந்தே திட்டமிட்டால்தான் அதை நம்மால் உருவாக்க முடியும். அனைத்து நாடுகளும், குறிப்பாக வளரும் நாடுகள் இதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றன. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் நாம் இன்னும் தொடங்கவில்லை என்பது நம்மை அச்சுறுத்துகிறது. இதற்குள் முதியோர்களின் மீதான வன்முறை மிக அதிகமாக நடக்கும் நம் நாட்டில் நாம் இன்னும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இப்போதிருந்தே முழுமூச்சுடன் செயல்பட்டால்தான் எதிர்காலத்தின் முதியவர்களின் நலனை பாதுகாக்க முடியும். எதிர்கால முதியவர்கள் வேறு யாருமல்ல, அது நாம்தான் என்று நாம் ஒவ்வொரும் உணரும்போது அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய அச்சம் நம் அனைவர் மனதிலும் அதிகரிக்கவே செய்கிறது.

இதையும் படியுங்கள்:
முதியவர்கள் முன் விரியும் டிஜிட்டல் உலகம்!
Elderly

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com