

முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளி என்பது ஒரு மாதத் திட்டமிடல். அப்பாவின் தீபாவளி போனஸ் மற்றும் மாதச் சம்பளத்தை கணக்கிட்டு, புதுத்துணி, பலகாரங்கள், பட்டாசு, பரிசு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பட்ஜெட் ஒதுக்கி கடைக்குப் போவதற்கு முன்பே, வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிடுவர். அது மட்டுமில்லை, தீபாவளி முடிந்த பிறகும் அடுத்தடுத்த மாத பராமரிப்புச் செலவுக்கு எந்தத் தட்டுப்பாடும் வராமல் பார்த்துக் கொள்வதும் அப்பாவின் பொறுப்பு.
ஆனால் இன்று திட்டமிடுதலும் இல்லை, பட்ஜெட்டும் இல்லை. புதுத்துணி வேண்டுமா? ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம். பட்சணம் வேண்டுமா? கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்றாகிவிட்டது.
அம்மாவின் மணம் மிகுந்த அடுக்களை
தீபாவளி என்றாலே விதவிதமான பலகாரங்களும் அவற்றின் மணமும் தான். சில வாரங்களுக்கு முன்பே என்னென்ன பலகாரங்கள் செய்ய வேண்டும்? யார் யாருக்கெல்லாம் என்னென்ன பிடிக்கும்? உறவு, நட்புகளுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும்? என்பதற்கான பட்டியலை மனதிற்குள் தயார் செய்து விடுவார்கள் அம்மாக்கள்.
தரமான அரிசியை வாங்கி, கழுவி, காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்து, பக்காவாக தயார் செய்வார்கள். அச்சு முறுக்கு சுற்ற, சீடை உருட்ட, அன்போடு கட்டளையிட்டு வேலை வாங்குவதில் அம்மாக்கள் சமர்த்து.
தீபாவளி பலகாரத் திட்டமிடுதல் என்பது தினமும் செய்கிற சமையல் அல்ல; குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க அம்மா செய்யும் பூஜை .
பட்டாசுப் பட்டியல் - ஒரு தனி கலை
பட்டாசு லிஸ்ட் போடுவது ஒரு தனி கலை. வாங்கிய பட்டாசுகளில் சாட்டை, பாம்பு மாத்திரை, கம்பி மத்தாப்பு, பென்சில், குருவி வெடி, ஊசி வெடி போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவிடம் கேட்டு, தீபாவளிக்கு முன்பே வெடிப்பதில் ஒரு தனி சுகம்.
அந்த விடியலின் அழகு
தீபாவளி அன்று காலை அப்பா பாய்லரில் வெந்நீர் போட, அம்மா எல்லார் தலையிலும் எண்ணெய் தேய்த்து விட்டு குளிக்கச் செய்வார்கள்.
இன்று? எப்போதும் போல் ஒன்பது மணிக்கு எழுந்து, ஷாம்பு வைத்து நிதானமாக குளித்து, கங்கா ஸ்நானத்துக்கு அர்த்தமே இல்லாம ஆகிவிட்டது.
தீபாவளி அன்று கோலம் போடுவது ஒரு தனி கோலாகலம். பக்கத்து வீட்டு அக்கா, எதிர்வீட்டு மாமி இவர்களிடமெல்லாம் பேசி அரட்டை அடித்து, வெள்ளைப் பேப்பரில் போட்டுவைத்த கோலத்தை, அடுத்த நாள் காலையில் வட்டமாக சாணி தெளித்து, முதல் ஆளாக எழுந்து கோலம் போடும் சந்தோஷம் இருந்தது.
இழைக்கோலத்திற்கு காவி, ரங்கோலிக்கு பொருத்தமான வண்ணப்பொடிகளை முன்பே வாங்கி, கொஞ்சம் வெள்ளை கோலமாவு கலந்து, தனித்தனி டப்பாக்களில் வைப்பதுன்னு ஒரே கலர்ஃபுல்லாக இருக்கும்.
