வண்ணங்கள் நம் வாழ்க்கையைச் சிறப்பாக்க வல்லது என்பதை நமது முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே தான் வண்ணங்களை மன சாந்தி தருவதற்கும், வெற்றி பெறுவதற்கும், வலிமையைக் கூட்டுவதற்கும், ஆயுளை நீட்டிக்கவும் ஆலயங்களில் உரிய இடத்தில் உரிய முறையில் காட்சிப்படுத்தினர்.
வண்ணங்களுக்குச் சக்தி உண்டு என்பதை நீங்களே சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
நீல நிறமாக உள்ள ஒரு பொருளை சில நிமிடங்கள் பாருங்கள். அதே அளவுள்ள ஒரு சிவப்பு நிறப் பொருளை இப்போது காணுங்கள். ஒரே இடத்திலிருந்து ஒரே தூரத்தில் இந்தப் பார்வை இருக்க வேண்டும். சிவப்புப் பொருளை உற்றுப் பாருங்கள். பின்னர் உங்கள் பார்வையை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுங்கள். உங்கள் கண்கள் இந்த வண்ண மாற்றத்திற்கு எப்படி தம்மை தயார் செய்து கொள்கின்றன என்பதை நீங்கள் உணர்வீர்கள். அது மட்டுமல்ல, சிவப்புப் பொருளானது இப்போது உங்கள் அருகில் இருப்பதாக உணர்வீர்கள். அதிசயமான உண்மை இது!
இன்னொரு பிரமிக்க வைக்கும் சுலபமான சோதனை ஒன்றும் உண்டு....
1. நல்ல வெள்ளை வண்ண ஆடையை ஒருவரை அணியச் சொல்லுங்கள். அவரது இரத்த அழுத்தத்தை நீங்கள் இப்போது அளக்கப் போகிறீர்கள். நன்றாக அளந்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது அவரை ஒரு சிவப்பு விளக்கு அருகே ஐந்து நிமிடங்கள் இருக்கச் செய்யுங்கள். இப்போது இரத்த அழுத்த அளவை எடுங்கள். அது சற்று கூடியிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
3. இப்போது அவரை ஒரு நீல வண்ண விளக்கு முன்னர் ஐந்து நிமிடம் இருக்கச் செய்யுங்கள். இப்போது இரத்த அழுத்த அளவைத் துல்லியமாக எடுங்கள். அந்த அளவை முதன் முதலில் எடுத்த ஒரிஜினல் அளவுடன் ஒப்பிட்டு பாருங்கள். அது குறைந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.
படுக்கை அறையில் நீல வண்ணமே இருக்க வேண்டும் என்று பெரியோர் சொல்வதன் காரணம் இப்போது புரியும். நல்ல அமைதியான நிலையில் ஆழ்ந்த உறக்கத்தை நீல வண்ணத்தினால் நீங்கள் பெறுவீர்கள்! செய்து பாருங்கள், உண்மை தானே விளங்கும்.
இப்போது கலர் தெரபி என்னும் வண்ணச் சிகிச்சை நிபுணர்கள் தங்கள் சிகிச்சை முறையை வைத்து, உடல் ஆற்றலை இழந்திருப்போரை மீண்டும் அந்த ஆற்றலைப் பெறச் செய்கிறார்கள். எக்ஸிமா, மைக்ரேன், ஆஸ்த்மா உள்ளிட்ட வியாதிகளையும் குணப்படுத்துகிறார்கள். இவை வண்ணச் சிகிச்சை நிபுணர்கள் கூறும் பயனுள்ள டிப்ஸ் - உதவிக் குறிப்புகள்...
*ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் மஞ்சள் வண்ணத்தை உபயோகப்படுத்த வேண்டும். .
*டர்க்காய்ஸ் எனப்படும் பச்சை கலந்த நீல நிறம் தசைகளை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
அது மட்டுமல்ல, மனிதர்களின் உணர்ச்சியை மேம்படுத்த வல்லவை வண்ணங்கள்.
*எடுத்துக்காட்டாக வயலட்டைச் சொல்லலாம். இதைப் பயன்படுத்தினால் சுய மரியாதை கூடும். சுய மதிப்பும் கூடும்.
*வீட்டிலே ஒரு அறைக்கு சிவப்பு வண்ணம் அடித்துப் பாருங்கள். அந்த அறை சிறியதாகத் தோன்றும். நீலத்தை அடித்துப் பாருங்கள், அதே அறை பெரிதாகத் தோன்றும்.
இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வண்ணங்களின் பங்கு உண்டு. வண்ணங்களை நன்கு உணர்ந்து பயன்படுத்தினால் அவை நல்ல விதமாக வாழ்க்கையை மாற்றும்!