சாணக்கிய நீதி: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கணுமா? சாணக்கியர் கூறும் அட்வைஸ் இதுதான்!

Happiest marriage life
Chanakyar
Updated on

சாணக்கியர் இந்தியாவின் ராஜநீதியின் தந்தையாக அறியப்படுகிறார். அன்று அவர் அரசனுக்காக வகுத்த விதிகள் இன்று அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கிறது. இவரின் கூற்றுக்களை தற்போது பலரும் தங்களின் வாழ்க்கையின் வழிகாட்டுதலாக பின்பற்றி வருகின்றனர். அப்படி அவர் திருமண வாழ்க்கை குறித்து கூறிய சில குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் என்பது நமது வாழ்க்கையில் முக்கியமான விஷயமாகும். இந்த திருமண வாழ்க்கை எப்படி செல்கிறதோ அதுவே நமது எதிர்காலத்தை நிர்வகிக்கும். ஒரு திருமண வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதுவே அவர்களின் தினசரி வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக நகர்த்தும். பலரும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை பறிகொடுத்துவிட்டு கஷ்டம் என புலம்புவார்கள். வெவ்வேறு குணங்களை உடைய இரண்டு பேர் சேர்ந்து வாழ்க்கையை நகர்த்துவதுதான் இந்த வாழ்க்கை என்பதால் பல பிரச்னைகள் வருவது இயற்கைதான். அப்படி உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்ல சாணக்கியர் சொல்லும் சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

சாணக்கியரின் கூற்றுப்படி கணவன் மனைவி உறவில் மரியாதை மிகவும் அவசியம். வண்டி ஓடுவதற்கு இரண்டு சக்கரங்கள் தேவைப்படுவதுபோல திருமண உறவில் இருவரும் சமமானவர்களே. உங்கள் துணையின் கருத்துக்கள், எண்ணங்கள், உணர்வுகளுக்கு எப்போதும் மரியாதை கொடுங்கள். வயதில் பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் உறவுகளில் மரியாதை குறையக் கூடாது.

திருமண உறவில் இருக்கும் பெரிய எதிரி அகங்காரமாகும். நீ பெரியவரா, நான் பெரியவரா என்ற ஈகோ வளர ஆரம்பித்தால் உறவு சரியத் தொடங்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். கணவன் மனைவி இருவரும் தனி நபர்கள் அல்ல, மாறாக குழு உணர்வுடன் செயல்பட வேண்டும். எல்லா வேலைகளையும், எந்த ஒரு பெரிய முடிவுகளையும் சேர்ந்தே எடுக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுவரில் உள்ள கிறுக்கல்களைப் பார்த்து பதற வேண்டாம்... இதோ எளிமையான தீர்வு!
Happiest marriage life

திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு கணவன் மனைவி இருவரிடமும் பொறுமை இருப்பது மிகவும் அவசியம் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அது கஷ்டமான நேரமாக இருந்தாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து பொறுமையுடன் விட்டுகொடுக்க வேண்டும். விட்டுகொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்ற பழமொழியை முன்னிறுத்தி கணவன் - மனைவி வாழ வேண்டும்.

ஒவ்வொரு தம்பதிகளுக்கும் அவர்களுக்கென்று சில தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும். இந்த ரகசியங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமென்று சாணக்கியர் கூறுகிறார். கணவன் மனைவி தங்கள் தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயங்களை எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ, நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ ஒருபோதும் பகிர்ந்து கொள்வது தம்பதியிடையே விரிசலை ஏற்படுத்தும். ரகசியங்களை பாதுகாப்பது உறவின் பலத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கைக்கு நம்பிக்கை அவசியமாகும். சந்தேகமின்மை இருக்கக்கூடாது.

logo
Kalki Online
kalkionline.com