விடியலில் எழுந்து, குளித்து, சாமி கும்பிட்டு, அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி, புதுத்துணி போட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்க ஓடிப் போவோம். எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்க்கை அழகாக இருந்த காலம் அது.
டெய்லரிடம் துணிகளை தைக்கக் கொடுத்து, இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று எண்ணிக் கொண்டிருந்த வரைக்கும் பண்டிகைகள் மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாகத்தான் இருந்தன. ஆனால் இன்று எல்லாம் ஆன்லைன்.
தொலைந்துபோன பகிர்தல் கலாச்சாரம்
பக்கத்து வீடு, எதிர் வீட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் தட்டில் அம்மா கொடுக்கிற பலகாரத்தை கொண்டு போய் கொடுத்து, தீபாவளி வாழ்த்துகள் சொல்லி, அவர்கள் கொடுப்பதை நம் வீட்டிற்கு கொண்டு வந்து அம்மாவிடம் கொடுப்பது. இப்படி மகிழ்ச்சியை கொண்டாடும் திருவிழாவாக தீபாவளி இருந்தது.
நமது கலாச்சாரம், அன்பு, அண்டை வீட்டாருடனான நல்லுறவு, பகிர்ந்து வாழும் குணம், அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுதல், பெரியவர்களை மதிக்கும் பண்பு - இவற்றை எளிதாக கற்றுக் கொடுத்தது அன்றைய தீபாவளி.
இன்று எல்லாம் யாரும் யார் வீட்டிற்கும் போய் தீபாவளி வாழ்த்துகள் சொல்வதும் கிடையாது. பலகாரத் தட்டு மாற்றிக்கொள்வதும் கிடையாது.
மொத்தத்தில்...
அன்றைய தீபாவளி, பக்கத்து வீடு, அடுத்த வீடு இணைந்து ஒட்டுமொத்த தெருவையே ஒரு குடும்பமாக மாற்றியது.
இன்றைய தீபாவளி, ஆன்லைனில் புதுத் துணிகள் வீட்டில் நோ பலகாரங்கள் - (கேட்டால் எண்ணெய் பலகாரங்கள் யாருக்கும் ஒத்துக்கொள்ளாது என்ற கதை வேறு.) ரொம்ப போனால் ரெடிமேடாக குலோப் ஜாமுன் பிறகு இருக்கவே இருக்கு டிவி. மன்னிக்கவும், டிவி கூட இப்போ எல்லாம் பார்ப்பது குறைந்துவிட்டது.
எல்லார் கையிலும் அலைபேசி
நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி மகிழ்ந்த காலம் போய், வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகப் பகிர்வுகளோடு தீபாவளி வாழ்த்துகள் என, இன்றைய தீபாவளி 365 நாளில் அதுவும் ஒரு நாள் என்ற அளவில் குறிப்பாக பெரு நகரங்களில் மிகவும் சுருங்கி விட்டது.
கிராமப்புறங்களில் கொஞ்சம் கொஞ்சம் இந்த விஷயங்கள் ஆங்காங்கே இருக்கின்றன என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
இனி அடுத்த தலைமுறையினருக்கு தீபாவளியின் தாத்பரியம், பட்டாசு வெடிக்கக் காரணம், புதுத்துணி அணிவது, பலகாரத்தட்டு, கங்கா ஸ்நானம் இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை ராசா, வாய்ப்பே இல்லை.
எனவே, தயவு செய்து பிள்ளைகளுக்கு தீபாவளியின் உண்மையான அர்த்தத்தை சொல்லிக் கொடுத்து, தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாடுங்கள் .
அன்று ஒரு நாள் நிச்சயம் அலைபேசிக்கு ஓய்வு கொடுங்கள்.
வாசகர்களுக்கு அழகான தீபாவளி நல்வாழ்த்துகள்.
வாசகர்கள் தங்கள் பொன்னான குழந்தைப் பருவ தீபாவளி நினைவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நம் பாரம்பரியப் பகிர்வு கலாச்சாரத்தின் மதிப்பை மீண்டும் உணர்வார்கள்.