ஐயோ! பறந்துவந்து நம் கழுத்தில் ஒட்டிக்கொள்ளும் கரப்பான் பூச்சி... விரட்டுவது எப்படி?

வீடுகளில் சுற்றித்திரியும் கரப்பான் பூச்சிகளால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
Cockroaches
Cockroaches
Published on

பலரது வீடுகளில் உள்ள சமையலறைகளில், அலமாரிகளில் அல்லது கவுண்டர் மேசைகளில் எதிர்பாராமல் தோன்றும் கரப்பான் பூச்சி (cockroach) பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு அதனுடனான முதல் அனுபவம், மறக்கமுடியாத, கிட்டத்தட்ட மோசமான அனுபவமாகவே இருந்திருக்கும். சில சமயங்களில் வீட்டின் சமையலறையில் இருந்த ஏதோவொரு பொருளை எடுத்தபோது, அதற்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த கரப்பான் பூச்சி பறந்துவந்து நம் கழுத்தில் ஒட்டிக்கொள்ளும். இதனால் குழந்தைகள் கரப்பான் பூச்சியை பார்த்தால் அலறுவார்கள்.

கரப்பான் பூச்சிகள் பொதுவாக அசுத்தமான இடங்கள், குப்பைகள் நிறைந்த இடங்கள், கழிவறை போன்ற இடங்களில் அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாகவே சிலருக்கு அதன் மீது ஓர் அருவருப்பு தோன்றிவிடுகிறது. கரப்பான் பூச்சிகளின் உமிழ்நீர் பல்வேறு நோய்கள் பரவுவதற்கும் காரணமாகும்.

கரப்பான் பூச்சியில் கிட்டத்தட்ட 1,300 வகைகள் உள்ளன. இவற்றில் 30 வகைகள் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்திற்காக மனிதர்களைச் சார்ந்து உள்ளன.

மீதமுள்ளவை காடுகள் போன்ற மனிதரற்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
கரப்பான் பூச்சிகளை கண்ணில் படாமல் விரட்ட சில எளிய ஆலோசனைகள்!
Cockroaches

வீடுகளில் சுற்றித்திரியும் கரப்பான் பூச்சிகளால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுவது உண்டு. இருப்பினும் மலேரியா போன்று நேரடியாக எந்த நோயையும் அவை மனிதர்களுக்கு ஏற்படுத்துவதில்லை. அதேசமயம், வீடுகளில் சுற்றித்திரியும் கரப்பான் பூச்சிகளால் டைபாய்டு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

ஆனால், கரப்பான் பூச்சிகள் மனிதர்களுக்கு நேரடியாக டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்துவது இல்லை. அவை உண்ணும் அழுகக்கூடிய பொருட்களில் நுண்கிருமிகள் அதிகளவில் இருக்கும். இவற்றை உண்டுவிட்டு நாம் உண்ணும் உணவுகள் மீது அவை நடக்கும்போது, இந்த நுண்கிருமிகள் நமது உணவில் கலந்து நமக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது, இவை கழிவுகளில் அமர்ந்துவிட்டு வீடுகளில் உணவு, பாத்திரங்கள் மற்றும் சமையல் அறை சாதனங்களில் ஊர்ந்து செல்லும் போது கிருமிகளை விட்டுச்செல்கின்றன.

கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்ற இந்த அசுத்தமான உணவுகள் அல்லது பானங்களை உட்கொள்ளும்போது மற்றும் பாத்திரங்களில் உணவு உட்கொள்ளும் போது இந்த கிருமி உடலில் புகுந்து டைபாய்டு காய்ச்சல், காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிடுகிறது.

கரப்பான் பூச்சிகள் கழிவறைகளில் வாழ்பவை. எளிதாக சால்மோனெல்லா டைஃபி (Salmonella Typhi) என்ற பாக்டீரியாவை கழிவறைகளில் இருந்து வீட்டுக்குள் கொண்டு வருகின்றன. உணவு மற்றும் உணவு பாத்திரங்களில் ஊர்ந்து சென்று கிருமியை பரப்பி விடுகின்றன. இதனால் காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற டைபாய்டு அறிகுறிகள் ஏற்படலாம்.

அவற்றுக்கான உணவும் ஈரப்பதமான சூழலும் இருக்கும் இடங்களில் கரப்பான் பூச்சிகள் செழித்துப் பெருகுகின்றன. கரப்பான் பூச்சிகளை ஒழிக்க உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீர் பாத்திரங்களை மூடிய நிலையில் வைத்திருப்பதும், சமையல் கழிவு மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதும் அவசியமான ஒன்று. வீட்டில் குப்பை அதிகமாகச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கழிப்பறைகள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.

சுவரில் உள்ள சிறு இடைவெளிகள், குழாய்கள் மற்றும் சுவர்களில் உள்ள துளைகளை அடைத்து விட வேண்டும். அட்டைப் பெட்டிகள் மற்றும் புத்தகங்களை அடிக்கடி சுத்தம் செய்து வைக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கரப்பான் பூச்சி கொல்லிகளை அவ்வப்போது சுற்றுப்புறங்களில் தெளித்து விடுவதும் கட்டுப்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி... உங்க வீட்டுக்குள்ள வர்றதுக்கு இதுதான் காரணம்! விரட்டுவது எப்படி?
Cockroaches

கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள் வந்த பிறகு, நமக்கும் கேடாகக்கூடிய வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக, வரும் முன்பே அவற்றைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com