
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் சிவப்பு, நீலம், மஞ்சள் என பல்வேறு நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்த நிறம் எதைக் குறிக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா..?
தொடர்ந்து நடைபெற்று வரும் போரின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காரணமாக எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது மேலும் தட்டுபாடுமிருக்கிறது. சிலிண்டர் விநியோகத்தை தடையின்றி சப்ளை செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்ட போதிலும், தொழிற் சாலைகளுக்கான சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் பல்வேறு நிறங்களில் வருகின்றன. அவைகளை பயன்படுத்தப்படும் நோக்கத்திற்கேற்ப எல்பிஜி சிலிண்டர்களை இவ்வாறு வெவ்வேறு நிறங்களில் பிரித்திருக்கிறார்கள்.
சேமிக்கப்படும் வாயுவின் வகையைப் பொறுத்து (எல்பிஜி, புரோபேன் அல்லது பியூட்டேன் உட்பட) அவைகளின் நிறம் மாறுபடலாம்.
சிவப்பு நிற எல்பிஜி சிலிண்டர் மிகவும் பொதுவானது, ஏனெனில் இது சமையலுக்காக வீடுகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. இதில் மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி உள்ளது. சிவப்பு நிறம் சிலிண்டரின் பாதுகாப்பு அம்சத்தை எடுத்துக் காட்டுகிறது; இந்த சிவப்பு நிறம், எல்பிஜி அதிக தீப்பற்றக் கூடியது என்பதையும், அதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்பதையும் குறிக்கிறது. வணிக ரீதியான சிலிண்டர்களுடன் ஒப்பிடும்போது, இந்த சிவப்பு சிலிண்டர்கள் அளவில் சிறியவைகளாக திகழ்கின்றன.
நீல நிற எல்பிஜி சிலிண்டர்கள் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிலிண்டர்கள் பொதுவாக உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற உணவு வழங்கும் நிறுவனங்களில் காணப்படுகின்றன. இவற்றில் மானியம் பெறாத எல்பிஜி உள்ளது மற்றும் இவை வீட்டு உபயோக சிலிண்டர்களை விட விலை உயர்ந்தவை.
வெள்ளை நிற சிலிண்டர்கள் மருத்துவத் துறையில் பயன்படுத்தப் படுகின்றன. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு அத்தியாவசியமான ஆக்ஸிஜனைச் சேமிக்க இந்த சிலிண்டர்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை நிர்வகிக்கும் விதிமுறைகள் கடுமையானவை. விதிமுறைகளின்படி, இந்த சிலிண்டர்கள் சமையலுக்கு ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை, மேலும் மருத்துவம் அல்லது அது தொடர்பான பயன்பாடுகளுக்கு மட்டுமே கண்டிப்பாக இந்த சிலிண்டர்களை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.
இந்த மஞ்சள் நிற சிலிண்டர்கள், தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தி அலகுகளிலும் தொழில்துறை அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சேமிக்கப்படும் எல்.பி.ஜி, புரொப்பேன் அல்லது பியூட்டேன் உள்ளிட்ட வாயுவின் வகையைப் பொறுத்து இதன் நிறம் மாறுபடலாம். இந்த சிலிண்டர்கள் பற்ற வைத்தல், வெப்பமூட்டுதல் மற்றும் பிற தொழில்துறை செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இவற்றைக் கையாளுவதற்கும் சேமிப்பதற்கும் குறிப்பிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன.
சாம்பல் நிற சிலிண்டர்கள் பொதுவாக கார்பன் டை ஆக்சைடைக் கொண்டிருக்கின்றன. இவை தீயணைப்பான்களிலும் குளிர்பானம் தயாரிக்கும் தொழிலிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உயர் அழுத்த உருளைகள் மற்றும் மென் எஃகு அல்லது அலுமினியத்தால் ஆனவை.