
வீடுகளில் கரப்பான் பூச்சிகள் சாதாரணமாகக் காணப்படுபவை. இவை வீட்டிற்குள் கெட்ட பாக்டீரியாக்களை பரவச் செய்யும். உடலுக்குக் ஆரோக்கியக் குறைபாடுகளை உண்டுபண்ணக்கூடிய ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். இப்பூச்சிகளை உங்கள் சமையலறை மற்றும் குளியல் அறைகளிலிருந்து விரட்ட சில எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. அழுக்குப் படிந்த மற்றும் ஈரமான, சுகாதாரமற்ற தரைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள் பெருகிப் பரவும். எனவே, உங்கள் சமையலறை, சாப்பாட்டுக் கூடம் மற்றும் குளியலறைகளை தினமும் நன்கு சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். காய்கறிகளை நறுக்கப் பயன்படுத்தும் பரப்பு (Counter)களை அவ்வப்போது சுத்தப்படுத்துவதும், தரையை தினமும் துடைப்பதும், தேவையற்ற உணவுப் பொருள்கள் இரவில் ஆங்காங்கே சிதறிக் கிடக்காமல் அப்புறப்படுத்தி விடுவதும் கரப்பான் பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்க உதவும். தண்ணீர் ஒழுகி தரையில் தேங்கி நிற்கும் சூழலில், அழுக்குகள் அதனுடன் சேர்ந்து சுகாதாரமற்ற நிலைமையை உருவாக்கும். எனவே, தண்ணீர் பிடித்து சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கோளாறு ஏற்படுமாயின் உடனுக்குடன் அதை சரி செய்வது அவசியம்.
2. பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரையை சம அளவில் கலந்து, அதை சமையலறையின் மூலைகள், சிங்க்கின் அடி பாகம் மற்றும் தளப் பலகை (Base Board)களின் ஓரங்களிலும் தூவி விட்டால் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் குறையும். சர்க்கரை, கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும் குணமுடையது. சர்க்கரையை கரப்பான் உண்ணும்போது அதனுடன் சேர்ந்து வயிற்றுக்குள் செல்லும் பேக்கிங் சோடா கரப்பானை உயிரிழக்கச் செய்துவிடும்.
3. பிரிஞ்சி இலை (Bay Leaf)களிலிருந்து வரும் கடுமையான வாசனை கரப்பான் பூச்சிகளை தூர ஓடிவிடச் செய்யும். காய்ந்த பிரிஞ்சி இலைகளை சிங்க் அடியில், அலமாரிகளில் மற்றும் இழுப்பறை (Drawers)களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் அவ்விடங்களுக்கு வந்து உங்களைப் பயமுறுத்தும் இம்சை இருக்காது. வாரம் ஒரு முறை பழைய இலைகளை மாற்றி புது இலைகளைப் போட்டு வைப்பது கரப்பான் பூச்சிகளின் வரவை தொடர்ந்து கட்டுப்படுத்த உதவும்.
4. கரப்பான் பூச்சிகளைக் கொல்வதற்கு போரிக் ஆசிட் சிறந்ததொரு மருந்தாகும். போரிக் ஆசிட் பவுடரை சிங்க் அடியில் மற்றும் சமையலறை சாதனங்களுக்கருகில் சிறிது தூவி வைத்தால், அவ்விடங்களில் கரப்பான்பூச்சி வந்து ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு குறையும். இம்முறையைப் பின்பற்றும்போது குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
5. பெப்பர்மின்ட், டீ ட்ரீ (Tea Tree) ஆயில், யூகலிப்டஸ் ஆயில் போன்றவற்றில் 10 முதல் 15 சொட்டுக்கள் எடுத்து தண்ணீரில் கலந்து, அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, சிங்க் அடியில், ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளின் பின் பகுதிகளில் தெளித்து வைத்து விட்டால் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் குறையும்.
6. ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளின் சட்டங்களுக்கும் சுவருக்கும் இடையே உள்ள இடைவெளி, தண்ணீர் குழாய்களை சுற்றியுள்ள இடத்தில் சுவற்றில் இருக்கும் வெடிப்புகள் போன்றவற்றை சிமெண்டை கரைத்து அடைத்து விட்டால் கரப்பான் பூச்சி வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தலாம்.
7. உங்கள் வீட்டு குப்பைக் கூடைகள் நிரம்பி வழியும் வரை வைத்திருக்காமல் அன்றாடம் குப்பைகளைக் கொட்டிவிட்டு கூடையை நன்கு கழுவி வைப்பது அவசியம். அன்றாட உபயோகத்திற்குத் தேவைப்படாத காலி அட்டை டப்பாக்கள், செய்தித்தாள்கள், மீந்து கிடக்கும் பெயிண்ட், சிமெண்ட் போன்றவற்றை பின்புற வராண்டாவில் மலை போல் குவித்து வைக்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்திவிடுவது நலம். இவற்றைத் தங்களின் நிரந்தரமான தங்குமிடமாக கரப்பான் பூச்சிகள் வைத்துக்கொள்வதைத் தடுத்து நிறுத்தலாம். இதற்கு மேலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போனால், தொழில் முறை வல்லுநர்களின் உதவியை நாடலாம்.