
சென்னை முதலான பெருநகரங்களில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து தங்கி பணிசெய்யும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். நகர்புற ஹோட்டல்களில் பல காரணங்களினால் உணவுகளின் விலை மிக அதிகமாக உள்ளது. தினமும் ஹோட்டலில் மூன்று வேளையும் சாப்பிட்டால் ஒரு பெரும் தொகை செலவாகிவிடும். சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கவே முடியாது. மேலும் தினமும் ஹோட்டல்களில் சாப்பிட்டால் உடல்நலமும் நிச்சயம் கெடும்.
தற்காலத்தில் தொலைக்காட்சி சேனல்களில் பல ஓட்டல்களின் கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்யும் காட்சிகளை நாம் அவ்வப்போது காண்கிறோம். செய்தித்தாள்களிலும் படிக்கிறோம். ஓட்டல்களில் சாப்பிட்டு உடல்நலம் கெட்டு நமக்குத் தெரிந்த பலர் மருத்துவத்திற்கு பல்லாயிரம் ரூபாய் செலவழிப்பதையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். ஏன் நமக்கே கூட இந்த நிலை சில சமயங்களில் ஏற்பட்டிருக்கலாம்.
சமையல் என்பது ஆச்சரியமான கலை என்பதை இன்னும் பலர் உணராதவர்களாகவே உள்ளனர். அதை ரசித்துச் செய்பவர்கள் தற்போது பெருகிக் கொண்டே வருகின்றனர். நமக்கான உணவை நம்மைவிட சிறப்பாக ஆரோக்கியமாக யாரால் சமைக்க முடியும்? இதனால் உடல்நலமும் சிறப்பாக இருக்கும். ஒரு பெரும் தொகையினை மாதாமாதம் நம்மால் சேமிக்கவும் முடியும்.
நாம் சமைத்த உணவினை பிறருக்குக் கொடுத்து அதை அவர்கள் சாப்பிட்டு “நீங்க சமைச்சது ரொம்ப பிரமாதமா இருக்கே” என்று நம்மைப் பாராட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
சமையல் என்பது பலர் நினைப்பதைப்போல அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சமைக்கலாம். சமைக்க சமைக்க அனுபவம் ஏற்பட்டு நாள்தோறும் சுவை கூடுவதை கண்கூடாக உணரலாம்.
முன்பெல்லாம் சமையல் புத்தகங்களை கையில் வைத்து சமைக்கக் கற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் இன்றைய கணிணி யுகத்தில் யுடியூப் சேனல்களின் வாயிலாக ஆயிரக்கணக்கான உணவுகளை நம்மால் சுவையாக எந்த சிரமமும் இன்றி சமைக்க முடிகிறது. தேவை ஆர்வம் மட்டுமே. இதனால் மாதா செலவும் குறையும். போதும் என்கிற அளவிற்கு திருப்திகரமாக சாப்பிடலாம்.
தற்காலத்தில் அடுப்பே இல்லாமல் சமைக்கும் முறைகளும் அறிமுகமாகி விட்டன. சமையல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலையாக தற்போது கவனிக்கப்படுகிறது.
நீங்கள் சமைக்க விரும்பினால் அவசியத் தேவையான சில அவசியமான சமையல் பாத்திரங்கள் இருந்தால் போதும். ஒரு இன்டக்க்ஷன் ஸ்டவ், மூன்று லிட்டர் குக்கர், ஐந்து கரண்டிகள், ஒரு கடாய், ஒரு தவா, ஐந்து சிறிய பாத்திரங்கள். மூடிவைக்க மற்றும் சாப்பிட சில தட்டுகள் இவ்வளவு இருந்தால் போதும். சமைக்கத் தொடங்கிவிடலாம்.
சமையலுக்குத் தேவையான அத்தியவசியமான பொருட்களான மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம்மசாலா, கடுகு, வெந்தயம், சீரகம், பருப்புகள் முதலானவற்றைப் போட்டு வைக்க பத்து சிறிய டப்பாக்கள் இருந்தால் போதும். அரிசியைப் போட்டு வைக்க சற்று பெரிய டப்பா இருந்தால் போதும். இவை இருந்தால் நீங்கள் அட்டகாசமான உணவுகளைச் சமைத்து அனைவரையும் அசத்தலாம்.
இப்போது நீங்களே மிகச்சுலபமாக சமைத்து மகிழ எல்லோருக்கும் பிடித்த சன்னா கிரேவியை சொல்லித் தருகிறேன். செய்து பாருங்கள்.
தற்போது பல இடங்களிலும் வேகவைத்த சன்னா வெள்ளைக்கடலை சுண்டல் விற்பனைக்கு கிடைக்கிறது. இரண்டு பொட்டலங்களை வாங்கிக் கொள்ளுங்கள்.
இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி, நான்கு பூண்டுப் பற்கள் ஆகியவற்றை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இரண்டு கரண்டி எண்ணெயை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகைப் போட்டு சற்று பொரிந்ததும் பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு முதலானவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கி பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சிறிது உப்பு முதலானவற்றைப் போட்டு நன்றாக வதக்கி அனைத்தும் ஒன்றாகக் கலந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வையுங்கள்.
பின்பு ஏற்கெனவே வேகவைத்து நீங்கள் வாங்கியுற்ற சன்னா சுண்டலைக் கொட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக சுண்டியதும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் போட்டு இறக்கி வையுங்கள். சன்னா கிரேவி ரெடி.
சப்பாத்தி, பிரட், தோசை, இட்லி முதலான டிபன்களோடு தொட்டு சாப்பிட இந்த கிரேவி பிரமாதமாக இருக்கும். தயிர் சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். ட்ரை அண்டு டேஸ்ட். திஸ் ஈஸ் ஆல்வேஸ் பெஸ்ட்.